களவாடப்படும் குளங்கள்

Friday, April 5th, 2013 @ 1:40PM

கோவை 200 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் சார்ந்த ஊராக இருந்தது. ஆங்கிலேயர்கள் பவாயையும் தாராபுரமும் தலைமையிடமாகக் கொண்டு நிர்வகித்து வந்தார்கள். அச்சமயத்தில் ஸ்டேன்ஸ் என்பவர் முதன் முறையாக ஒரு ஆலையைத் துவங்கினார். அதற்கு வேண்டிய மின் உற்பத்தியை துவங்கினார். கோவை ஒரு தொழில் நகரமாக உருவாக வித்திட்டவர் அவரே.

கோவை விவசாய பகுதியாக விளங்கியதற்கு ஆதாரமாக விளங்கியது நொய்யல் ஆறும் கோவையில் அமைக்கப்பட்ட குளங்களும் ஆகும். விவசாயப் பல்கலைக் கழகம் கோவையில் அமையும் அளவிற்கு கோவையில் விவசாயம் சிறப்பாக இருந்தது இங்கிருந்த குளங்கள் அனைத்தும் மழை நீரை சேகரித்து வருடம் முழுவதும் விவசாயம் செய்வதற்காக சோழர்களால் ஏற்படுத்தப்பட்டவை. நம் முன்னோர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து ஓடி வரும் மழை நீரை அதன் பாதையிலேயே குளங்களைக்கட்டி தேக்கி வைத்தனர். இந்த குளங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரு குளம் நிரம்பியவுடன் மதகு திறக்கப்பட்டு அதன் நீர் அடுத்த குளத்திற்கு செல்லும். இவ்வாறு சுமார் 30 கி.மீ வரை குளங்கள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. இறுதியாக உபரி நீர் நொய்யல் ஆற்றில் விடப்படும்.

ஒன்று வளர்ந்தால் ஒன்று குறையும் என்பது போல் தொழில் வளர்ச்சி கோவையில் பெருக பெருக விவசாயம் குறைய ஆரம்பித்து விட்டது. விளை நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாறின. குளங்க ளில் வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டப்பட்டன. யாரும் இதை தட்டிக்கேட்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. விவசாயிகள் கூட கண்டு கொள்ளவில்லை. இந்த சமூக அக்கறையின்மையே நமது நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். இந்தக் குளங்களில் தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமின்றி அரசாங்கமும், மாநகராட்சியும் அதை சார்ந்த துறைகளுமே ஆக்கிரமிப்பு செய்துள்ளன.புளியகுளம் என்னும் பகுதியில் குளம் எங்கிருந்தது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஊராகி விட்டது. அம்மன் குளம் ஊராகி அதன் மையப்பகுதியில் மாநகராட்சி அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டி அது மக்கள் குடியேறுவதற்கு முன்னரே சாய்ந்து நின்றது. இப்பொழுது வாலாங்குளத்தில் சிறு சிறு வீடுகளாக புதிய வீடுகள் முளைத்தவன்னம் உள்ளன. பாதி குளம் வரை ஆக்கிரமிப்புகள் வந்தாகி விட்டது.மாநகராட்சியோ பொது மக்களோ, தன்னார்வத்தொண்டு நிறுவனங்களோ கண்டு கொள்ளாமல் உள்ளன. ஏழைகள் என்றபோர்வையில் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருக்கிறது. குளங்களில் வீடு கட்டினால் பாம்பு வராமல் இருக்குமா? பாம்புகள் வராமல் தடுக்க தடுப்புச்சுவர் கட்டித் தரச் சொல்லி கோவையின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.மாவட்ட ஆட்சியருக்கு அந்த மக்களுடன் சென்று மனு கொடுத்துள்ளார். இதன் பின் புலமாக அரசியல் சக்திகளும் இருப்பதாக தெரிகிறது.

மக்கள் தவறு மேல் தவறு செய்கிறார்கள். தவறு பெரிதாகவும் செய்கிறார்கள்.

– சபாபதி பழனிச்சாமி

Categories: Article, March 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: