இது யாருக்கு வெற்றி?

Tuesday, April 2nd, 2013 @ 9:18PM

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

தமிழக அரசின் கடின உழைப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றி! இது எதற்கான பாராட்டு என்ற உங்களின் கேள்விக்கு பதில் இதோ- அன்று சட்டப்பேரவை கட்டிடத்தை மருத்துவ மனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவிற்கு பசுமை தீர்ப்பாயத்தின் பச்சைக்கொடி தீர்ப்புதான் அது. அதனை இப்படிச்சொல்லிதான் அதிமுகவினர் கொண்டாடினர். தீர்ப்பு வந்த மறு நிமிடமே டாக்டர்களும், மருத்துவ மனை ஊழியர்களும், ஏன் நோயாளிகளும் கூட அனுப்பப்பட்டு உடனே மருத்துவமனை துவங்கி விட்டது.

இந்தத் தீர்ப்பு கடந்து வந்த பாதையில் மீண்டும் உங்களை கூட்டிச்செல்ல விரும்பவில்லை. ஆனால் இத்தீர்ப்பு குறித்து மக்களின் மன நிலை என்ன? அது சொல்லும் செய்தி என்ன? என்பதைத்தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

அரசின் இந்த முயற்சிக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி என என்ன காரணம் சொன்னாலும் இது சீர்கெட்டு வரும் நம் அரசியல் கலாச்சாரத்திற்கு ஓர் உதாரணமாகவே பார்க்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதையும், ஒரு பொதுச்சொத்தை திறம்பட நிர்வகிக்க முடியாததையும் தமிழக அரசியல் கட்சிகள் பெரிது படுத்தியதாக தெரிய வில்லை. மாநிலத்திற்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் எந்த ஒரு முடிவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுதல் என்பதை யோசிக்கவே முடியாத நிலையில்தான் உள்ளது. இந்தியாவின் இதர மாநிலங்களில், ஏன் நம் அண்டை மாநிலங்களில் கூட மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து எதிரெதிர் கட்சிகள் கூட ஒன்றிணைந்து செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் நம் தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் இந்த நேரத்தில் கூட ஒன்றிணைந்து செயல்படுவோம் என நம் அரசியல் கட்சிகள் முன்னெடுப்பதில்லை.

இதற்கு அரசியல் கட்சிகளைத்தாண்டி மக்களாகிய நாம் எவ்வாறு காரணமாக இருக்கிறோம் என்பதை எண்ணிபார்க்க வேண்டும். இது நாட்டின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் தாண்டி தீய அரசியலால் எவ்வளவு ஆழமாக நாம் பிளவு பட்டுக்கிடக்கிறோம் என்பதையே காட்டுகிறது. எனவே மாற்றம் ஏற்பட வேண்டியது நம் ஆட்சியாளர்களிடம் மட்டுமல்ல நம்மிடமும்தான். எதிரிக்கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து முன்னேற்றத்தை முன் வைக்கும்  அரசியலை ஊக்குவிக்கும் பொறுப்பு வாக்காளர்களாகிய நம்மிடம்தான் உள்ளது.

– நந்தகுமார்

Categories: Article, March 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: