என்று தணியும் இந்த பயங்கரவாதம்?

Tuesday, March 26th, 2013 @ 10:50PM

hyderabad-bomb-blastபிப்ரவரி 24 ம் தேதி வியாழக்கிழமை புத்த ஏகாதசி தினம் மாலை 6 மணி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அனுராக் அவர்கள் தில்சுக் நகர் சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட செல்கிறார். சாமி கும்பிட்டு விட்டு நிம்மதியாக தூங்கிய அவருக்கு மாலை 7 மணியளவில் சாய்பாபா கோவிலுக்கு 500 மீட்டர் தொலைவில், கோனார்க் தியேட்டர் அருகில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த செய்தி பேரிடியாக வருகிறது. உடனே சம்பவ இடத்திற்கு விரைகிறார். 16 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களும், காயமடைந்தவர்களின் உடல்களும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றது. அரசியல் பிரமுகர்கள் மந்திரிகள் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் என கூட்டம் ஆஸ்பத்திரிகளில் அலை மோதுகிறது. மருத்துவர்களுக்கோ காயமடைந்தவர்களைக் கவனிப்பதை விட இவர்களை சமாளிப்பதுதான் பெரும்பாடாகிப் போனது.

காயமடைந்தவர்களுக்கு உடனடித்தேவையான மருத்துவ உதவிகளைச் செய்ய முடியாமல் தவித்தபோது லோக்சத்தா கட்சியின் இளைஞரணித் தலைவர் ராமு காயமடைந்தோருக்கு வேண்டிய அனைத்து குரூப் ரத்தமும் உடனுக்குடன் கிடைக்க ஆஸ்பத்திரியில் கூடவே இருந்து ஏற்பாடு செய்தார். மற்ற கட்சியினரோ பத்திரிக்கைகளில் பெயரும் படமும் வர வேண்டும் என்ற நோக்கில் நடந்து கொண்டனர். தீவிரவாத குற்றங்களுக்காக கஸாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பின் இது போன்ற சம்பவம் நடக்கும் என்று நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளின் எச்சரிக்கைகள் கிடைத்த பின்பும் மெத்தனமாக இருந்தது அரசாங்கத்தின் பலவீனமா அல்லது பயங்கரவாதத்தை தடுக்க அரசு தயங்குகிறதா?

26/11 பாராளுமன்ற தாக்குதலுக்குப்பின் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தீவிரவாதத்தை தடுக்க தீவிரவாதத் தடுப்பு மையங்கள் ஏற்படுத்த முயன்றார். ஆனால் பல்வேறு தடங்கல்களால் நிறைவேற்ற முடியவில்லை. அவருக்குப்பின் பொறுப்பேற்ற உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே பயங்கரவாதத்தில் அரசியல் லாப நோக்கோடு செயல்படுவது இச்சம்பவம் மூலம் தெளிவாகிறது. அவருக்கு இப்படி ஒரு சம்பவம் ஐதராபாத்தில் நடக்கலாம் எனத் தெரிந்தும் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட உடனே பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஒருங்கிணைந்த ஜிஹாத் அமைப்பு இந்தியாவை பழி வாங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்தது. அக்டோபர் மாதம் இந்திய முஜாஹீதீன் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதற்கும் மேற்படி அமைப்பு பழி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதும் தெரிந்ததே. முன்பு ஐதராபாத் லும்பினி பார்க்கில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பட்கல் சகோதரர்களான இக்பால், ரியாஸ் ஆகியோரின் நடமாட்டத்தையும் கண்காணிக்க தவறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பும், முன்பு நடந்த குண்டுவெடிப்பும் ஒரேமாதிரி இருப்பதால் அவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் ஜிஹாத் அமைப்பினர் குண்டுகள் தயாரிக்கத் தேவையான முக்கிய மூலப்பொருளான அமோனியம் நைட்ரேட் ஐதராபாத்தில் தாராளமாக கிடைப்பதால் அவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஐதராபாத் சிறந்த இடமாக தேர்வு செய்துள்ளனர். இங்குதான் பதினைந்து நிமிடத்தில் லட்சோபலட்சம் இந்துக்களை அழித்துக்காட்டுவேன் எனச்சவால் விடும் அக்பருதீன் ஒவைசி எம் எல் ஏ போன்ற தீவிர விசுவாசிகளும் உள்ளனர்.

9/11 இரட்டைக்கோபுர தகர்ப்பிற்குப்பின் அமெரிக்காவில் எவ்வித தீவிரவாத செயல்களும் தலை தூக்கவில்லை. அங்கு எவ்வாறு இது சாத்தியமாயிற்று. அங்கு அரசியல் பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் அதிகாரிகளும், மக்களும் ஒருமித்த கருத்துடன் தீவிரவாதத்தை எதிர்த்து நின்றதால்தான் அங்கு தீவிரவாதிகளால் வாலாட்ட முடியவில்லை.

நமது நாட்டிலோ ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறிக்கொண்டு எப்படியெல்லாம் அரசியல் லாபம் பெறலாம் எனக் கணக்குப் பார்த்து செயல்படுவதால் இங்கு தீவிரவாதம் ஒழிக்கப்படாமலேயே இருக்கிறது. தீவிரவாதம் தடுக்கப்பட வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென்றால் அனைத்து தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றுகூடி மாநிலங்களின் உரிமை பறிக்கப்படாமலும், மாநிலங்களின் செயல் பாடுகள் தடுக்கப்படாமலும், ஒருமித்த கருத்துடன் உறுதியான பலமான தேசிய பயங்கரவாத தடுப்பு மையங்கள் மாநிலந்தோறும் அமைக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தேவையான ஆள்பலம், ஆயுத பலம், அறிவுத்திறன் ஆகியவற்றை எல்லா மாநிலங்களிலும் பெருக்க வேண்டும். மாநிலக் காவல்துறை நவீனப்படுத்தப்பட வேண்டும். மாநில, மத்திய அரசுகள் ஒருமித்து செயல்பட வழிவகை செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் சாத்தியப் பட இப்போதுள்ள அரசியல் சூழல் வழி வகுக்காது. ஒரு பெரிய அளவில் அரசியல் மாற்றம் வந்தால் அன்றி இது எதுவும் சாத்தியப்படாது. தீவிரவாதம் ஒழிய அரசியல் மாற்றம் ஒன்றே சிறந்த வழி..

– தினகரன் போஸ்

Categories: Article, March 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: