அமில தாக்குதல் அஞ்சலி / கண்டனம் மற்றும் பேரணி அறிவிப்பு

Wednesday, February 27th, 2013 @ 8:08PM

அமில தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த சகோதரி வித்யாவின் குடும்பத்தினருக்கு லோக் சத்தா கட்சி தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது. அமில தாக்குதலுக்கு உள்ளான வினோதினியின் இழப்பின் துயரத்தில் இருந்து நாம் மீள்வதற்குள் நடந்த சம்பவம் இது. எங்கே இது போன்ற துர்சம்பவங்கள் தொடருமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்தும் விதமாக இந்த தாக்குதல் அமைகிறது. முக்கியமாக படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் மனஉறுதியை குலைக்கிறது.

அமில தாக்குதல்களை குறைக்க அமிலம் சமூக விரோதிகளுக்கு எளிதில் கிடைக்காத வண்ணம் கட்டுப்படுத்த வேண்டும். இப்போது அமிலம் பொது சந்தையில் வெகு எளிதாக கிடைகிறது. அமில விற்பனையில் உரிமம் ஏற்படுத்தி நிஜமான தேவை உள்ளோர் மட்டுமே வாங்கும்படி செய்யலாம். மேலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் அமிலத்தை வைத்து செய்யப்பட்டால், அது முறையான உரிமம் இன்றி வாங்கப்பட்டிருக்குமாயின், அதை விற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். அமில உற்பத்தி, பங்கீடு, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.

இது தவிர அமில தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்பட்டு அவை உற்பத்தி செய்யும் அமிலம் சரியான முறையில் தான் பயன்படுத்தப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும். அவை சேமித்து வைக்கபட்டிருக்கும் இடம், விற்பனை செய்யப்படும் இடம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

அமில தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதி ஆணையத்தின் 226-வது அறிக்கை மற்றும் வர்மா ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகள சட்டமாக்க வேண்டும். அதில் கூறப்பட்டிருப்பதை போல 326A மற்றும் 326B ஆகிய சட்டங்கள் நிறைவேற்ற பட்டு அமில தாக்குதலுக்கான தண்டனையை அதிகரிக்கவேண்டும்.

அமில தாக்குதலுக்கு உள்ளவோர் தன் வாழ்நாள் முழுவதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கென வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு அவர்களின் மருத்துவ செலவு, மறுவாழ்வு மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவற்றை இலவசமாக மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.

இதே வேளையில் இது போன்ற சம்பவங்கள் திரும்ப நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இதற்கான அடிப்படை காரணம் நம் சமுதாயம் பெண்களை காட்சிப்பொருளாய் கருதுவதுதான். மகளிருக்கான சம உரிமையும் அவர்களின் மேம்பாடுமே சமுதாயத்தின் இந்த எண்ணத்தை மாற்றும்.

அமில விற்பனையை அரசாங்கம் கட்டுபடுத்த கோரியும், அமில தாக்குதல் வழுக்குகளை துரிதப்படுத்த, தண்டனையை அதிகரிக்க 326A மற்றும் 326B சட்டங்களை இயற்றக் கோரியும், மகளிர் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் லோக் சத்தா கட்சி, மார்ச் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 முதல் 8 மணி வரை மெரினா கடற்கரையில் பேரணி நடத்துகிறது. தவறாது கலந்து கொள்ளவும்.

இது போன்ற இன்னொரு சம்பவம் நிகழாமல் தடுப்பதே வினோதினி, வித்யா போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் செய்யும் நிஜமான அஞ்சலி.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: