தமிழ்நாடு பட்ஜெட் 2013-14

Monday, April 8th, 2013 @ 12:25PM

அதிமுக ஆட்சியில் வேறு எந்த மாதிரியான நிதி நிலை அறிக்கையை எதிர் பார்க்க முடியும்? இரண்டரை மணி நேர நிதி நிலை தாக்கல் உரையில் வழக்கம் போல் முதல்வர் புகழ் பாடப்பட்டுள்ளது. அது இருக்கட்டும், நாம் வழக்கமாக பார்த்து வருவது தானே..!!

நிதி நிலை அறிக்கையில் தமிழக மக்கள் பயன் அடையும் வகையில் என்ன இருக்கிறது என்பதை சற்று ஆராய்வோம்.

2013-14 நிதி ஆண்டில் நம் மாநில அரசின் மொத்த வருமானம் 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த செலவு 104330 இருக்கும் எனவும் (மூலதனம் மற்றும் கடன் தவிர) இதில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஒய்வு ஊதிய தொகை மட்டுமே 59111 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மூலதனத்துக்கு 22505 கோடியும், கடன் வழங்குவதற்காக 1097 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது நம் மாநில அரசு.

விலையில்லா செலவு

வரும் நிதி ஆண்டில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி இலவசமாக வழங்க 1500 கோடி, விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்க 150 கோடி மற்றும் 5.6 இலட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க 1500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவசங்களுக்காக 3000 கோடிக்கும் மேல் ஒதுக்கி இருக்கும் நம் மாநில அரசு, கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கி இருப்பது 1300 மட்டுமே. மடிக்கணினியும் கல்விக்கு தானே என சிலர் நினைக்கலாம். ஆனால் பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பதற்கு ஏற்ப சரியான சூழல் இல்லாத போதும், போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத போதும் இலவசமாக எதை கொடுத்து என்ன பயன். இலவசமாக பஸ் பாஸ் வழங்க 324 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் போதுமான பேருந்து சேவை உள்ளதா? தினமும் மாணவர்கள் படிகளில் பயணம் செய்யும் நிலை தான் உள்ளது.

வீடுகளிலாவது படிக்கும் சூழல் உள்ளதா? பெரும்பாலான குடும்ப தலைவர்கள் டாஸ்மாக் கடை முன் தானே நிற்கிறார்கள். டாஸ்மாக் கடைகளினால் 14,469 கோடி ஆயத்தீர்வை வரி மூலம் கிடைக்கும்.

மானியம்

வரும் நிதி ஆண்டு உணவு மானியத்திற்கு 4,900 கோடி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு அரசு அங்காடிகளில் விற்கப்படும் எனவும், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ருபாய் 30-க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ருபாய் 25-க்கும் விற்கப்பட்டு வருவது அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு

நிதி ஆண்டு 2013-14 ல் கட்டமைப்புக்காக மொத்தம் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 750 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு 109.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகள் நலனுக்கு 263 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு 880 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அணைகளை பராமரிப்பதற்கு 390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைப்பதற்கு 156 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு மற்றும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வரும் நிதி ஆண்டில் பெண்ணையாறு-பாலாறு இணைப்பு திட்டங்கள் தொடங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

மின்சாரம் குறித்து புதிய அறிவிப்பு எதுவும் இல்லை. ஏற்கனேவே ஆரம்பிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மின் உற்பத்தி, வட சென்னை மற்றும் வல்லூர் மின் உற்பத்தி திட்டங்கள் வரும் நிதி ஆண்டில் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கடத்தலின் போது ஏற்படும் மின் இழப்பை குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

– யுவராஜ்

Categories: April 2013, Article, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: