சென்னையின் முதல் முதல்வர்

Monday, March 11th, 2013 @ 11:38PM

அவர் முதல்வரானதும் அவருக்கு ஒரு பெரிய மாளிகை ஒதுக்கப்பட்டது. “எனக்கெதுக்கப்பா இவ்வளவு பெரிய வீடு” என்று கேட்டவருக்கு, “நீங்க முதலமைச்சரு அதனால பலர் சந்திக்க வருவார்கள்” என்று பதில் கிடைத்தது.

அவரோ “என்னை ஏன் சந்திக்க வரணும்? அலுவலக விசயமுன்னா அலுவலகத்திற்கு வரட்டும், தனியா என்னை சந்தித்தால் நாளை என் மீது பலருக்கு சந்தேகம் வரும்” என்று சொல்லிவிட்டு, இன்றைய கூவம் கடலில் கலக்கும் தீவுத்திடலுக்கு அருகில் ஒரு படுக்கை அறை, சமையலறை முற்றம், தொண்டர்கள் உறவினர்கள் வந்தால் அமர வீட்டின் முன்பு ஓலை கொட்டகை அமைத்து தன்னுடைய பதவி காலம் முழுவதும் அங்கே தான் இருந்தார்.

ஒரு முறை அவர் குற்றாலம் சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு காரில் பலாப்பழம் இருப்பதை கண்டார். ‘இது யார் கொடுத்தார்’ என கேட்க ஓட்டுனர் ‘தோட்டத்தில் இருந்து எடுத்து வந்தேன்’ என்றார்.

பதிலை கேட்டதும் உடனே அவர் “பழத்தை திருப்பி கொடுத்துவிட்டு வா” என கட்டளை இட, ஓட்டுனரோ “சார் பழம் வெறும் 3 ரூபாதான், போய் வர 8 ரூபாய் வரை செலவாகும்” என்றார். அவரோ “முதலில் கொடுத்துவிட்டு எழுதி வாங்கி
கொண்டுவா” என்ற கறாராக கூறிவிட்டார்.

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓட்டுனரும் கொண்டு போய் கொடுத்து விட்டு எழுதி வாங்கிக் கொண்டு வந்தார். சில நாட்களாக வண்டி ஓட்டும் போதெல்லாம் முகத்தை ‘உம்’ என்ற வைத்து கொண்டு இருக்க, காரணம் கேட்க உடன் ஓமந்தூரார் சொன்ன விஷயம், “அப்பா… பழம் 3 ரூபாய் தான். ஆனால் அதை கொண்டு வந்த நீ ஒரு முதலமைச்சரின் ஓட்டுனர். தோட்டக்காரன், முதலமைச்சரின் ஓட்டுனர் 3 ரூபாய் பழம் திருடினால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எவ்வளவு திருடுவார் என்ற நினைத்துவிட்டால்! சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க. அதை செவ்வனே செய்தால் நாளை வருபவரும் நம்மை பார்த்து சரியாக ஆட்சி புரியலாம் அல்லவா” என்று பதில் சொன்னார்.

இவர் தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரின் பெயர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார். சுதந்திர இந்தியாவின் அப்போதைய மதராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சர் இவரே. சுதந்திர போராட்டத்திற்காக நான்கு முறை சிறைக்கு சென்றவர் இவர்.

ஓமந்தூரார் பதவியில் இருந்த காலத்தில் ஒரு முறை உடல் நிலை சரியில்லாமல் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயம் அவர் மருத்துவர்களுக்குச் சில நிபந்தனைகளை விதித்தார்.
1. எல்லா மக்களுக்கும் கொடுக்கப்படுகின்ற மருந்துகளும், கவனிப்பு முறைகளும் தான் எனக்கும் கொடுக்கப் பட வேண்டும். எனக்கென்று தனியாக மருந்துகளோ, கவனிப்புகளோ, வெளிநாட்டிலிருந்து மருந்துகளையோ, மருத்துவர்களையோ வரவழைக்கக் கூடாது.
2. எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சிகிச்சைக்குப் பின் என்னிடம் வந்து எந்த சலுகையும் கேட்கக் கூடாது.

அவர் பிறந்த தினமான பிப்ரவரி 1ல் அவரை நினைவு கூறுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.

Categories: Article, Feb 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: