என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?

Tuesday, April 30th, 2013 @ 8:19AM

பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

என்பது பாரதியின் கூற்று.

உலகிற்கே கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் கற்றுக்கொடுத்த நாடு நம் நாடு. அதிலும் தமிழ் நாட்டைப்பொருத்தவரை, “கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய மூத்த குடி” என்று வழக்கு மொழி உண்டு.

ஆனால் இன்று நம் நாட்டின் நிலை என்ன? எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் நம் நாட்டை சிங்கப்பூர் போல மாற்றுவோம். என்று கூறுகிறார்கள். அப்படி சிங்கப்பூரில் என்ன இருக்கிறது? நம் நாட்டில் என்ன இல்லை? என்பது மனதில் எழும் கேள்வி. சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்குமான ஒப்பீடு மடுவுக்கும் மலைக்குமான ஒப்பீடு. சிங்கப்பூர் என்பது உண்மையில் ஒரு நகரம். 710 சதுர கி.மீ உள்ள ஒரு நகரம். ஆனால் இந்தியா 33லட்சம் சதுர கி.மீ பரப்பளவுள்ள பரந்த நாடு. சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம் மட்டுமே. இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டி விட்டது. சிங்கப்பூரில் ஒரு சதுர கி.மீட்டருக்கு 7022 பேர் வசிக்கிறார்கள். இந்தியாவில் ச.கி.மீ 360 பேர் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் இரண்டு ஆறு மட்டும் உள்ளது. இந்தியாவில் 12 பெரிய ஆறுகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு ஆறுகளும் ஓடுகின்றன. சிங்கப்பூரில் விவசாயம் கிடையாது. அங்கு உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு. அரிசி, கோதுமை மிக அதிக அளவில் விளைகின்றன. பால், முந்திரிக்கொட்டை, தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியா. உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கையையும் (281 மில்லியன்) அது கொண்டிருக்கிறது. கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, உள்நாட்டு மீன் ஆகியவற்றில் உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு. புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக அளவிலான பழங்கள் உற்பத்தியில் இந்தியா 10 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது, அதில் வாழை மற்றும் சப்போட்டா உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சிங்கப்பூரில் குடி தண்ணீர் மலேசியா, இந்தோனேசியா நாடுகளிலிருந்து விலைக்கு வாங்கப்படுகிறது. இந்தியா பரந்து விரிந்த குடி நீர்ப்பரப்பு கொண்டது. சிங்கப்பூரில் கனிமங்களோ, கனிமச்சுரங்கங்களோ இல்லை. இந்தியாவில், நிலக்கரி, இரும்பு, மாங்கனீஸ், மைக்கா, பாக்ஸைட், காப்பர், யுரேனியம், ஜெம்ஸ், கிராபைட், ஜிப்சம், எமரால்ட், தங்கம், பெட்ரோல் போன்ற கனிமங்கள் கிடைக்கின்றன. சிங்கப்பூரில் வெப்பமும், மழையும் உள்ள ஒரே பருவ நிலை மட்டும் தான். இந்தியாவில் நான்கு பருவங்கள் உள்ளன. சிங்கபூரில் சுற்றுலாத்தலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இந்தியாவில் எண்ணற்ற சுற்றுலாத்தளங்கள் உள்ளன.

Singapore

அப்படியென்றால் இந்தியாதானே உயர்வாக உள்ளது. நம் அரசியல்வாதிகள் ஏன் சிங்கப்பூராக மாற்றப்போவதாகச் சொல்கிறார்கள்? இப்போது அதன் மறுபக்கத்தை பார்ப்போம். மிகக்குறைந்த சுற்றுலாத் தலங்களையுடைய சிங்கப்பூருக்கு ஆண்டிற்கு சுமார் 17 மில்லியன் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். மிகப்பரந்த சுற்றுலாத்தளங்களையுடைய இந்தியாவில் 6.3 மில்லியன் வெளி நாட்டு சுற்றுலாப்பயயணிகள் மட்டும்தான் வருகிறார்கள். சிங்கப்பூர் பசுமை நகரமாகத்திகழ்கிறது. மிகவும் தூய்மையான நகரமாகத்திகழ்கிறது. 24 மணி நேரமும், குடி தண்ணீர், மின்சாரம் கிடைக்கிறது. மின் வெட்டு இல்லை. சொகுசான பொது போக்குவரத்து, அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் பெறக்கூடிய ஏற்பாடு. போன் செய்தால் பத்து நிமிடங்களில் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வந்து விடும். பில்லில் உள்ள கட்டணம் செலுத்தினால் போதும். அனைவருக்கும் வேலை வாய்ப்பு. தரமான பொருள் விற்பனை. மிக விரைவான, மரியாதையான, கையூட்டு இல்லாத அரசு சேவை, என அனைத்து துறைகளிலும் முன்னுதாரணமாகத்திகழ்கிறது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1996 இல் ரூ.24. அது தற்போது ரூ.45 ஆக உள்ளது. நம் நாட்டின் நாணய மதிப்பு ஏன் இவ்வளவு சரிந்தது? எந்த இயற்கை வளமும் இல்லாத ஒரு சிறிய நாடு எல்லாத்துறைகளிலும் முன்னேறியிருக்கும் போது, எல்லா வளமும் உள்ள நம் நாடு பின் தங்கியதற்கு காரணம் என்ன? உலக வங்கியில் கோடிக்கணக்கான டாலர் கடன் வாங்கியிருக்கிறோமே? ஏன்? ஒரு திரைப்படப்பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்?”, எல்லா வளமும் இருந்தும் நம் நாடு ஏழை நாடாக இருப்பதற்கு காரணம்:

  1. சுய நலம் மிக்க அரசியல்வாதிகள், அவர்களைத்தேர்ந்தெடுக்கும் நாட்டைப்பற்றி அக்கறை இல்லாத சுய நலம் மிக்க மக்கள்.
  2. முறையற்ற அரசு நிர்வாகம்.
  3. நல்லவர்கள் அரசியலுக்கு வர பயப்படுதல்.

கேஸ் சிலிண்டருக்கு 30ரூபாய் லஞ்சம் வாங்குபவர், ஃபீஸ் போடுவதற்கு 100ரூபாய் லஞ்சம் வாங்கும் மின் ஊழியர், பொதுமக்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் காவல் துறையினர், பெரும்பாலும், லஞ்சம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது என செயல்பட்டுகொண்டிருக்கும் அரசு அலுவலகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டில் ஊழல் செய்து, கொள்ளையடித்து  சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டம் தீட்டும், பெரும்பான்மையான அரசியல்(வியாதிகள்)வாதிகள் என்று கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை புரையோடிப்போயிருக்கும், லஞ்சம் ஊழல், இவைதான் இன்றைய நம் நாட்டின் நிலைக்கு காரணம். நல்லோர் ஆட்சி மலரப்போகும் காலம் வருமா? நம் கவலையெல்லாம் தீரப்போகும் காலம் வருமா???

Categories: April 2013, Article, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: