கழிவு நீர் குழிகளா? விபத்துக் குழிகளா?

Saturday, April 13th, 2013 @ 10:17PM

சென்னை குடிநீர் வாரியம் இனியாவது அக்கறை கொள்ளுமா?

“இது இப்போ புதுசா போட்ட கழிவு நீர் குழாய்ங்க, அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சு.”

சென்னை பெருநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 130, கங்கை அம்மன் கோவில் தெருவில் புதிதாக போடப்பட்ட கழிவு நீர் குழாய் ஒன்று சாலையில் புதைந்து ஒரு பெரிய பள்ளம் உண்டாகியிருந்தது. அங்கிருந்த பொது மக்கள் ஒருவரின் வார்த்தைதான் முதல் வரி.

நாம் அங்கு நிற்கும் போதே இரண்டு-சக்கர வாகனம் ஒன்று குழிக்குள் விழுந்து சிறிய விபத்து ஏற்பட்டது. அந்த வார்டு கவுன்சிலரை நாம் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மூலம் தொடர்பு கொள்ள வைத்தோம். கவுன்சிலர் ‘பிஸியாக’ இருப்பதாகவும், இன்னும் 1 வாரத்திற்குள் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த பகுதி மக்களிடம் மீண்டும் சென்றோம். 2 வாரங்களாக இந்த குழி இருப்பதாக தெரிவித்தனர். அந்த வார்டை சேர்ந்த குடிநீர் வாரியம் சென்றோம். துணை பொறியாளர் ‘ரவுண்ட்ஸ்’ சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட, அவரின் உதவியாளர் நம்மோடு அந்த சாலைக்கு வந்தார். உடனடியாக (இன்னும் 1 அல்லது 2 நாட்களில்) வேலை செய்வதாக உறுதி அளித்தார்.

2வது நாள் துணை பொறியாளரை அழைத்தோம். குழி 2 நாட்களாகத்தான் இருப்பதாகவும் இன்னும் 2, 3 நாட்கள் ஆகலாம் எனவும் கோபமாக தெரிவித்தார்.மாவட்ட ஆட்சியரிடம் மனு, இன்னொரு புகார் மனு வேலையை ஒருவழியாக முடித்தது.

ஒரு குழி விபத்து உண்டாக்கும் என தெரிந்தும் அரசு அதிகாரிகள் ஒருவர் கூட அதற்கான நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. 2 வாரங்களாக ஒரு சாலையில் குழி இருக்க, துணை பொறியாளர் எங்கு ‘ரவுண்ட்ஸ்’ செல்கிறார் என்பது நமக்கு புரியவில்லை. நம் அடிப்படை உதவிகளை கூட நம்முடைய கேள்விகளும், போராட்டமுமே பெற்றுத்தரும் என்பது வேதனையளிக்கிறது. தொடர்ந்து கண்காணிப்போம்.

Categories: Activities, April 2013, Article, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: