நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்

Thursday, April 25th, 2013 @ 12:59PM

கூட்டுறவு சங்கத் தேர்தல் அரசு அறிவிப்பு வெளிவந்தவுடன் அநேகரின் மனதில் தோன்றிய எண்ணம்தான் – இது நடக்குமா நடக்காதா என்று. ஏனென்றால் 1901-ல் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் ஆகியவை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் அரசு நிவாகிகள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1996 ல் தி.மு.க ஆட்சிக்காலத்தில் , முதல் முதலாக பஞ்சாயத்துத் தேர்தல் நடைமுறைப்படி கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்த முடிவெடுத்து 1997 ல் சங்க உறுப்பினர்களால் முறைப்படி தலைவர் துணைத்தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போதே இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆளும் கட்சிக்காரர்கள் மட்டுமே மேற்படி சங்கங்களை நிர்வகிக்கும் உரிமையை பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

மீண்டும் 2001 ல் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அன்று அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முந்தைய ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபபெற்றதாகவும், அதனால் மேற்ப்படி சங்கங்கள் நஷ்ட்டத்தில் இயங்கிவருவதாகவும் கூறி நிர்வாகத்தை அரசு தனி அதிகாரிகள் மூலம் நடத்தி வந்தது. 2007-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலும் பாதி முடிவடைந்திருந்த நிலையில், தேர்தல் முறைகேடுகள், உறுப்பினர் சேர்க்கை முறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நீதிமன்றத்தில் தேர்தல் தடை கோறப்பட்டு, தேர்தல் ரத்து ஆனது. அதன் பின்னர் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தேர்தல் முறையாக நடைபெற்று நடைமுறைக்கு வருமா என அனைவரும் எதிநோக்கி காத்திருக்கிறோம்.

இந்த கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? இது ஒரு சாதாரன நிர்வாகத்திற்காக நடைபெறும் தேர்தல் அல்ல. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் வருடத்திற்கு பண பரிமாற்றம் நடைபெறக்கூடியதோடு மட்டுமல்லாமல் சுமார் இரண்டரை லட்ச்சத்திற்கும் மேல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படும் ஒரு நிறுவனமாகும். தலைவர், துணைத்தலைவர், இயக்குனர், துணை இயக்குனர் என சுமார் நாற்பத்தைந்தாயிரம் பதவிகளைக் கொண்ட நிர்வாகமுமாகும். எனவே இதில் அரசியல் லாபம் கருதியே அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு நிர்வாகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கின்றன. சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக்கொண்ட இந்த நிர்வாகத்தை கைப்பற்றுவதென்பது கிட்டத்தட்ட உள்ளாட்சி நிவாகத்தையே காப்பாற்றியதற்கு சமமாகும்.

முதல் கட்டமாக, வரும் ஏப்பிரல் மாதம் 5 ம் தேதி முதல் நான்கு கட்டமாக 22,192 சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 ம் தேதியன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில், 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாகவும், 32 அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாகவும் கொண்ட தனி தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 453 தனி அதிகாரிகள் மற்றும் 10 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு இந்தத் தேர்தல் முறையாக செம்மையாக நடைபெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் முறைகேடாக உறுப்பினர்கள் சேர்த்து வருவதாகவும், தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது எனவும் கூறி முக்கிய எதிர்கட்சிகளான திமுக, தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாக அறிவித்து உள்ளன. எனவே தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிப்பாகும் வரை இந்த தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது கேள்விக்குறியே.

Categories: April 2013, Article, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: