கடிதம்

Monday, April 8th, 2013 @ 5:42PM

srilanka-indiaசகோதரா,

இந்த இதழில் இனம் சார்ந்த பார்வையயும், அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அதன் அரசியல் அசைவுகளையும், அதிர்வுகளையும் நாம் ஆலோசனை செய்வோமா. இது எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்று உனக்கு புரிந்திருக்கும் இப்போது. ஆம். தமிழ் ஊடகங்களில் வெளிவந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொலையுண்ட தகவல்கள்தான்.

முதலில் இனம் சார்ந்த வெறியாட்டத்தின் நிகழ்வுகளை பார்ப்போம். பின் குறிப்பாக இலங்கையின் நிகழ்கால, கடந்தகால சமன்பாடுகளைப் பார்த்து அதன் அரசியல் பன்முகத்தன்மைக்குள் புகுவோம்.

சகோதரா இரண்டாம் உலகமகா யுத்தம் நடந்த போது நான் இந்த பூமிப்பந்திற்கு வந்திருக்கவில்லை. உன்னையும் அது போல் உருவகித்துக் கொள்கிறேன். ஹிட்லர் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். அவர் யூதர்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட இனத்துவேசம் எவ்வளவு கொடுமையானது. முன் நின்று பார்க்கவில்லை. ஆனால் எழுத்தில் படிக்கும் போதோ அல்லது சினிமாவில் காணும்போதோ மனம் பதைத்து விடுகிறாது. “ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்” எடுத்து விட்டு ஸ்பீல்ஸ்பெர்க் உறக்கம் கெட்டு சுற்றினாராம். சரி அது போகட்டும் நாம் எல்லோரும் அறிந்த இந்த தகவல் நமக்குள் என்ன பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. ஹிட்லர் ஒழிந்தார் என்ற தகவல் ஒருவித நிம்மதியை தந்து இருக்கலாம்., அல்லது இது பழங்கதையாயிற்றே என்று புறக்கணித்து விட்டு அன்றாட தேவைகளில் அமிழ்ந்து விடுகிறோம் அல்லவா?

சரி சகோதரா, இஸ்ரேலிலிருந்து இலங்கைக்கு வருவோம். இங்கு இது உரக்கப் பேசப்படுவதன் காரணம் என்ன? ஓ நாம் தமிழர்கள் அல்லவா அதனால்தான், தானாடவிட்டாலும் தசை ஆடுகிறதோ. சகோதரா சினிமா கொட்டகைகள் காலியாகிவிட்டதா? உணவகங்கள் ஆள் இல்லாமல் உறங்குகிறதா? அல்லது டாஸ்மாக் கடைகள் இலாபம் குறைந்து மூடுவிழாவை எதிர் நோக்குகிறதா? ஒன்றும் வேண்டாம் இந்த ஊடகங்கள்தான் தமிழை அழகாக உச்சரிக்க தொடங்கிவிட்டனவா? ஒரு 24மணி நேர உல்லாச ஊர்வலத்தில் ஒரு நிமிடச்செய்தி அல்லவா அந்த பாலகனின் மரணச்செய்தி . நடிகைகள் நளினமாய் வந்து கொச்சையாய் தமிழை கொலை செய்கிறார்கள். சிறுவர் சிறுமியரைப்பாட வைத்து குடும்பத்துடன் உட்கார்ந்து கூத்து அடிக்கிறார்கள். இதற்கு இடையே இனப்பற்றை தினித்து நம்மை நகைப்புக்கு உள்ளாக்குகிறார்கள். நாம் சுயநலவாதிகளாய் மாறி வெகு காலம் ஆகிவிட்டது. எதற்கும் எதையும் இழக்க நாம் தயாராக இல்லை. சுதந்திர தினம் ஞாயிறு அன்று வந்தாலே, நாம் கோபப்படுகிறோம். இந்நிலையில் இனச்சிந்தனை எப்படி வரும். சகோதரா.

சரி இதன் அரசியல் ஆட்டத்தைப் பார்ப்போம். இங்கு இதற்காக குரல் கொடுக்கும் யாரேனும் கடந்த 25 ஆண்டுகளில் இலங்கைக்கு சென்று வந்ததுண்டா? அரசியலுக்காக அங்கு ஒரு போராட்டக்குழுவை வளர்த்து விட்டோம். ஒருமுறை நண்பன் மறுமுறை பகையாகி அவர்களை “பரதேசிகள்” ஆக்கினோம். அரை மணி நேரம் உண்ணாவிரதம் கொத்து குண்டுகளை ஏவாமல் இருக்க, சத்தியம் என்ன? நாம் என்ன மக்களா? அல்லது மாக்களா? ஒரு தலைவர் பொருளாதார தடை பற்றி பேசுகிறார். அவர் குடும்பம் விமானம் விட்டும்,விளையாட்டு வீரர்களை வாங்கியும் அந்நாட்டோடு சம்பந்தம் கொள்கிறது. நம்மை போராட அழைக்கிறது. இங்கு எல்லோருக்கும் இலங்கை தமிழர்களும், தமிழ் என்னும் வார்த்தையும் பிழைப்பு தரும் முதலாளிகள். அவ்வளவே, உண்மையான அக்கறை உள்ளவர்கள் அதிகாரம் பெறவே முடியாது. மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேண்டுமானால் ஓட்டுக்காக நடத்தலாம். உலகிற்கே தெரியும் அங்கு நடந்த இனப்படுகொலையின் நாயகன் மத்தியில் ஆளும் காங்கிரஸ்தான் என்று. ராஜபக்ஷேவிற்கு தெரியும். நமதுபிரதமரையும் அதிகாரிகளயும் வேலை வாங்க.

1982 ஆம் ஆண்டு தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் இவர்களை வெலக்கடை சிறையில் சின்னா பின்னப்படுத்தினார். இதோ இன்று அதே சிறையில் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உள்ளே இருக்க வைக்கப்பட்டார். பொய்முகம் காட்டும் அரசியல் விகட கவிகளை நம்பி நம்மை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

தெய்வம் நின்று கொல்லூம்… மாநுடம் வெல்லும்.

– நெமோ

Categories: Article, March 2013, Whistle, கடிதம்

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: