தமிழகத்தில் இளைஞர்களின் எழுச்சி

Monday, April 29th, 2013 @ 8:43PM

students-protestமார்ச் 8, அந்த நிகழ்வை தமிழகமே தன் புருவத்தை உயர்த்திப் பார்த்தது. சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ‘ஈழத்தமிழர் பிரச்னை’ தொடர்பாக உண்ணாவிரதம் தொடங்கினர். இவ்விசயத்தில் அக்கறை கொண்ட சில அரசியல் தலைவர்களும், மற்ற கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தனர். இந்த போராட்டம் மக்களின் பேராதரவை பெறவில்லை என்றாலும், சில ஊடகங்கள் நல்ல ஆதரவைக் காட்டின.

நேரம் பார்த்துகொண்டிருந்த காவல்துறை திடீரென மூன்றாம் நாள் நள்ளிரவில் மாணவர்களை தூக்கிகொண்டு போனது. பலரும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவே, அவர்கள் உடல்நிலை மோசமானதால் தான் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி வந்தது என காரணமும் சொன்னது. ஆனால் எதிர்பாராத விதமாக அனைத்து கல்லூரி மாணவர்களும் தனியாகவோ, ஒன்றினைந்தோ உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் குதித்தனர்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம் வலுவடைவதை கண்ட தமிழக அரசு ‘சட்டம் – ஒழுங்கை’ காரணம் காட்டி மார்ச் 15ஆம் தேதி அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடச் சொல்லியது. இந்த மாணவர் போராட்டம் குறித்து ஆராய்வதற்கு முன் இது போன்ற பிரச்னையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கண்ணாமூச்சி ஆடிகொண்டிருந்த வேளையில் மாணவர்கள் வீதியில் இறங்கியது ஒரு நல்ல முன்னுதாரணமாகவே தோன்றுகிறது. அதே போல் பெரும்பான்மையாக நடந்த அமைதிவழி போராட்டங்களும் பாராட்டத்தக்கது.

இளைஞர்கள் அரசியல் களத்தில் நடக்கும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் ஒன்றுபடவும், வீதியில் இறங்கவும் தயங்கமாட்டர்கள் என்பதை எல்லாருக்கும் புரியவைத்திருக்கிறார்கள். ஆனால் முதலில் அமெரிக்க தீர்மானத்தின் குறைபாடுகள், தேவைப்படும் திருத்தங்கள் என தெளிவான குறிக்கோளோடு ஆரம்பித்தவர்கள், பின் ராஜபக்சேவிற்கு தூக்கு வேண்டும் என உணர்ச்சிவசப் படவும் செய்தார்கள்.

மார்ச் 19 அன்று திடீரென விழித்துக் கொண்ட திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து ‘ விலகல்’ முடிவை அறிவித்தது. உண்மையில் சொல்லப் போனால், இந்த ‘கபட’ நாடகத்தை பல முறை ஒத்திகை பார்த்து விட்டதால் யாரிடத்தும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சோனியா காந்தியே ‘இதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை’ என்று தான் சொன்னார். ஆனால் காலம் கடந்த இந்த முடிவிற்கு  ‘மாணவர் போராட்டமும்’ ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

இப்போராட்டத்தின் இன்னொரு பக்கத்தையும் நாம் கண்டிப்பாக ஆராய வேண்டும். இன்று தமிழகத்தில் இது மட்டும்தான் தலையாய பிரச்னையா? கல்வி, மருத்துவம், மின்சாரம் என பல்வேறு பிரச்னைகளில் தினமும், பொது மக்களும் சக மாணவர்களுமே அவதிப்படும்போது அது அவர்களை உந்தித்தள்ளாதது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டே இருக்கபோகிறோம். மக்களின் பிரச்சினைகளை அரசும், அரசியல் கட்சிகளும்   கைகழுவும் நோக்கிலேயே இந்த மொழி, இன உணர்வுகளை கையிலெடுத்து கொள்கின்றன. இளைஞர் கூட்டமும் இதற்கு பலியாவது துரதிஷ்ட வசமானது. அதே போல் எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் எங்களுக்கு வேண்டாம் என்று போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசப்படுவதை தடுத்தது நல்ல முடிவு போல தோன்றினாலும் நம்முடைய இந்த மோசமான நிலைக்குக் காரணமே இளைஞர்களின், மாணவர்களின் தொடர்ந்த அரசியல் புறக்கணிப்பு தானே. தீய அரசியலுக்கு மாற்று அதிலிருந்து விலகி ஓடுவதல்ல, நல்லவர்கள் பங்கெடுப்பதும், பங்கெடுக்க வைப்பதும்தான்.

இறுதியாக இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில், இளைஞர்கள் என் படிப்பு, என் வேலை, என் குடும்பம் என்பதைத் தாண்டி ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை நீடிக்கட்டும்….. மக்கள் பிரச்னைக்கும் உங்கள் கரங்கள் நீளட்டும்….

– நந்தகுமார்

Categories: April 2013, Article, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: