நீதித்துறை சீர்திருத்தங்கள் – 1

Friday, May 17th, 2013 @ 10:46AM

சட்டமியற்றுதல் – Legislative, நிறைவேற்றல் – Executive, நீதிபரிபாலனம் – Judiciary. இவை வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு நாட்டின் உச்சபட்சமான அரசியல் சாசனத்தை, ஏன் ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பது இவை மூன்று மட்டுமே.

நம் நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றங்களும், சட்டமன்றங்ளும் சட்டமியற்ற; பிரதம மந்திரி முதல் மாவட்ட ஆட்சியர் வரை அதை செயல்படுத்த; நீதியை நிலைநாட்டும் பணியை உச்சநீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றங்கள் வரை செய்கின்றன.

CourtGavelமுதல் இருவரும் சில நேரம் நம்மை ஏமாற்றினாலும், “நீதி” என்ற ஒன்று நம்மை காக்கும் என்ற நம்பிக்கையே நம்மை வழி நடத்துகிறது. அதிலும் குறிப்பாக ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும், செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் என எல்லோருக்கும் ஒரே மாதிரியாக சட்டம் அமைய வேண்டும் எனும் “சட்டத்தின் ஆட்சி” வள்ளுவன் சொல்லிய “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை உறுதிப்படுத்துகிறது.

நாம் முழு நம்பிக்கை கொண்ட சட்டமும் நீதியும் சரியாக தன் பணியை செய்கிறதா? சட்டத்தின் ஆட்சி எல்லா இடங்களிலும் நடக்கிறதா? விரைவான, எளிதாக அணுகக்கூடிய நீதி நமக்கு வாய்த்துள்ளதா?

கசப்பான உண்மை

குற்றம் நடைபெறும் போது வழக்கை பதிவு செய்வதில் தொடங்கி இறுதி தீர்ப்பு வழங்குவது வரையிலான செயல்பாடுகள் சுமார் 15 ஆண்டுகள் வரை நீண்டு செல்வது பெரும் பிரச்சனையாக உள்ளது. சில நேரங்களில் சில நடைமுறைகள் வேகமாக நடைபெறாதது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடுகிறது. எனவே நீதி வழங்கும் முறையில் தொடர்புடைய ஒவ்வொருவரும் தங்கள் பணியை விரைவாகவும் சரியாகவும் ஆற்ற வேண்டும், அப்போதான் நீதி வழங்கப்படுவது தாமதம் இன்றி நடைபெறும்.

– உரைத்தவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர். பாலியல் பலாத்காரமோ, இல்லை வாடகை தகராறோ மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான், அது ஒன்று சரியாக நடந்தால் மக்கள் மனதில் ஏற்படும் கொந்தளிப்பையும், பெரும்பாலான வன்முறை நிகழ்வுகளையும் நம்மால் தடுக்க முடியும் அதன் பெயர் – விரைவான நீதி.

இன்றைய நிலை

கால தாமதமான நீதி

தலை நகரில் நடைபெற்ற இரண்டு பாலியல் பலாத்காரத்திலும் நாடே கொந்தளித்தது. குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது கூட தவறில்லை என ஒரு சாரார் நினைக்கிறார்கள். குற்றங்களை தடுக்க வேண்டுமானால் குற்றம் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அவர்கள் கருத்து. சட்டத்தின் ஆட்சி அதை செய்யத்தவறும் பொழுது மக்கள் வேறு உத்திகளுக்கு ஆட்படுக்கிறார்கள்.

எத்தனை எத்தனையே விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கிறது. துன்பம் தரும் கணவனிடமிருந்து தனக்கு விடுதலை வேண்டி வரும் மனைவியை சுமார் 7 வருட காலம் வரை காக்கச் சொல்கிறது நீதி.

வெறும் 100 ரூபாய்க்கு தொடங்கப்பட்ட வாடகை வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. கிராமங்களின் வயல் வரப்புகளில் நடக்கும் வாய்க்கால், வரப்பு வழக்குகள் நிறைய உண்டு. சட்டமன்ற பிரதிநிதி தவறான முறையில் ஜெயித்ததற்கு தொடுக்கப்படும் வழக்கு அவர் பதவி காலம் முடிந்து தீர்ப்பு வரும் வினோதம் இங்கு உண்டு. கால தாமதமான நீதி மக்களை பெருங்கவலை செய்ய வைக்கிறது.

கட்ட பஞ்சாயத்து

வழக்கு தொடர்பாக வக்கீல் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், “கோர்ட்டுக்கு வராம ஏதாவது ஆள் வெச்சு முடிச்சுரலாம்னா முடிச்சிருங்க” என்றார். காலதாமதமான, அணுகும் தூரத்தில் இல்லாத, மக்களுக்கு எளிமையான வகையில் புரியாத நீதி சட்ட பஞ்சாயத்து செய்ய வேண்டிய இடத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய வைக்கிறது. சட்டத்தின் ஆட்சி இல்லாது நடக்கும் கட்ட பஞ்சாயத்துகள் உச்ச பட்சமாக மரணத்தில் கூட முடிகிறது.

வாய்தா வழக்குகள்

எந்த ஒரு வழக்கிற்கும் 30 அல்லது அதிக பட்சம் 90 நாட்களுக்கு மேல் வாய்தா கூடாது என்று இப்பொழுதும் சட்டத்தில் உள்ளது. ஆனால் அவை கட்டாயமாக்கப்படாமல் (Mandatory) வெறும் அறிவுரையாக (directional) மட்டும் உள்ளது. வாய்தாக்கள் வாங்கி எப்படி ஒரு வழக்கை இழுத்தடிப்பது என்பது தமிழகத்தில் உள்ள எவருக்கும் சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான வழக்குகளில் இது போன்ற வாய்தாக்கள் குற்றம் சாட்டப்பட்டவரை காட்டிலும், வழக்கு தொடர்ந்தவரை அதிகம் துன்புற செய்கிறது. எத்தனையோ செக் மோசடி வழக்குகள் வாய்தாக்களால் இழுத்தடிக்கப்படும் நிலை இன்றும் உள்ளது.

ஏழைக்கு எட்டாத நீதி

அவர் ஒரு வீட்டுக் காவலாளி. ஒரு நாள் ஒரு நவநாகரீமான இல்லத்திலிருந்து ஓடி வந்த நாய் அவரை கடித்தது. அவர் இடது கை முழுவதும் நாய் கடியில் இரத்தமும், அங்கங்கே அவருடைய சதை பிய்ந்து தொங்கியது. இரத்தத்தோடும், வியர்வையோடும் தன் வீட்டுக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தார். அதிர்ச்சி விலகிய சிறிது நேரத்தில் அந்த நவநாகரீகமான இல்லத்தை நோக்கி தன் உறவினர்களோடு சென்றார். ஒரு மணி நேர பேரத்திற்கு பின் அவருக்கு வெறும் 100 ரூபாய் வழங்கப்பட்ட்து. காவலாளியின் நிலைமைக்கு ஒரு சின்ன வருத்தமோ அல்லது அவருக்கு தேவையான மருத்துவ உதவியோ செய்யப்படவில்லை. ஒரு நாகரீகமான சமுதாயத்தில் இது ஒரு உரிமையியல் வழக்காக தொடுக்கப்பட்டு அவருக்கு குறைந்த பட்சம் 10,000 ரூபாயவது நிவாரணமாக கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நடந்தது தலைகீழ். வலி, பணமிழப்பு, குடும்பத்தில் துன்பம் என அந்த காவலாளிக்கு மேன்மேலும் பிரச்சனைகளே ஏற்பட்டன. இது போன்ற சிறிய தகராறுகளை தீர்த்து வைக்கும் ஒரு விரைவான நீதி அமைப்பு இல்லாத போது நீதி என்றும் ஏழைக்கு எட்டாக் கனியாகவே இருக்கும்.

ஊழல் வழக்குகள்

எத்தனை மிகச் சிறிய, சிறிய, பெரிய, மிகப் பெரிய, இமாலய ஊழல்களை நாம் சந்தித்துவிட்டோம். அரசு அதிகாரிகள் முதல் பொது வாழ்வில் இருக்கும் எத்தனையோ அமைச்சர்கள் வரை ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கம் ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும்பொழுது அவருக்கு வயது மூப்பு ஏற்பட்டு இறந்துவிடும் சூழ்நிலை கூட உண்டு. குற்றம் செய்திருந்தாலும் பிணையில் வெளியே வந்து சகல வசதிகளுடன் வாழும் நிலைமை.

மற்றொரு பக்கம் ஊழல் செய்யாத ஒருவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர் பல காலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், துன்பம் அனுபவித்து, கடைசியில் அவர் ஊழல் செய்யவில்லை என்பது பல வருடங்கள் கழித்து நிரூபிக்கப்பட்டால்? அவர் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை யாராலும் துடைக்க முடியுமா?

இந்த நிலைக்கான காரணங்கள் என்ன? இவை சரி செய்யக் கூடிய பிரச்சினைகள்தானா? அடுத்த வாரம்…

– ஜெகதீஸ்வரன்,
தமிழ்நாடு மாநிலத் தலைவர், லோக் சத்தா கட்சி

Categories: Article, May 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: