லைஃப் ஆஃப் பை

Wednesday, February 20th, 2013 @ 10:27PM

இலவசங்களைப் பற்றிய கதை ஒன்று உண்டு வாடிக்கையாளர் ஒருவர் குடை வாங்க கடைக்குச் சென்றார். குடையின் விலை 100 என்ற சொல்லப்பட்டது. 50 ரூபாய்க்கு பேரம் பேசினார். முதலில் மறுத்த கடைக் காரர் பிறகு ஒப்புக்கொண்டார். உடனே இவர் 25 ரூபாய்க்கு கேட்டார். கோபமடைந்த கடைக்காரர் எப்படியோ ஒத்துக்கொண்டார். மீண்டும் 12.50.க்கு வாடிக்கையாளர் கேட்க வெறுத்துப் போன கடைக்காரர் இலவசமாகவே அந்த குடையை கொடுக்க முன் வந்தார். வாடிக்கையாளர் அப்படின்னா 2 கொடுங்க என்றார்.

2009 நாடாளுமன்ற தேர்தல் ஆண்டில் அன்றைய தி.மு.க. அரசால் ரேசன் அட்டை உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றுமொரு இலவச திட்டம் – பொங்கல் பை. அடுத்த ஆண்டு தேர்தல் ஏதும் இல்லாத பொழுது அதே பை 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்த 2011 சட்டமன்ற தேர்தல் ஆண்டில் மீண்டும் இலவசமாக வழங்கப்பட்டது பை.

சென்ற ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் வழங்கப்படாத பொங்கல் பை இப்பொழுது ஒரு புதிய பரிணாமத்தில் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் வைக்க தேவையான பொருட்களோடு சிறப்பு பரிசாக ரூ. 100ம் சேர்த்து வழங்கப்பட்டது. ரேசன் கடையில் போட்டி ஏற்பட்ட சூழலால் பொங்கல் பரிசு என்ற அறிவித்தார்கள் போலும். அந்த 100 ரூபாய் எங்கு சென்றது என்பது ஒரு புறம், அடுத்த ஆண்டு இதே தொகை 200 ஆக உயர்த்தப்படும் என்பது நிதர்சனம்.இலவசங்களின் கதைதான் இங்கும் தொடர்கிறது. ஆனால் இங்கு வாடிக்கையாளர் கேட்காமலேயே ‘ கட்டணமில்லா பொருள்’ என்றும் ‘இலவசம்‘ என்றும், நம் பணம் ‘பிச்சை’ கொடுக்கப்படுகிறது. நாமும் தன்மானம் மறந்து பிச்சை பெற பழகிவருகிறோம்.

பொங்கல் பை வழங்கப்பட்ட இதே 5 ஆண்டுகளில் நாம் கண்ட வளர்ச்சி என்ன என்பதும் நமக்கு தெரியும். விவசாய விளை நிலங்களை நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம். நீர்நிலைகளை தொடர்ந்து இழந்து வருகிறோம். அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களையும் இழக்கிறோம். மனித உயிரின் மதிப்பு தொடர்ந்து மலிவாகிறது. இன்னம் எத்தனை எத்தனையோ தீர்க்கக் கூடிய பிரச்னைகள். நம் முன் இருக்கும் கேள்வி இது தான்- இன்றைய வருமானத்திற்காக நாம் தொடர்ந்து தன் மானம் இழப்போமா அல்லது வருங்காலம் குறித்து சிந்திப்போமா…?

Categories: Article, Feb 2013, Whistle, தலையங்கம்

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: