சென்னை குடிநீர் வாரிய குறைதீர்ப்புக் கூட்டம்

Tuesday, April 9th, 2013 @ 10:00PM

சென்ற மாதம் அம்பத்தூர் மண்டலப் பிரச்சினைகளுக்காக சென்னைக் குடிநீர் வாரியக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் இந்த முறை பங்கெடுத்தது தேனாம்பேட்டை குடிநீர் வாரிய குறைதீர்ப்புக் கூட்டத்தில். அதற்கு ஒரு காரணமும் உண்டு.

தேனாம்பேட்டை மண்டலம் 120-வது வார்டில் உள்ள இ.டிப்போ தெருவில் நீண்ட நாட்களாக சாக்கடை அடைத்து வழிந்தோடி வந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு தங்களால் முடிந்த போராட்டங்களை அப்பகுதி மக்கள் செய்து வந்தனர். உச்சகட்டமாக சாலைமறியல் வரை செய்தனர். இந்தப் போராட்டங்களுக்குத் தற்காலிகத் தீர்வென குடிநீர் வாரியம் ஒன்றை வழங்கியது – அது வழிந்தோடும் கழிவு நீருக்கான ஒரு குழி.

அந்தக் குழி சுமார் 3 மாதங்களாகத் திறந்து கிடக்க அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளாலும் நாற்றத்தாலும் பெரும் அவதிக்குள்ளானார்கள். அந்தப் பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணும் பொருட்டு நாம் இந்தக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் பங்கெடுத்தோம்.

அதற்கு முன் காலை 5 மணி முதல் இந்தப் பிரச்சினை குறித்த மக்களின் கருத்தறிய அவர்களிடத்தே கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கினோம். 2 மணி நேரத்தில் சுமார் 300 குடும்பங்கள் இட்ட கையெழுத்து பிரச்சினையின் வீரியத்தை உணர்த்துவதாய் அமைந்தது.

அந்தக் கையெழுத்துகளோடு நம் சார்பாக ஒரு மனுவும் தயார் செய்து கூட்டத்தில் பங்கெடுக்கச் சென்றோம். நம் மனுவையும் மக்களின் கையெழுத்துகளையும் பார்த்த அதிகாரி 10 நாட்களில் இப்பிரச்சினையை சீர் செய்வதாக உறுதியளித்தார்.

முதல் கட்டமாக ஒரே நாளில் அந்தக் குழியைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் வைக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அந்தக் குழி முழுவதுமாக மூடப்பட்டது. ஆயினும் இது நீண்டகாலத் தீர்வாகாது. இப்பிரச்சினை முடியும் வரை நம் பயணம் தேனாம்பேட்டையில் தொடரும்.

Categories: Article, March 2013, Whistle, அரசு அலுவலகங்கள் பார்வையிடல்

1 Comment to "சென்னை குடிநீர் வாரிய குறைதீர்ப்புக் கூட்டம்" add comment
Sureshkumar M
April 10, 2013 at 1:27 pm

Happy to hear, really a good effort, Much appreciated. Please keep up the good work.

Leave a Reply

%d bloggers like this: