சட்டமன்ற உறுப்பினர் இடைநீக்கம் – சபாநாயகரின் பொறுப்பு என்ன?

Tuesday, March 26th, 2013 @ 8:47PM

தமிழக சட்டமன்றத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி, மன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் அவர்களை தாக்கியதாக தேமுதிக-வை சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்து பின்னர் இடைநீக்க காலத்தை ஆறு மாதங்களாக குறைத்துள்ளார். இச்சம்பவம் இப்போது விவாதப்பொருளாகியிருக்கிறது.

இதில் பெரும்பாலான விவாதங்கள் தண்டனை காலத்தின் கடுமை பற்றியும், உறுப்பினர்களின் அடுத்தக்கட்ட செயல்பாடு பற்றியும், ராஜ்ய சபா தேர்தலில் அவர்களில் ஓட்டுரிமை பற்றியுமே அமைகிறது. எதிர்கட்சிகள் இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட செயல் என கருத்து தெரிவித்துள்ளனர். அனால் உண்மையில் நடந்தது என்ன? உறுப்பினர்கள் நிஜமாகவே அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டார்களா? போன்ற விவாதங்கள் எழவே இல்லை. ஏனெனில் சட்டமன்ற நடவடிக்கைகள் எதையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு இல்லை.

உரிமை குழு விசாரணையின் அறிக்கையை அடுத்து கருத்து தெரிவித்த தேமுதிக உறுப்பினர்கள், ‘சட்டமன்றத்தால் வெளியிடப்பட்ட காணொளித் தொகுப்புகள் திரித்து வெளியிடப்பட்டது, திரிக்கப்படாத முழு காணொளித் தொகுப்பு வெளியிடப்பட்டாலே உண்மை வெளிப்படும்’ என்றனர். இதற்கு முன்னரும் எதிர்க்கட்சி தலைவர் திரு. விஜயகாந்த் இடைநீக்கம் செய்யப்பட்ட போது அவையின் கண்ணியத்தை குறைக்கும் விதத்தில் நடந்து கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டாரே தவிர, என்ன செய்தார் என தெளிவாக வெளியிடப்படவில்லை. இதேபோல் பல சந்தர்பங்களில் சட்டசபை சார்பில் வெளியிடப்படும் திரிக்கப்பட்ட காணொளிக்குறிப்புகள் ஆளும்கட்சியின் புகழ்பாடுவதாய் அமைகிறதே தவிர, அவற்றில் பல முக்கிய விவாதங்கள் இடம்பெறுவதில்லை.

சபாநாயகர் இந்த தேமுதிக உறுப்பினர்கள் இடைநீக்க விவகாரத்தில் அவர் எடுத்த முடிவை ஆதாரங்களுடன் நியாயப்படுத்துவது அவரின் பொறுப்பாகும். இது தொடர்பாக அவையில் நடந்த அனைத்து நிகழ்வுகளின் காணொளிகளையும் திரிக்காமல் வெளியிட ஆவணசெய்யவேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் அவையின் நிகழ்வுகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய ‘சட்டமன்றத்தின் செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என்ற லோக் சத்தா கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை கட்சி மீண்டும் நினைவு படுத்துகிறது.

இது பற்றிய தங்கள் கருத்தைக் கீழே பதிவு செய்யவும்:

Do you want live telecast of TN Assembly?

View Results

Loading ... Loading ...

Categories: April 2013, Article, Press Releases, Whistle, தலையங்கம்

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: