நேரடி பண பரிமாற்றத் திட்டம் – உண்மை நிலவரம் என்ன?

Saturday, March 2nd, 2013 @ 11:49PM

அரசு தனது சக நல திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு செலவு செய்வதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. நேரடியாக பணம் கொடுப்பது. உதாரணம் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் கொடுக்கப்படும் சம்பளம், மாணவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை, முதியோர், விதவை, மாற்று திறனாளி ஆகியோருக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை, ஓய்வூதியம் இதில் அடங்கும்.

பயனாளிகள் இந்த தொகையை பெரும்பாலும் காசோலையாகவோ அல்லது நேரடி பணமாகவே சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும்.

2. மக்கள் பயன்படுத்தும் பொருட்களை மலிவு விலையில் கொடுப்பது. அதாவது அதன் உண்மை விலையை விட குறைவான விலைக்கு கொடுப்பது. பொது விநியோக முறையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரைபோன்றஉணவுபொருட்கள்,மண்ணெண்ணெய், எரிவாயு உருளை ( கேஸ் சிலிண்டர்), விவசாயிகள் பயன்படுத்தும் உரம் ஆகியவை இதில் அடங்கும்.

தற்போதுள்ள முறையில் பயனாளர்கள் அதிகாரிகளை பெரிதும் சார்ந்து இருக்க வேண்டும். அவர்களுக்கு கையூட்டு கொடுப்பது போன்ற நிலை உள்ளது. மானிய விலை பொருட்கள் கள்ள சந்தையில் விற்கப்படுகிறது.

இந்த புதிய முறைப்படி பயனாளர்களின் வங்கிகணக்கில் அவர்களுக்கு உரிய பணத்தை அல்லது மானியத்தை செலுத்திவிடுவார்கள். அதனை அவர்கள் நேரடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நடைமுறைப்படுத்துவது எப்படி?

ஆதார் அட்டை எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு பயனாளர்களுக்கு தொடங்கப்படும். அவர்களுக்கு உண்டான சம்பளம், உதவி தொகை, மானிய தொகை இந்த வங்கி கணக்குகளில் போடப்படும். பின்னர் பயனாளர்களின் கை ரேகை போன்றவற்றை சரி பார்த்து அவர்களிடம் அளிக்கப்படும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பளம், மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகிய வற்றில் பணம் பயனாளர்களை சென்றடைவதுடன் இந்த திட்டத்தின் நோக்கம் பூர்த்தியாகிறது. ஆனால் பொது விநியோகம் மூலம் வழங்கப்படும் உணவு பொருள், மண்ணெண்ணெய், அத்துடன் உரம், எரி வாயு உருளை ஆகியவற்றிற்கு வழங்கப்படும் மானிய தொகை அதற்கான நோக்கத்திற்காக பயனாளிகளால் செலவிடப்படுவது கண்காணிக்கப்படும்.

கோட்கசிம் பரிசோதனை

ராஜஸ்தான் மாநிலம் கோட்கசிமின் கிராமத்தில் இந்த நேரடி பண பரிமாற்றத் திட்டம் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. இக்கிராமத்தில் மண்ணெண்ணெய் மானியம் எவ்வாறு செயல் முறைப்படுத்தப்பட்டது என்பதை பார்ப்போம். அங்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 45 ரூபாய். மானிய விலை 15 ரூபாய். அதாவது அரசின் பங்கு 30 ரூபாய். பயனாளிகளின் வங்கி கணக்கில் அரசின் பங்கான லிட்டருக்கு 30 ரூபாய் என்கிற வீதத்தில் எத்தனை லிட்டர் வாங்குகிறார்களோ இதற்கு ஏற்ற தொகை போடப்படும். பயனாளிகள் அந்த தொகையை மண்ணெண்ணெய் வாங்க பயன்படுத்தியதும் அந்த தகவல் மாவட்ட அலுவலருக்கு அளிக்கப்படும். அந்த தகவலின் மூலம் அடுத்தடுத்த மானிய தொகை அளிக்கப்படும். ஆனால், இங்கு பலருக்கு வங்கி கணக்கு தொடங்கப்படாததால் இந்த திட்டம் பெரிய வரவேற்பை பெறவில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளா னார்கள். தங்கள் பணத்தின் மூலம் மண்ணெண் ணெய் வாங்கும் நிலைமைக்கு அவர்கள் உள்ளா னார்கள்.

இத்திட்டத்தின் நன்மைகள்

சமூக நல திட்டங்களில் நடைபெறும் ஊழல் குறையும்.
ஓரே பயனாளி சட்டத்திற்கு புறம்பாக பல முறை பயனை பெறுவது தவிர்க்கப்படும்.
ஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொது விநியோக அட்டை வைத்திருப்பது, எரிவாயு உருளை இணைப்பு வைத்திருப்பது தவிர்க்கப்படும்.
கிராமப் பகுதிகளில் பலருக்கு வங்கி கணக்கு தொடங்கப்படும்.

முன்னேற்றம் தேவைப்படும் இடங்கள்

வங்கி கிளைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும். இல்லாத இடங்களில் தபால் நிலையங்கள் மூலம் பணப்பரிமாற்ற சேவை செயல்படுத்தப்பட வேண்டும்.
ஆதார் அட்டை விநியோகம் வேகப்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசு, 2014 தேர்தலை மனதில் கொண்டு இந்த நல்ல திட்டத்தை அவசர கதியில் செயல்படுத்த முயன்றால் கோட்கசிம் போன்ற முடிவு தான் ஏற்படும்.

செயல் படுத்த ஆரம்பிப்பதற்கு அதற்கு தேவையான ஆதார் அட்டை விநியோகம், வங்கி கணக்கு தொடங் குதல் போன்றவற்றை முறையாக செய்துவிட்டு ஆரம் பித்தால் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவடையும், மக்களுக்கும் பலன்கிட்டும்.

– யுவராஜ்

Categories: Article, Feb 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: