அவசியம்! அவசரம்! தேர்தல் சீர்திருத்தங்கள்

Saturday, March 9th, 2013 @ 6:39PM

தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியம் என்ன?

இந்தியா போன்ற வேறுபட்ட கலாச்சாரங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் தேர்தல்களே பொது மக்களையும் அரசாங்கத்தையும் இணைக் கும் கருவியாக செயல்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முறைகளில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் பாதிக்கும். எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமாகிறது.

ஏற்கனவே செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்தத்தில் வேட்பாளர்கள் தங்கள் சுய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது. இது ஏன் அவசி யம்?

தற்போதுள்ள சட்டப்படி வேட்பாளர்கள் தங்கள் கல்வித்தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி ஆகியவற்றை வெளியிட வேண்டும். இந்த விவரங்களில் ஏதேனும் முரண் இருப்பது தெரிய வந்தால் அவர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்படும். இவ்விபரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியவற்றால் உற்று நோக்கப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷன் இணையத்தளத்தில் (http://eci.nic.in) உடனக்குடனே வெளியிடப்படுகின்றன. மக்களுக்கு தங்கள் விருப்ப வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் உதவி அவர்களின் அரசியல் பங்களிப்பை அதிகப்படுத்துகிறது. மேலும் தங்களின் பிரதிநிதிகளின் விவரங்களை அறிய பொதுமக்களுக்கு முழு உரிமை உள்ளது. நாளடைவில், இந்த சீர்திருத்தத்தின் விளைவாக கட்சிகள் தங்கள் வேட்பாளர் தேர்வில் கவனமாக செயல்பட்டு தகுதி இல்லாத, குற்றப்பின்னணி உள்ளவேட்பாளரை நிராகரிக்க வழிவகுக்கிறது.

கட்சிகளின் நிதிநிர்வாகத்தில் தற்போதுள்ள நிலை பற்றியும், தேவையான மாற்றங்கள் பற்றியும் சொல்லவும்?

எந்தக் கட்சியும் நேர்மையாக இயங்க, தங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல, தேர்தல் செலவுகளை சமாளிக்க நிதி தேவையாக உள்ளது. நம்நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கான நிதிநிர்வாக சட்டங்கள் போதுமானதாக உள்ளது. உதாரணமாக சட்டமன்றத் தொகுதிகளுக்கு 10 லட்சம், பாராளுமன்றத் தொகுதிகளுக்கு 25 லட்சம் என தேர்தல் செலவு உச்ச வரம்பு உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் 3 வருட சராசரி நிகர லாபத்தில் 5% வரை கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம். நன்கொடைகளில் ரூ.20,000- க்கும் மேற்பட்ட தொகை இருப்பின் அதன் விவரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடமும், பொது தளத்திலும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் சட்டம் உள்ளது. இதன் மூலம் பெருமளவில் அரசியலில் கருப்புபணம் குறையும். இந்தச் சட்டங்கள் ஏட்டளவில் இருப்பினும் திருப்திகரமாக செயல்படுத்த ஒழுங்கு பெற வேண்டும். மேலும் அரசே கட்சிகளின் தேர்தல் செலவை ஏற்பது என்பதும் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்தமாகும்.

கட்சி அளவில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் என்ன?

உட்கட்சி ஜனநாயகம் மற்றும் கட்சி செயல் பாடுகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்தல், மகளிர் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தல் ஆகிய கட்சி அளவில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகும். மேற்கூறிய சீர்த்திருத்தங்கள் பற்றி விரிவாக நம் விசில் இதழிலேயே கட்டுரைகள் வந்துள்ளன. இது தவிர கட்சி தாவல் தடைசட்டத்தை வலுப்படுத்துவதும் முக்கியமான சீர்திருத்தம்.

தேர்தல் முறைகளில் என்ன மாற்றம் தேவை?

மிக முக்கியமான மாற்றம் தற்போது பின்பற்றப்படும் எப்.பி.டி.பி. முறையில் இருந்து விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு மாற்ற வேண்டும். இது பற்றி தொடர் கட்டுரை நம் விசில் இதழில் ஜுன் 2012 முதல் ஆகஸ்ட் 2012 வரை வெளிவந்தது. இது தவிர வாக்காளர் சேர்க்கை பணியை எளிமைப்படுத்துதல், தபால் நிலையங்களை வாக்காளர் பதிவு செய்யும் இடமாக மாற்றுதல், தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகிய மாற்றங்கள் பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். மேலும் உள்ளாட்சி மற்றும் மாநில தேர்தல்களில், உள்ளாட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகிய பதவிகளுக்கு நேரடியாக தேர்தல நடத்துவதும் ஒரு தேவையான சீர்திருத்தம். இதுபற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.

– நாராயணன், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக் குழு

Categories: Article, Feb 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: