ரயில்வே கட்டண உயர்வு ஏன்?

Saturday, March 9th, 2013 @ 9:25AM

கடந்த ஜனவரி 9 அன்று ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் ரயில் கட்டண உயர்வை அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற் படுத்தியது. சுமார் பத்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி2 அடுக்கு பயணத் திற்கான கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டது. இந்த முறை சாதாரண இரண்டாவது வகுப்பு மற்றும் ஏசி3 அடுக்கு பயணம் உள்பட அனைத்து வகுப்பு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

சாதாரண இரண்டாவது வகுப்பு பயண கட்டணம் ஒரு கி.மீ-க்கு 2 பைசா என்ற விகிதத்திலும், ஏசி 3 அடுக்கு பயண கட்டணம் க.மீ-க்கு 10 பைசா என்ற விகிதத்திலும் உயர்த்தப் பட்டுள்ளது. இது மொத்தமாக 12 முதல் 30 சதவிகிதம் வரையிலான கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி ஆகியோர் கட்டணத்தை உயர்த்தாமல் ரயில்வே நிர்வாகத்தை நடத்தி வந்தனர். பிறகு வந்த தினேஷ் திரிவேதி கடந்த ரயில்வே நிதி நிலை அறிக்கையின்போது பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தார். ஆனால் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பால் அவர் பதவியை இழந்து, முகுல் ராய் ரயில்வே துறை அமைச்சர் ஆகி பயணிகள் கட்டண விலை உயர்வு திரும்ப பெறப்பட்டது (ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி 2 அடுக்கு பயணத்திற்கான கட்டணம் தவிர பிறகு திரினாமூல் காங்கிரஸ் மத்திய அரசுக்கு ஆதரவை விளக்கிய பிறகு பவன் குமார் பன்சல் ரயில்வே துறை அமைச்சரானார். அவர் பதவி ஏற்ற போதே ரயில் கட்டண விலை உயர்வு பற்றி பேசினார்.

பத்து ஆண்டுகளாக கட்டண உயர்வு இல்லாமல் இப்போது மட்டும் ஏன்? அப்போது ரயில்வே லாபத்தில் இயங்கியது. ஆனால் இப்போது பொருளாதார மந்தநிலை, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் பயணிகள் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த கட்டண உயர்வு ஜனவரி 23 முதல் அமலுக்கு வந்தது. பயணிகள் கட்டணத்தினால் வரும் இழப்பு சுமார் 25000 கோடியை தொட்டுள்ள இந்த நேரத்தில் இந்த விலை உயர்வு ஆண்டுக்கு 6600 கோடி ரூபாய் ரயில்வே யின் வருவாயை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சரக்கு கட்டண விலையும் உயருமா என்பது கேள்விக் குறியே! இந்த வருட நிதி நிலை அறிக்கையின் போது அது தெரிய வரலாம். இதற்கு இடையில், மொத்த கொள் முதல்வோருக்கான டீசல் மானியத்தை அரசு நிறுத்தி உள்ளது. இதனால் ரயில்வேக்கு விற்கப்படும் டீசல் லிட்ட ருக்கு 10.8 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் விளைவு ரயில்வே துறைக்கு 2700 கோடி ரூபாய் கூடுதல் செலவு.

நவீன மயமாக்கல், பயனாளிகளுக்கு பயணத்தின் போது பாதுகாப்பு, விபத்தை தவிர்ப்பதுக்கான தொழில் நுட்பங்களை நடைமுறைபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக் கைகளுக்காக பயன்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த 6600 கோடி ரூபாயில் (கட்டண உயர்வின் மூலம் வர விருக்கும் தொகை) பெரும் பங்கு டீசல் வாங்குவதற்கே செலவாகி விடும். ஆண்டு தோறும் 250 லிட்டர் டீசலை ரயில்வே வாங்குகிறது. இந்த டீசல் மொத்தம் உள்ள 65000 கிமீ நீளம் கொண்ட ரயில்வேயில் 70% நீளத்துக் குண்டான தொலைவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30% நீள பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது. மின் மயமாக்கலின் வேகத்தை பார்த்தால் டீசல் மீதான சார்பு குறைவது கடினமே! இதனால் ரயில்வே துறைக்கும், பயனாளிகளுக்கும் துயரமான நேரமே காத்துள்ளது. ஒரு புறம் ரயில்வே பாதையின் மின் மயமாக்கல் பணியை துரிதப்படுத்தி மற்றொரு புறம் அதற்கு வழங்க மின்சார உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

– யுவராஜ், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக் குழு

Categories: Article, Feb 2013, Whistle
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: