மக்கள் சக்தி

Thursday, March 21st, 2013 @ 11:28PM

1990 களின் துவக்கத்தில் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்டிருந்த ஒரு சில இயக்கங்களில் மக்கள் சக்தி இயக்கமும் ஒன்று. நதிநீர் இணைப்பு, கிராம வேள்வி, கல்வி மேம்பாடு, மதுவிலக்கு போன்ற சமுதாயத்தின் அடிப்படை பிரச்னைகளுக்காக தீவிரமாக செயல்பட்டது இயக்கம். குறிப்பாக நதிநீர் இணைப்பிற்காக இயக்கம் உரத்தகுரல் எழுப்பியது. அதற்காக கன்னியாகுமரி – சென்னை பாத யாத்திரை, போன்ற பல பாதயாத்திரைகளை நடத்தி தமிழர்களைத் தட்டியெழுப்பியது இயக்கம். நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை வருவதற்குக் காரணமாக இருந்தது இயக்கம்.

Dr.M.S.Udayamurthyமதுவிலக்கை வலியுறுத்தி நடத்திய போராட்டத்திற்காக சில நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் உதயமூர்த்தி. அந்த சிறை அனுபவங்களை எங்களிடமும், பலரிடமும் அவர் சுவைபட விவரித்திருக்கிறார். இயக்க பொறுப்பாளர்களின் குடும்பநலனின் மீது அவர் காட்டிய கூடுதல் அக்கறை குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், பெருநிறுவனங்களில் பணியாற்றிய நிர்வாகிகள், பஞ்சாயத்துத் தலைவர்கள், விவசாயிகள், பெட்டிக்கடை- மளிகைக்கடை நடத்துபவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பினர் இயக்கப் பொறுப்புகளைத் தங்கள் தோள்களில் சுமந்தனர்.

1996 தேர்தலில் உதயமூர்த்தி உட்பட 11 பேர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். இயக்க வரலாற்றில் இந்த தேர்தல் ஒரு மைல்கல். வாயளவில் ஆதரித்த மக்கள் வாக்குகள் மூலம் ஆதரிக்கவில்லை. பரபரப்பு மிகுந்த 1996 தேர்தல் புயலில் இயக்கம் போட்டியிட்டது சரியா? தவறா? உதயமூர்த்தி தேர்தலில் நின்றது சரியா? தவறா? இயக்கம் தேர்தல் அரசியலுக்குப் போகலாமா? என்ற விவாதம் இன்றளவும் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளிடம் தொடர்கிறது. சரி, தவறு என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு, சமூக சிந்தனைகள் குறித்து எழுதியது மட்டும் போதாது, சொன்னதை களத்தில் செயல்படுத்த இயக்கத்தைக் கட்டினார். அரசியல் அநியாயங்களைப் பார்த்து பொங்கி எழுதியதோடு நின்றுவிடாமல் தேர்தலிலும் போட்டியிட்டார். தான், வாய்ப்பேச்சு வீரர் இல்லை; பேனா மூலம் மட்டும் போர் நடத்து பவர் இல்லை என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்து காட்டியவர் உதயமுர்த்தி.

1988ல் தொடங்கிய மக்கள் சக்தி இயக்கத்திற்கு இப்போது வயது 25. இந்தப் பொன்விழா ஆண்டில் இயக்கத்தை தமிழகமெங்கும் மறுகட்டமைப்பு செய்வதற்கான பணிகள், உதயமூர்த்தி அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போதே தொடங்கிவிட்டன. இயக்கத்தை மறுகட்டமைப்பு செய்வதே தங்கள் தலைவருக்கு செலுத்தும் உண்மையான இறுதி அஞ்சலி என்றுணர்ந்த இயக்கத் தோழர்களைக் கண்டு பெருமைப்படுகிறேன். மக்கள் சக்தியைத் திரட்டி இயக்கத்தின் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தின் பாடல் வரிகள் காதில் கேட்கிறது.

உன்னால் முடியும் தம்பி தம்பி!
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி!
தோளை உயர்த்து தூங்கிவிழும்
நாட்டையெழுப்பு
எதையும் முடிக்கும் இதயம்
உன்னில் கண்டேன்.
உன்னால் முடியம் தம்பி தம்பி.

இது உதயமூர்த்தியின் உள்ளக்குரல். அவரின் நினைவாக என்றும் நம் காதில் ஒலிக்க வேண்டிய 5 வரி குறள்.

Categories: Article, Feb 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: