இதுதான் அரசியல்!

Monday, March 25th, 2013 @ 11:00PM

“தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான வெற்றியாகும். கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். உண்மையிலேயே இன்றுதான் ஒரு சாதனை புரிந்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எனது கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்ததாக உணர்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல எனது அரசுக்கும் கிடைத்த வெற்றியாகும்.” காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியான பின் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பேட்டி இது. முகத்தில் பெருமை பொங்க உண்மையிலேயே ஒரு சாதனை புரிந்த பூரிப்புடன் வந்த வார்த்தைகள் இவை. இதே காவிரி பிரச்சனையில், “நடுவர் மன்ற தீர்ப்பளித்தால் மட்டும்போதுமா? பங்காரப்பா கேட்க வேண்டாமா?” என்று கருணாநிதி முதல்வராக இருந்த போது ஜெயலலிதா கேட்டதும், காவிரி ஆணையம் அமைக்கப்பட்டபோது ‘அது ஒரு பல் இல்லாத அமைப்பு’ என்றதும் பழைய வரலாறு.

இதற்கு சரியாக 2 வாரங்கள் முன் விஸ்வரூபம் குறித்து கமல் தனக்கு விரோதி இல்லை எனவும், ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றத்தான் தமிழக அரசு பகலென்றும் இரவென்றும் பாராமல் நீதி மன்றத்தை அணுகுவதாகவும், தான் ஒருபோதும் கருத்து சுதந்திரத்தை எதிர்ப்பவர் இல்லை எனவும் தானே நடத்திய பத்திரிக்கையாளர் கேள்வி பதிலில் தேவையில்லாமல் சிக்கிக்கொண்டு அன்றைய அனைத்து உள்ளூர், வெளிமாநில தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளானார்.

மேற்சொன்ன இரண்டு விஷயங்களில் மக்கள் எதை அதிகம் ரசித்தனர்? எதற்கு அதிகம் அரசை பாராட்டினார்கள்? எதை அதிகம் தூற்றினர்? காவிரி குறித்து முதல்வர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிஜம். காவிரி நீர் பெறுவதில் இன்னும் போக வேண்டிய தூரமிருந்தாலும் காவிரி அரசியலை தொடர்ந்து பார்த்து வரும் நமக்கு முதல்வர் இப்பொழுது நிகழ்த்திக் காட்டியது நிச்சயமான சாதனை. இதுவரை செய்த நல்ல விஷயமாக இன்றுவரை சொல்லப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தாண்டிய சாதனைதான் இது.

இதே போன்ற சாதனைகள் இன்னும் எத்தனை எத்தனையோ வரிசை கட்டி நிற்கின்றன. லோக் ஆயுக்தா சேவை பெறும் உரிமை, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அடுத்த சட்ட மன்ற தொடர் வரை காத்திருக்காமல் தேவையான உடனடி சட்டங்கள், தரமான அரசு பள்ளிகள்.
மருத்துவ மனைகள், மது கட்டுப்பாடு, அரசியல் குறுக்கீடுஅற்ற காவல், நீதித்துறை, வெளிப்படையான நிர்வாகம், இலவசங்கள் ஒழிப்பு, அம்மா கோசம் போடும் அரசியல் அடிவருடிகள் ஒழித்து எளிமையான வாழ்க்கை வாழ்தல், இதுவல்லவோ நிஜமான அரசியல்?. நடக்குமா..???

Categories: Article, March 2013, Whistle, தலையங்கம்

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: