இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய்?

Wednesday, February 20th, 2013 @ 11:17PM

டாகடடர் எம். எஸ். உதயமூர்த்தி

டாகடடர் எம். எஸ். உதயமூர்த்தி

அது ஆகஸ்ட் 9, 1988. விஸ்வரூப நாயகன் கமல் ஹாசன் நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப் படம் எந்தத் தடையுமின்றி எளிமையாக வெளியான தேதி. 25 ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும், உங்கள் நினைவுத்திறனைச் சோதிக்க ஒரு கேள்வி. இப்படத்தில் கமலின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? ஒரு நிமிடம் யோசியுங்கள். விடை தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் மூளைக்குள் சிறு ஸ்கேனிங் செய்து பார்த்தற்கு நன்றி. விடை: உதயமூர்த்தி. படத்தின் இயக்குனர் பாலசந்தர் எதேச்சையாக வைத்த பெயரல்ல இது. தன் கல்லூரித்தோழர், தமிழகத்தின் தலைசிறந்த தன்னம்பிக்கை எழுத்தாளர், மே 1988ல் தானும் கலந்து கொண்டு தொடங்கி வைத்த ‘மக்கள் சக்தி’ இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர் தான் அது.

ஏப்ரல் 8, 1928ல் அப்போதைய தஞ்சை மாவட்டம், இப்போதைய நாகை மாவட்டம் விளநகர் கிராமத்தில் பிறந்த எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் பிற்காலத்தில் பேனா முனையால் இலட்சக்கணக் கான உள்ளங்களை உலுக்கியெடுத்து, எழுச்சி யடையச் செய்யப்போகிறார் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. கடந்த ஜனவரி 21 அன்று இவ்வுலகிலிருந்து பிரிந்த அவரின் உன்னத வாழக்கையிலிருந்து இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. சிலவற்றை மட்டும் பதிவு செய்கிறேன். அவர் புத்தகத்தைப் படித்தவன் என்பதை விட, அவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு சாப்ட்வேர் துறையிலிருந்து, சமூகப் பணிக்கு வந்தவன் என்பதைவிட, மக்கள் சக்தி இயக்கத்தில் 4 ஆண்டுகள் செயல்பட்டு அவரின் வாழ்க்கைப் பாடத்தை அருகிலிருந்து படித்தவன் என்ற அடிப் படையில்.

கல்வி ஒரு வேள்வி

படிப்பு என்பதை ஒரு வேள்வியாகவே பாவித் தவர் உதயமுர்த்தி. மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப்பட்டம். பிறகு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றுமொரு முதுநிலைப் பட்டம். அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் மருத்துவ ரசாயணத்தில் டாக்டர் பட்டம். எனத் தொடர்ந்த படிப்பு 85 வயதில் அவரின் இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது. அவரின், இறுதி ஆண்டுகளில் கூட செய்தித்தாளை, பத்திரிகைகளைப் படிக்கும் போது அடிக்கோடிட்டுப் படிப் பதைப் பார்த்திருக்கிறேன். இயக்க வேலைகள் தொடர்பாக அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எங்களிடம் மறவாமல் அவர் கேட்கும் கேள்வி. இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய்?

வாழ்க்கையில் சாதிக்க விரும்புவோர் ஒவ்வொருவரும் தாரக மந்திரமாய் கொள்ள வேண்டிய கேள்வி இது என்றால மிகையில்லை.

சொன்னபடி வாழ்ந்தவர்: சுயவளர்ச்சி, சுய பொருளாதார வளர்ச்சி, சமூக ஈடுபாடு. முதலில் உன்னை ( கல்வியை, சிந்தனையை) உயர்த்திக் கொள்; உன் தேவைக்கான, உன் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத் தன்னிறைவு கொள்; நானுண்டு – குடும்பமுண்டு என்றில்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக பொதுக் காரியங்களில் ஈடுபட்டு, உன்னால் முடிந்த அளவு பணி செய் என்ற வாழ்க்கையின் படி நிலைகளை இயக்கத் தின் கொள்கைகளாக வைத்தவர், அடிபிசகாமல் தன் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டினார் உயர்கல்வி கற்றவராக தன்னை உயர்த்திக் கொண்டு, அமெரிக்க பல்கலைகழகங்களில் பேராசிரியராக துறைத்தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். பிறகு, ஒரு உணவுத் தொழற்சாலையின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். பின்னர், தானே ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி, அமெரிக்காவில் தொழில் துறையில் உள்ளவர்கள் யார், யார் என்ற பட்டியலில் இடம் பெற்றார். மாணவன், கல்லூரிப் பேராசிரியர், துறைத் தலைவர், தொழிற்சாலையில் தலைமை நிர்வாகி, சொந்தத் தொழிற்சாலை நிறுவுதல் என்று அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வாழ்ந்து, தன்னையும் – தன் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொண்ட அவர் அடுத்த 25 ஆண்டுகள் ( 1988 முதல்) உழைத்தது தாயகத்திற்காக, தமிழகத்திற்காக. சொன்னபடி வாழ்ந்த பெருமைக்குரிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உதயமூர்த்தி.

எழுத்துப் பணி

அமெரிக்காவில் இருந்த காலகட்டத்திலேயே தன் எழுத்துப் பணியைத் தொடங்கிவிட்டார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமைகள் அமெரிக்கா வந்தபோது, அவர்களுடன் பயணித்து, பயணவிவரங்கள் குறித்து தமிழகத்திற்கு எழுதினார். 1970-80களில் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள், புத்தகங்கள் இலட்சக்கணக்கான உள்ளங்களில் எழுச்சி தீபம் ஏற்றின. மனித உறவுகள், சிந்தனை, தொழில் செல்வம், நீதான் தம்பி முதலமைச்சர், உயர்மனிதனை உருவாக்கும் குணங்கள், ஆத்ம தரிசனம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். இருந்தாலும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று இன்றுவரை பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் புத்தகம் ‘எண்ணங்கள்’ மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களே நம் வாழ்க்கை எனும் மரமாக மாறுகிறது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை எளிய வார்த்தை களில், வரிகளில் விளக்கியிருப்பார் அப்புத்தகத்தில், சில ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகம் அப்புத்தகத்தை மாணவர்களுக்குப் பாட நூலாக வைத்திருந்தது என்றால் அப்புத்தகத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். அவர் நூல்களை தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றம், சமூகச் சிந்தனைகள், ஆன்மீகம் என்ற 4 வகை களாகப் பிரிக்கலாம். என்னைச் செதுக்கிய எண்ணங்கள் என்ற நூலின் மூலம் தன் சுயசரிதையை எழுதியுள்ளார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் முதல் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள் வரை அனைவரையும் வாசகர் களாகக் கொண்டவர் உதயமூர்த்தி. இதற்குக் காரணமாய் அவர் சொல்வது தன் எழுத்துலக குருவான கல்கியைத்தான். கல்கியின் எழுத் தோட்டத்தை அடியற்றியே தன் எழுத்து நடையை அமைத்துக்கொண்டேன் என்பார் அவர். எளிமையான சின்னச்சின்ன, வார்த்தைகள் – வாக்கியங்கள் அவரின் எழுத்தை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்த்தது. எழுத்திற்கு கல்கி போல், தன் எண்ணங்களுக்கு குருவாக இருந்தவர் ஜேம்ஸ் ஆலன் என்பார் அவர். ஆலனின் என்ற புகழ் பெற்ற நூலின் தமிழாக்கமாக ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் என்ற ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் இறந்தாலும், அவரின் எழுத்துகள் மூலம் இன்றும் – என்றும் அவர் நம்மோடு வாழ்வார்.

– செந்தில் ஆறுமுகம்

Categories: Article, Feb 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: