அமெரிக்க வரலாற்றின் சகாப்தம் ஆபிரகாம் லிங்கன்

Friday, April 5th, 2013 @ 1:48PM

அமெரிக்காவில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் நாம் அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று போதனை செய்தார். அவர் தன் உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள், என்று கேட்டார்.அனைவரும் கை தூக்கினர். ஒரு ஏழை சிறுவனைத் தவிர.

உடனே அந்த பாதிரியார் அந்தச் சிறுவனிடம்,தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம்தான் செல்ல விரும்புகிறாயா. என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், சொர்க்கத்தையும் விரும்பவில்லை நரகத்தையும் விரும்ப வில்லை, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகின்றேன், என்றான். உடனே கோபம் கொண்ட பாதிரியார் இந்தச் சிறிய வயதில் மனம் கடவுளை விட பதவியைத்தான் விரும்புகிறதா? என்று கேட்டார். அந்தச் சிறுவனோ அமைதியாக இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம்தான் சரியாக இருக்கும், என்று கூறினான். அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான். அந்தச்சிறுவன்தான் அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். மனித இனத்திலே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கி விட்டது.

பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக்கொண்டு மனிதன் பிரிவதும் பேதம் காண்பதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலை சிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஏழைக்குடும்பத்தில் 1809 பிப்ரவரி 12ம் தேதி ஆபிரகாம் லிங்கன் பிறந்தார். பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. ஒரு முறை நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அவர் மனம் துடித்தது.இந்த கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என விரும்பினார். அதற்கான வழி முறைகளைக் கண்டறிய முற்பட்டார். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே இது போன்ற அடிமைத்தனங்களை ஒழிக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார். 1834 இல் முதன் முதலாக சட்ட மன்றத்தேர்தலில் லிங்கன் போட்டியிட்டார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். 1861இல் அமெரிக்க குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நடந்தது. அதிலும் லிங்கன் போட்டியிட்டார். லிங்கன் மக்களை மட்டுமே நம்பினார். ஆனால் அவரை எதிர்த்தவர்களோ தங்கள் பண பலத்தா லும், படை பலத்தாலும், பதவியின் துணையாலும் வெற்றி பெற்று விடலாம் என எண்ணினார்கள். ஆனால் இறுதியில் லிங்கன் வெற்றி பெற்றார்.

ஐக்கிய அமெரிக் காவை பிளவுபடாமல் காக்க தென் மாநிலப் பிரிவினைக் கருத்துடையவர்களை எதிர் கொண்டு உள் நாட்டுப்போர் நடத்தி வெற்றி கண்டார். 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ் பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து 1865ல் அமெரிக்காவின் 13வது அரசியல் சட்டத்திருத்ததின் வழி அடிமை முறையை ஒழித்தார். “மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி” என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ் பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும்.லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும் மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது. அமெரிக்க வரலாற்றில் ஆபிரகாம் லிங்கன் ஒரு சகாப்தம்.

Categories: Article, March 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: