கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும்

Friday, March 15th, 2013 @ 8:23AM

அந்த தொலைக்காட்சி சேனல் திடீர் என ஒரு நாள் நின்று போனது. கேபிள் ஆப்ரேட்டரை கேட்டால் அந்த சேனலின் எண் மாறி, பின்னோக்கி சென்றுள்ளதாக தெரிவித்தார். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. உண்மையில் அந்த சேனல் தொலைந்துபோனது. தொலைக்கப்பட்டது. தங்களுடைய சொந்த சேனலின் சரிவை மீட்க ஒரு தனியார் தீட்டிய திட்டமிது. இது அவர்களுக்கு புதிதல்ல. தாங்கள் நினைத்ததைத்தான் மக்கள் பார்க்க வேண்டும் என முடிவு செய்யும் இடத்தில் அவர்கள் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். அதற்கான அரசியல் பலமும் அவர்கள் கையில், தனியார் கையில் இருக்கும் வரைதானே தொல்லை. அதை அரசே ஏற்று நடத்தினால்? கேட்பதற்கு காது குளிர இருந்த இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததும் வெறுத்துபோனது. அரசு கேபிளில் மாற்று கட்சி சேனல்கள் முடக்கப்பட்டன. அரசும் இன்னுமொரு அரசியல் கட்சிதானே? கேபிள் தொழிலை காப்பாற்றத்தான் முழு முயற்சி எடுப்பதுபோலவும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுவதுபோலவும் இங்கு தொடர்ந்து ஒரு நாடகம் அரங்கேறுகிறது.

மேல் சொன்ன உண்மைகளையெல்லாம் துளி பயமின்றி நெஞ்சுரத்துடன் ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர், நேர்மையாளர் திரு.சாவித்திரி கண்ணன். “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்” என்ற புத்தகத்தில் முந்தைய ஆட்சி கவிழ ஒரு துருப்பாக இருந்தவர் கேபிள் தொழிலில் இரு பிரதான கட்சி அரசுகள் ஆடிய, ஆடும் ஆட்டத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

cable-tv-book-release

நேர்மையான ஒரு புத்தகத்தை வெளியிட நேர்மையான ஒருவர் வேண்டும் என முடிவெடுத்து அழைக்கப்பட்டிருந்தவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.பி.எஸ். மோகன். புத்தகத்தை பெற்றுக் கொண்டவர் தன்னுடைய நேர்மைக்காக இன்னல் பல சந்தித்த திரு.உமா சங்கர் ஐ.ஏ.எஸ். வாழ்த்துரை வழங்கியவர் திரு.தேவசகாயம் ஐ.ஏ.எஸ்.,

புத்தகத்தை வெளியிட்ட நீதியரசர் “கண்ணன் சர்ச்சைக்குரிய ஒரு பொருளை எடுத்துக்கொண்டு மிக அழகாக ஆய்வு செய்து திறம்பட எழுதியிருக்கிறார் என்பதில் எந்த ஐயமுமில்லை. ட்ராயும் (TRAI) உச்சநீதிமன்றமும் மிக தெளிவாக ‘எந்த ஒரு அரசும் கேபிள் தொழில் செய்யக்கூடாது’ என சொல்லியிருக்கிறது. ஒரு அரசு, தொலைக்காட்சி நடத்தும் என்றால் அங்கு கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும். மாற்று கருத்துகள் நசுக்கப்படும். மாற்று கருத்துக்களை நாம் போற்றுகிறோமோ, இல்லையோ ஆனால் அவை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள யாரும் தடை விதிக்கக்கூடாது. அப்பொழுதுதான் அறிவு வளரும். அந்த அறிவு வளரும்போதுதான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும்” என்றார். மேலும் “உற்பத்தி செய்யப்படும் செட் டாப் பாக்ஸ்கள் சீனாவில் இருந்து வருவதை தவிர்த்து இந்தியாவிலேயே அவற்றை உற்பத்தி செய்யலாம்” எனவும் கருத்துரைத்தார்.

அடுத்து பேசிய திரு.தேவசகாயம், ‘இந்த புத்தகத்தை படித்துவிட்டு நான் திரு.கண்ணனிடம் இந்த புத்தகத்தில் எழுதியிருப்பது உண்மையா என கேட்க அவர் உண்மை என்றார். இன்று திரு. உமாசங்கரிடம் அதையே கேட்க அவர், இது உண்மையில் ஒரு அத்தியாயம் மட்டுமே என்றார். அரசியல் கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் என்பது இல்லாதவரை நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக இருப்பதோடு இது போன்ற பிரச்சனைகள் தொடரும் என்றார்.

இறுதியாக பேசிய திரு. உமாசங்கர், “உண்மையை சொல்வதற்கு தைரியம் வேண்டும் என்ற ஒரு நிலை வந்தால் அந்த இடத்தில் ஜனநாயகம் இல்லை என்று அர்த்தம், அது ஒரு வெட்கக்கேடான விசயம் என்றவர் தொடர்ந்து முந்தைய ஆட்சியில் ஒரு குடும்ப சண்டையில் அரசு கேபிளின் துவக்கத்தையும், அதன் அழிவையும் விளக்கினார். ஆனால் அதே அரசு கேபிளின் நோக்கம் சரியாக இருந்தால் அதை கொண்டு கல்வியில், மருத்துவத்தில், தொழில்நுட்பத்தில் செயற்கரிய சாதனைகள் பல புரிய வாய்ப்பிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார். நல்லவர்களின் அமைதி தீயவர்களின் அராஜகத்தை விட அபாயகரமானது. நல்லவர் ஒருவர் அமைதியை கலைத்துள்ளார். நாம் என்ன செய்யப் போகிறோம்?

– திருமொழியன், களத்திலிருந்து

Categories: Article, Feb 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: