விசில் – ஒரு வருட பயணம்

Friday, April 12th, 2013 @ 9:14AM

பதிப்பாக்கத்தில் பெரிய அனுபவம் இல்லை. அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ பணி செய்த எவரும் இல்லை. வாசிப்பு பழக்கம், எந்த ஒரு விசயத்தையும் உணர்வுபூர்வமாக அன்றி அறிவுப்பூர்வமாக பார்க்கும் எண்ணம், சில எழுத்து பழக்கம், சிந்தனை வடிவம் – இவை மட்டுமே கொண்டு துவங்கப்பட்டதுதான் விசில். புதிய தலைமுறைக்கான புதிய அரசியல் மாத இதழாக சென்ற ஆண்டு ஏப்ரலில் வந்தது முதல் மின்னிதழ். முதல் 6 மாதங்களுக்கு மின்னிதழ் வெளிக்கொண்டு வருவோம் என்ற நடைமுறை அறிவுடன் விசில் ‘அடிக்க’ துவங்கினோம்.

whistle-first-release

ஒரு வருட இதழ்களை திரும்பிப் பார்க்கையில் நம் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. நம் தரம் வெகுவாக உயர்ந்து வருவதை விசிலை வாசிப்பவர்கள் தொடர்ந்து சொல்வது மகிழ்ச்சிக்குரியதாய் உள்ளது. இது மக்களுக்கான அரசியல் இதழ் என்பதை “சேவைகள்” குறித்து ஒவ்வொரு மாதம் நாம் எழுதி வருவதும், ஒவ்வொரு அரசு அலுவலகத்தையும் நாம் கண்காணித்து வருவதும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

காவிரி அரசியல் குறித்த ஒரு விரிவான, அறிவுபூர்வமான கட்டுரை வேறு எந்த இதழிலும் வந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. நடைமுறைக்கு ஒத்துவரும் துறை ரீதியான, குறிப்பாக அரசியல் சீர்திருத்தங்கள் படிப்பவர்க்கு பல கதவுகளை திறந்தது என்றே சொல்ல வேண்டும். கட்சி பேதமின்றி நாட்டிற்கு உழைத்த நல்ல தலைவர்களின் வரலாறு இளம் சமூகத்திற்கு ஒரு பொக்கிஷம். கட்சி பேதமின்றி, நிகழ்கால தலைவர்களின் நேர்காணல் ஒரு சிறந்த பதிவு.

மின்னிதழ் தந்த உற்சாகம், விசில் கடந்த 4 மாதங்களாக அச்சில் ஏறி உங்கள் இல்லம் தேடி வருகிறது. எங்களுக்கான கூடுதல் பொறுப்பையும் கூட்டி வந்துள்ளது.

விசிலின் உயர்வுக்கு உழைத்த நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேலை கூட இது. விசிலுக்கு சிறப்பு கட்டுரைகள் எழுதித் தந்த பத்திரிக்கையாளர் திரு.சாவித்திரி கண்ணன், திரு. பாடம். நாராயணன், காந்தியவாதி திரு. அண்ணாமலை, திரு. அகிலன் விஸ்வநாதன் ஆகியோருக்கு சிறப்பு நன்றி. செப்டம்பர் முதல் சகோதரனுக்கு கடிதம் எழுதும் திரு. நெமோ அவர்களுக்கும், காவிரி அரசியல் தந்து, பல தலைவர்ளுடன் நேர்காணல் நடத்திய, திரு. செந்தில் ஆறுமுகத்திற்கும், சேவைகள் பற்றி சொல்லும் திரு. சிவ இளங்கோவிற்கும், தமிழகத்தின் மின்சார நிலவரத்தை புட்டு வைத்த திரு. அகிலன் அவர்களுக்கும், தேர்தல் சீர்த்திருத்தங்கள் சொல்லிய திரு. யுவராஜ் அவர்களுக்கும் நன்றி. உள்ளூர் அரசியல் தாண்டி மற்ற மாநில அரசியல் கொண்டு வந்தவர்கள் திரு.அசோக் மற்றும் திரு.நாராயணன்.

விசில் புத்தகம் சிறப்பாக வருவதற்கு மிக முக்கியமானவர்கள் – லோக் சத்தா ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக் குழு, கோவை, திருப்பூர், சென்னை மாவட்ட மற்றும் மாநில அணிகள். இவர்களின் பங்களிப்பின்றி விசில் இதழ் இல்லை.

விசில் இதழின் வடிவமைப்புக்கு ஆரம்பகாலத்தில் வடிவமைத்த முன்னாள் தொழில்நுட்ப செயலாளர் பழனி மற்றும் அதற்கு பிறகு இதுவரை வடிவமைத்து வரும் திரு.ஆயிரத்தான் சிறப்பு நன்றிக்குரியவர்கள். விசில் இதழை உங்களிடம் சரியாக கொண்டு சேர்க்கும் அலுவலக நிர்வாகி திரு.அன்பு அவர்களின் பணி அளப்பரியது.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் தன் முகம் அதிகம் வெளிச்சத்திற்கு வராத ஒருவர் இருப்பார். விசில் இதழ் சிறப்பாக இன்று வரை வருவதற்கு முக்கியமான ஒரு முகம் – முன்னாள் பதிப்பாக்க செயலாளர் திரு. நந்தகுமார். தன்னுடைய அலுவலக பணிகளுக்கு நடுவே ஒரு மாத இதழை வெளிக் கொண்டு வருவது என்பது ஒரு சுலபமான காரியம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. விசிலின் முதல் 10 இதழ்களை சிறப்பாக கொண்டுவந்தவர் நந்தகுமார். அதே வேகத்தில், இன்னும் சிறப்பாக கடந்த 2 மாத இதழ்களை கொண்டு வருபவர் திரு. சேர்மா செல்வராஜ் – இந்த வருட பதிப்பாக்க செயலாளர்.

எந்த ஒரு நற்செயலுக்கும் அதற்குண்டான செலவினங்கள் உண்டு. விசில் இதற்கு விதிவிலக்கல்ல. உங்கள் கண்களுக்கு வந்த விசிலை பல்லாயிரக்கணக்கான மக்களிடம் கொண்டுசேர்ப்பதே எங்கள் எண்ணம். அதற்கு உங்கள் நிதி உதவி அவசியமாகிறது.

ஒரு மாத இதழின் பின்னால் இருக்கும் மொத்த உழைப்பு இது. இந்த உழைப்பு யாவும் இந்த சமுதாயத்திற்கானது. ஒரு நல்ல அரசியல் மாற்றம் உருவாக மக்களுக்கு தேவையான கருத்துகளை பிரதிபலிக்கும் ஒரு கருவி இது. இந்த கருவி உங்கள் உதடுகளில் தொடர்ந்து தவழும். விசில் மேன்மேலும் ஓங்கி ஒலிக்கும்.

– விசில் ஆசிரியர் குழு

Categories: April 2013, Article, Whistle
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: