பட்ஜெட் 2013

Tuesday, April 2nd, 2013 @ 9:55AM

budget-2013பட்ஜெட் 2013-ன் மூலம் இந்திய பொருளாதாரத்தை மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்கக் கூடிய ஒரு பொன்னான வாய்ப்பை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இழந்துவிட்டார் என்பதே பட்ஜெட்டை உற்று நோக்கிய பெரும்பான்மையினரின் கருத்து. நம் கருத்தும் அதுவே.

1991ல் இருந்த மந்த நிலையை விட தற்பொழுதைய நிலைமை மோசமாகவே உள்ளது. அப்பொழுது ‘லைசென்ஸ் ராஜால்’ வந்த நெருக்கடி, தற்பொழுது அரசு தன் கடமையை புறக்கணிப்பதாலும், தொடர் ஊழல்களாலும் ஏற்பட்டுள்ளது.

இந்த வருட பட்ஜெட் இந்தியாவின் கடன்களை அதிகப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்திருந்தாலும் அவற்றை குறைக்கவோ அல்லது பொருளாதார வளர்ச்சிக்கோ எந்தவொரு முயற்சியையும் எடுக்க வில்லை. இது ஒரு தேர்தல் நேர பட்ஜெட் என்பது தெளிவாக புரிகிறது.

அரசாங்கம் மறுத்தாலும் இந்தியாவின் பொருளாதார சரிவு வெளிக் காரணிகளால் இல்லாமல் அரசின் கொள்கைகளாலேயே நேர்ந்துள்ளது. இந்தியா வளர்வதற்கு நிறைய தடைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை சட்டத்தின் ஆட்சியின்மை, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் நமது மோசமான கல்வி நிலை.

தன்னுடைய உரையில் ‘சமமான வாய்ப்பு, கல்வி, திறமை, வேலை, வருமானம்’ ஆகியவை வறுமையை போக்க தேவையானவை என்று உரக்க பேசிய நிதியமைச்சர் அதனை நிறைவேற்ற ஒன்றும் செய்யாதது பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது.

சட்டத்தின் ஆட்சி முறையாக இருப்பது தொழில் முனைவோரை ஊக்குவிக்கும். நில மாபியா, கடன் கிடைப்பதில் குளறுபடி மற்றும் சரியில்லாத நிலவுரிமைகள் தொழில் துறைக்கு ஊறு விளை விக்கின்றன. தொழில் மட்டுமின்றி மக்களின் அன்றாட வாழ்வு மேம்படவும் நீதித்துறை மற்றும் காவல் துறை சரியாகச் செயல்படுவது அவசியம். அதற்கு இத்துறைகளின் செலவினங்கள் அதிகரிக்கப்பட வேண் டும். ஆனால் பட்ஜெட்டில் வழக்கம் போல மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு வசதிகளை பொறுத்த வரையில் போக்குவரத்து மற்றும் மின் துறைகளை சரி செய்ய எந்தவொரு நல்ல முயற்சியும் இல்லை. கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக இருக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்வது கடினம். மின்துறை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

கல்விக்கென ஒதுக்கப்படும் நிதி பல நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவு. மேலும் அந்த நிதி முறையான திட்டங்களுக்கு சேராமல் மேம் போக்காகவே செலவிடப்படுகிறது. பிசா (PISA – மாண வர் கற்றலை மதிப்பீடு செய்யும் அமைப்பு) தேர்வில் இந்தியா கலந்துகொள்ளாதது இந்த வெட்கக்கேடை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கடந்த முறை பங்கெடுத்த 74 நாடுகளில் இந்தியா பெற்ற இடம் – 73.

வாக்கு வங்கி அரசியலை மட்டுமே குறி வைத்து தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் நம்மை இன்னும் மோசமான நிலைக்கு இட்டு செல்லும் என்பதே கசப்பான உண்மை.

– அகிலன்

Categories: Article, March 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: