ஒரு சிங்கூர் உருவாகுமா?

Monday, March 25th, 2013 @ 11:30PM

GAIL pipelineஎரிவாயுக்கள் குழாய்கள் மூலம் நேரடியாக பயனாளிகளை சென்றடையும் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளாக பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டு வரும் ஒரு செயல் திட்டம். இதன்படி தென்னிந்தியாவில் முதன் முதலாக மூன்று மாநிலங்களை இணைத்து கொச்சி துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை வாயுவை (CNG) பெங்களூரு மற்றும் மங்களூர் ஆகிய நகரங்களுக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் எடுத்துச்செல்லப்படும் திட்டம் 2007-ல் வரையறுக்கப்பட்டு 2011-ல் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. Gas Authority of India Limited (GAIL) எனப்படும் அரசு எரிவாயு நிறுவனத்தின் மூலம் 1156 கி.மீ நீளமுள்ள நிலத்தடி குழாய்கள் கொச்சி – மங்களூர்(KKMPL) மற்றும் கொச்சி- பெங்களூரு (KKBPL) என இரு திட்டங்களாக பிரிக்கப்பட்டு மூன்றுகட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் கேரளாவிலும் கர்நாடகாவிலும் மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக இந்த எரிவாயுக்கள் பயன் படுத்திக்கொள்ளவும், மூன்று மாநிலங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேரடியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்படியானால் தென் மாநில மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தானே? உடனடியாக செயல்படுத்திவிட வேண்டியதுதானே? நிலத்தில் குழாய் பதிக்கப்படும் விவசாயிக்கு 10% இழப்பீடு கிடைக்கும். விவசாயிக்கு இது இலாபம்தானே? ஆனால் சில நிபந்தனைகள் உள்ளன. அதுதான் பிரச்சினை. அந்த நிபந்தனைகள் சில:

  • குழாய்கள் பதிக்கப்படும் இடங்களின் மேல் எவ்விதமான கட்டிடங்களும் கட்டக்கூடாது.
  • குழாய் பதிக்கப்படும் இடங்களின் மேல் மரங்கள் ஆழ்வேர் பயிர்கள் முதலியவை நடுதல் / பயிர் செய்தல் கூடாது.
  • குழாய் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து சுமார் 200மீட்டர் வரை கிணறுகள் வெட்டக்கூடாது.
  • முக்கியமாக Petroleum & Mineral Pipeline Act 1962-ன் படி நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களுக்கு அந்தந்த நில உரிமையாளர்களே பொறுப்பு.

குழாய்கள் சேதாரமடைந்து விபத்துக்கள் ஏற்பட்டால் சம்பத்தப்பட்ட நில உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யவும் அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்கில் தாம் நிரபராதி என நிரூபிக்க வேண்டியது (Burden of Proof) மேற்கூறிய உரிமையாளர்களின் கடமை. 2011-ம் ஆண்டு இப்பணிக்காக நிலத்தின் அனுபோக உரிமை கோரி அனுப்பிய கடிதத்தின்படி ஆட்சேபம் தெரிவிப்பவர்களின் கருத்தை கேட்டபின் முடிவெடுக்கப்படும். ஆனால் அவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தவர்களுடன் விசாரணை முடிந்ததும் வந்த பதில் “பொது நோக்கத்திற்காக செயல் படுத்தப்படும் இந்த திட்டத்தில் ஆட்சேபனை மனுவில் தெரிவித்த எந்த மாறுதலும் செய்ய முடியாது” என்பதே. பொது நலனுக்காக ஒரு இந்திய குடிமகனின் வாழ்வாதாரத்திலா கை வைப்பது. அவன் வெறும் குடிமகன் மட்டு மல்ல. இந்த நாட்டிற்கே படியளக்கும் விவசாயி.

சம்பத்தப்பட்ட விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூலை மாதம் பணி துவங்கப்பட்ட போது காவல்துறை நடவடிக்கை வரை போய், பின்னர் GAIL நிறுவனத்தார் நீதிமன்றத்தில் போய் நிற்க வேண்டியதாயிற்று. உயர் நீதிமன்றம் மிகத் தெளிவாக சிங்கூர், நந்திகிராம் சம்பவங்களை மேற் கோள் காட்டி விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து சுமூக உடன்பாடு எட்ட அறிவுறுத்தியது. இதன் பின்னர்தான் மாநில அரசே செயல்படத் துவங்கியது. மேற்கு மண்டல மாவட்டங்களில் நடை பெற்ற இந்த போராட்டம் ஏதோ தமிழகத்தை தாண்டி வேறு ஒரு மாநிலத்தில் நடைபெற்றது போல் கண்டு கொள்ளாமல் இருந்தது. உயர்நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் கெயில் நிறுவன அதிகாரிகள் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட குழாய் கடந்து செல்லும் 7 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.

அனைத்து போராட்டங்களும் கிட்டத்தட்ட ஓய்ந்தது என்ற நிலையில் கெயில் நிறுவனம் உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலை காற்றில் பறக்கவிட்டு விட்டு மீண்டும் தனது பணியை பிப்ரவரி 10-ம் தேதி காவல் துறையின் உதவியோடு திருப்பூரில் துவங்கியது. உண்மையில் அன்று நடந்ததுதான் உச்சபட்ச கொடுமை. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்துக்குளியில் நில உரிமையாளர்களான விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அவர்களின் நிலங்களில் நுழைந்து பயிர்களையும் மரங்களையும் இயந்திரங்கள் துணையோடு பெயர்த்து எறிந்தனர். அதனை கேள்விப்பட்ட அனைத்து விவசாயிகளும் கொந்தளித்துபோயினர். மறுநாள் கண்ணீரும் கம்பலை யுமாய் நிற்கும் பெண்ணின் புகைப்படத்தோடு வந்த நாளேடு செய்திகளைப் பார்த்து ஒருவித அச்ச உணர்வும் ஏற்பட்டது. மேற்கூறிய PMP சட்டத்தின் 2012-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி நிலத்தடி குழாய்களில் சேதம் விளைவித்தால் பிணையில்லா கைது மற்றும் அதிகபட்சம் மரண தண்டனை என தண்டனைகள் கடுமையாக்கப் பட்டுள்ளன. இன்று நிலத்தை ஆக்கிரமிப்பதிலேயே இவ்வளவு கடுமை காட்டி வரும் துறையினர் பின்னாளில் எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு விட்டால் கூட நில உரிமையாளர்களை இந்தசட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்க முயலலாம் என்ற எண்ணம் அனைத்து விவசாயிகளின் கவனத்தை இந்தச் சட்டங்களுக்கு எதிராக திருப்பியுள்ளது. காவல்துறை உதவியோடு கெயில் நிறுவனம் நிகழ்த்திய அத்து மீறல், அராஜகத்தின் விளைவு, விவசாய பாதுகாப்புக்குழு, அனைத்துக்கட்சி மாநாடு, கெயில் அலுவலகம் முற்றுகை வரை சென்றது. கட்சி பாகுபாடில்லாமல் அனைத்து அரசியல் தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்றி விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வைத்தது.

ஆனால் தமிழக அரசின் செயல்பாடுதான் விவசாய எதிர்ப்பு பார்வையாகவே அமைந்தது. தமிழகத்தில் மட்டுமா போராட்டம் நடைபெறுகிறது? கேரளத்தில் இதைவிட எதிர்ப்பு காணப்பட்டது. இருந்தும் அம்மாநில முதல்வர் பொறுப்போடு பிரச்சனை குறித்து பேசி, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இழப்பீடு 30% ஆக உயர்த்தி, பணிக்காக எடுத்துக் கொள்ளும் நிலம் 20மீ இருந்து 10மீ ஆக குறைக்கப்பட்டது. விவசாயிகளின் நலனைக்கருதி சில இடங்களில் குழாய் செல்லும் பாதையை நெடுஞ்சாலை வழியாக அமைத்தது. ஒரே பிரச்சனை, இரு மாநில அரசுகள் செயல்படும் விதம் அவர்கள் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. தமிழக அரசை பொறுத்தவரை உதயகுமார் முதல் உழவர் அமைப்பு வரை எல்லோரும் முதல்வர் முன் சமமே என்று நிரூபிக்க முயல்கிறதா?

“ஒரு போர் எங்கே தொடங்குகிறது. ஒரு புன்னகை நிராகரிக்கப்பட்ட இடத்தில்..” என்ற திரைப்பட வசனம் மட்டும் மனதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது.

– எம்.எஸ். ஆனந்தம், ஆராய்ச்சி மற்றும் அலோசனைக் குழு

Categories: Article, March 2013, Whistle

2 Comments to "ஒரு சிங்கூர் உருவாகுமா?" add comment
Anandaraj
March 27, 2013 at 1:02 pm

Hi, I’m not exactly clear what this article is trying to say here w.r.t TN govt. If you see the project plan it clearly for Kerala and Karnataka covering cochin/mangalore and bangalore. They could very well lay these pipes in their states itself, but due to various protests in kerala they are laying pipes to bangalore via TN in agricultural land forcefully. which in my opinion is wrong.

MS Anandam
March 27, 2013 at 3:12 pm

Anand, What you said is a rumour being spread across the state. The real fact is this project’s main motto is to supply domestic gas supply direct to home in the southern part of India and some commercial supply in Banglore. Main terminals for domestic supply are Cochin, Coimbatore, Salem(For Chennai) & Banglore and these were the part of the Detailed Plan Report(DPR) itself. What they mention about Kerala protest is about the routing between Cochi & Aluva. They rerouted the pipe so as to enroute the pipes through NH for 9 kms to avoid farming lands. There is no such things happened for protesting to reroute through TN.

Leave a Reply

%d bloggers like this: