மின் பற்றாக்குறை – தொழில் நிறுவனங்களின் சோகம்

Wednesday, March 20th, 2013 @ 11:31PM

மின் பற்றாக்குறை கார்ட்டூன்மின் பற்றாக்குறை தமிழகத்தையே சுற்றிவளைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனை என்று தான் சொல்லவேண்டும். அதன் காரணம் என பலவற்றை நாம் குறிப்பிட்டாலும் முக்கிய காரணமாய் இருந்தது அரசுத்துறையின் சரியான தொலைநோக்கும் எதிர்காலத்தைக் கணித்து அதற்கேற்ப திட்டமிடாமல் போனதே என்பதை நாம் அறிவோம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சிக்கேற்ப மின் ஆற்றல் உற்பத்தி அதிகரித்திருப்பது உலக நடைமுறை. ஆனால் நம் மாநிலத்தில் அவ்வாறான திட்டமே இல்லாமல் போனது அசாதரணமானது. இதன் விளைவு, நான்கு ஆண்டுகளாக படிப்படியாக உயர்ந்த வண்ணம் இருந்த இந்த பிரச்சனையின் உச்சக்கட்ட பகுதியில் நாம் தற்போது நிற்கிறோம். இந்த கடும் மின்வெட்டினால் கோவை தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தான பார்வைதான் கீழ்வருபவை.

கோவையை பொறுத்தவரை இந்த மின்வெட்டு பிரச்சனையினாலும் முறையில்லாத மின் பகிர்மானத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டது தொழிற்துறைதான். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மட்டுமே தொழிற்துறையின் வளர்ச்சியை நம்பியே இயங்குகிறது. அதிலும் முக்கியமாக சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள். பொதுவாக அதிகாரங்களை ஏகபோகமாக ஓரிடத்தில் மையப்படுத்தி பழக்கப்பட்ட நம் நாட்டில் முறையில்லா மின்ஆற்றல் பகிர்மானமும் சாதாரணமானதே. இதனால் கோவை போன்ற நகரங்களில் ஒருமித்த வளர்ச்சியை பாதித்து, ஏழை-பணக்காரர்களுக்கான இடை வெளியை அதிகரித்து வருவது கண்ணுக்கு புலப்படாத ஒன்று. பெரும்பாலான பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் சிறு தொழிற்சாலை வேலையாட்களாகவும், தினக்கூலிகளாகவும் ப்ளம்பர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட அடிப்படை தொழிலாளர்களாகவும் தான் உள்ளனர். இவ்வாறு இவர்களின் வாழ்வா தாரமாக இந்த சிறு, குறுந்தொழிற்சாலைகளே உள்ளது என்றால் மிகையாகாது.

தற்போதைய சமமில்லா மின்பகிர்மானத்தால் கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் டீசல் மின்னாக்கி அல்லது தனியார் மின் நிறுவனங்களை நம்பியே உள்ளது. இவை இரண்டுமே அதிக செலவுள்ள மின் உற்பத்தி என்பதால் தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி செலவு இரு மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதே கோவையில் உள்ள பெறும் நிறுவனங்களும் இவ்வாறே பாதிக்கப்பட்டாலும் அவர்களின் உற்பத்தியைக் கணக்கில் கொண்டால் இந்த மின்சாரத்திற்கான செலவு அதிகரிப்பானது அவர்களால் சமாளிக்கப்பட்டே வருகின்றது. இறுதியில் வளர்ந்து கொண்டிருந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும் சவாலில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக பல தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றனர். இந்த வேலையிழப்பு காரணமாக சாதாரண மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து வருகிறது. உற்பத்தி செலவு அதிகரிப்பால் கோவை நிறுவனங்களின் பொருட்களின் விலையும் சந்தை விலைகளுக்கு மேலே விற்க வேண்டியது கட்டாயம். இதனால் அதே சந்தையில் இருக்கும்சென்னை மற்றும் இதர மாநில தொழில் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல்பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றது. கோவை, உலகில் பம்ப் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. உண்மையில் “இருந்தது” என்றுதான் சொல்ல வேண்டும் கூடிய விரைவில். ஏனெனில் அவ்வளவு வேகமாக தனது மகுடத்தை இழந்துவருகின்றது. மேற்கூறியபடி உற்பத்தி செலவு அதிகரிப்பு அல்லது முறையில்லா மின்வெட்டு ஆகியவை கோவை நிறுவனங்களின் ஏற்றுமதி பெரும் சரிவை சந்தித்துள்ளது. கோவையின் மற்றொரு முக்கிய ஏற்றுமதியான நகை தொழிற்சாலைகளின் நிலைமையும் இதேதான். இத்துறையில் வேலையிழப்பு காரணமாக இவைகளை நம்பியிருந்த நகைத்தொழிலாளர்கள் தற்கொலை செய்து வருவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாகி விட்டது. இவை அனைத்துக்கும் காரணம் மின்வெட்டு மட்டுமே. இதன் தீர்வும் இன்றளவில் கண்ணுக்கு எட்டியதாய் தெரியவில்லை. இனிவரும் காலங்களுக்கும் சரியான திட்டங்களும் கையிருப்பில் உள்ளதாக தோன்றவில்லை. ஏற்கனவே கோவையிலுள்ள சில தொழிற்சாலைகள் சென்னையை நோக்கி நகர்ந்துவிட்டன.தொடர்ந்து மக்களும் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இதே நிலை இன்னும் சில வருடங்கள் தொடர்ந்தால் தமிழகத்தில் இனி சென்னை மட்டுமே தொழில் நகரமாய் எஞ்சியிருக்கும். இந்த புத்தாண்டிலாவது தேவைக்கேற்ப மின் உற்பத்தி, எதிர்காலத்தை கணித்து புதிய திட்டங்கள் என நம் ஆட்சியாளர்கள் சிந்திக்கத் துவங்குவார்களா?

– சாந்த குமார்
தமிழாக்கம்: எம்.எஸ்.ஆனந்தம்

Categories: Article, Feb 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: