வித்யாவை கொன்றது யார்?

Thursday, February 28th, 2013 @ 3:08AM

சில வலிகள் நம் நெஞ்சை விட்டு அகல்வதில்லை. வலி அகலும் பரிகாரமும் நமக்கு தெரிவதில்லை. வலியின் சுமை அதிகமானதால் இந்த பதிவும், அதையொட்டிய நிகழ்வுகளும். ஒரு வலியின் சுமையை கொஞ்சம் இறக்கி வைக்கும் முயற்சி இது.

எந்த நேரம் கிடைத்தாலும் என்னுடைய விரல்கள் அழுத்துவது தொலைக்காட்சி செய்தி சேனல்கள்தான். அப்படித்தான் இந்த ஞாயிற்றுக் கிழமையும் – பார்த்த செய்தி என் மனதை  ரணமாக்கியது – ஆசிட் வீச்சிற்கு இரண்டாவது பலி. அமில வீச்சில் வித்யா உயிரழப்பு. செய்தியின் விவரம், வீரியம் தெரியாதவர்க்கு – வித்யா ஒரு கணினி மையத்தில் வேலை செய்த பொழுது நெடு நாட்களாக அவர் மீது விருப்பம் கொண்ட ஒரு மிருகம் ஆள் யாரும் இல்லாத சமயம் மறைத்து வைத்திருந்து அமிலம் எடுத்து வீச, தப்பிக்க முயன்று அவர் முகத்தை திருப்ப, அவர் முதுகின் மீதும், தரையிலும் அமிலம் பட்டது. வெறிகொண்ட அந்த மிருகம் வித்யாவை கீழே  தள்ளி அவர் முகத்தை தரையில் விழுந்த அமிலத்தில் தேய்த்தது. அடுத்ததாக மறைத்து வைத்திருந்த கத்தியை அது வெளியே எடுக்கு முன் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தார் அந்த மிருகத்தை பிடித்தனர். வித்யாவின் அமிலம் பட்டு கிழிந்த போன உடைகளுக்கு மாற்று சேலை தந்து பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது செய்தி, நடந்தது காந்தி நினைவு நாள் அன்று.

அந்த வித்யா பிப்.24, ஞாயிறு அதிகாலை இறந்து போனார். சொல்ல முடியாத வலி ஒன்று என்னை சூழ்ந்துகொண்டது, ஏதாவது செய்ய வேண்டும். காலையில் கட்சி நண்பர்களுடன் பேசினோம். ஏதாவது செய்ய வேண்டும். முதலில் வித்யாவின் இறுதிச் சடங்கிற்கு செல்வோம். வித்யாவின் வீட்டார் உடலை வாங்க மறுப்பதாக மாலை 4 மணி வரை செய்திகள் தொடர்ந்து வந்தன. 2 மணி நேர `பவர் கட்’ பிறகு நான் பார்த்த செய்தி – வித்யாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பது. 4 மணிக்கு வாங்கப்பட்ட உடல் 6 மணிக்கெல்லாம் மண்ணுக்குள் புதைந்தது. இறுதி சடங்கில் நம்மால் பங்கேற்க முடியவில்லை. வலியின் சுமை. ஏதாவது செய்ய வேண்டும்.

அடுத்த நாள் வித்யாவின் வீட்டிற்கு சென்றோம். வெறும் 50 ரூபாய்க்கு மலிவு விலையில் கிடைக்கும் அமிலம் அவளை கொன்றது ஒரு தரம்தான். அதன் பிறகு அடுத்த 25 நாட்கள் இறக்கும் வரை அவர் அனுபவித்த துன்பங்கள் – ஒவ்வொரு நொடியும் அவர் அனுபவித்த வேதனை – இறக்கும் தருவாயிலும் அவரின் நிம்மதியற்ற தருணங்கள் இவை.

தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வித்யாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அமில வீச்சிற்கு என்ன முதலுதவி என்பது எந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கும் சொல்லித் தரப்படவில்லை. அவரை அழைத்து சென்றவர்களுக்கும் வீசப்பட்டது எவ்வளவு செறிவூட்டப்பட்ட அமிலம் என்பது தெரிந்திருக்கவில்லை. (ஊத்தப்பட்டது ஏதோ நாம் வீட்டில் உபயோகிக்கும் அமிலம் என நினைத்தனர்). தனியார் மருத்துவமனை முதலுதவி என்ற பெயரில் அவர்களுக்கு தெரிந்தது செய்து, தீ காயங்களுக்கு பெயர் போன கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லியுள்ளனர்.

தீ, விபத்து, பாம்பு கடி,அமில வீச்சு போன்ற ஆபத்துகளில் இருந்து ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட “Golden Hour”  எனப்படும் அந்த முதல் சில மணி நேரங்கள் மிக மிக முக்கியம். கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வித்யாவிற்கு, தனியார் மருத்துவமனையிலிருந்து அழைத்து வரப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடங்க எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் எவ்வளவு தெரியுமா..? – 3 மணி நேரம். அழைத்து சென்ற வீட்டாருக்கு ஊற்றப்பட்ட அமிலத்தின் வீரியம் தெரிந்திருக்கவில்லை. அரசு மருத்துவமனைக்கு..??????????

அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) எப்பொழுது மாற்றப்பட்டார் என்பது தெரியுமா..? அவர் அனுமதிக்கப்பட்ட 21வது நாளில், நிச்சயம் இறந்துவிடுவார் என தெரிந்த பிறகு, அவர் இறப்பதற்கு வெறும் 4 நாட்களுக்கு முன். லேசான வயிற்று வலி, மிதமான மூச்சி திணறலுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவம் பார்க்கும் அதே சம காலத்தில் கொடூரமான அமில வீச்சிற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணிற்கு வழங்கப்பட்ட ‘தீவிர’ சிகிச்சை இது.

கீழ்ப்பாக்கம் தீவிர சிகிச்சை பிரிவை நீங்கள பார்த்ததுண்டா..? தீவிர சிகிச்சை பிரிவுக்கான எந்த ஒரு அடையாளமும் அற்ற மருத்துவம் பார்க்கப்படும் இடம் அது. ஒரு நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் 6 நோயாளிகள் வரை இருப்பார்கள். பெரும்பாலும் தீயினால் தாக்கப்பட்டவர்கள். உரு குலைந்தவர்கள். தினம் ஒருவர் அல்லது இருவர் இறந்துபோகும் சூழ்நிலை. அதனுள் வித்யா.

வித்யா மருத்துவமனையில் இருந்த 25 நாட்களும் எந்த ஒரு அரசு அதிகாரியும், அரசியல்வாதியும் அவரை பார்க்க வரவில்லை. சுகாதார செயலாளர்களை கடைசி வரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. மிகுந்த சிரமத்திற்கு பிறகு தொலைபேசி அழைப்பில் வந்த சுகாதார அமைச்சர் ‘அம்மா’ பிறந்தநாள் ஏற்பாடுகளில் மும்முரமாக இருப்பதாக கூறியுள்ளார். அவரின் பிறந்தநாளில்தான் வித்யாவின் உயிர் பிரிந்தது.

வித்யா இறந்த பிறகு வழங்கப்பட்ட சிகிச்சையால் மனம் உடைந்த அவரின் வீட்டார் அவர் உடலை வாங்க மறுத்தனர். அவரை சமாதானப்படுத்த அரசு அனுப்பி வைத்தது யார் தெரியுமா? – 200 ‘Striking Force’ காவலர்களை. ஒரு வழியாக காஞ்சிபுரம் ஆட்சியர் வருவதாக ஒத்துக்கொள்ள அவரின் உடல் வாங்கப்பட்டது. அவர்களுடைய பகுதியில் அவர்களுக்காக காத்திருந்தது 100 ‘Striking Force’ காவலர்கள். திரு.திருமாவளவன் மட்டும் அவரின் இறுதிச் சடங்குகளில் பங்கெடுத்துள்ளார்.

வித்யாவின் வீட்டினருக்கு நம்மால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. 25 நாட்களாக அழுது அழுது அவர்களின் கண்ணீர் வற்றிப்போயிருந்தது.

வித்யாவை உண்மையில் கொன்றது யார்..? – அமிலமா, அலட்சியமா அல்லது அரசா..?

Categories: Uncategorized

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: