தேவை ஆயிரம் அம்பேத்கர்கள்

Thursday, May 16th, 2013 @ 10:01AM

மரக்காணம் குறித்த செய்தி 1 – “பா.ம.க சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா கூட்டம் நேற்று நடந்தது. புதுவை, விழுப்புரம், கடலூர், சேலம், நாகப்பட்டினம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான வாகனங்களில் பாமகவினர் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காலனியை சேர்ந்த கிழக்கு கடற்கரை சாலையோரமாக நேற்று நண்பகல் 12 மணிக்கு கட்டையன் தெருவில் நின்றுகொண்டிருந்த கலைவேந்தன், ஏகாம்பரம் மற்றும் ஒருவர், மீது மாநாட்டுக்கு வேனில் சென்ற பாமகவினர், வேன் மீது அமர்ந்து தாங்கள் குடித்த பீர் பாட்டிலை வீசினர். இதில் ஏகாம்பரத்தின் தலையில் அடிபட, விசயம் ஊருக்குள் பரவியது. அந்த வேன் கிளம்பியது. அதே சமயம் அங்கு இளநீர் கடையில் நின்று கொண்டிருந்த மற்றொரு வேனை திரண்டு வந்த பொதுமக்கள் அடித்து உடைத்து, சாலை மறியலில் ஈடுபட, தொடர்ந்து வந்த பாமக வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டு அந்த இடம் போர்க்களமானது.”

மரக்காணம் குறித்த செய்தி 2 – “கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் பகுதியில் ஒரு கடையில் சில பாமகவினர் சாப்பிடுவதை பார்த்த காலனியை சேர்ந்தவர்கள் அவர்களை கேள்வி கேட்க, ஒன்று சேர்ந்த பாமகவினர் அவர்களை அடித்து விரட்ட அவர்கள் ஊருக்குள் சென்று மற்றவர்களை அழைத்து வந்தனர்.”

marakkanam-violenceபொதுவான உண்மைகள் – “5 அரசு பேருந்து, 1 கார், தலித் பகுதியில் 10 வீடுகள், ஒரு கறிக்கடை கொளுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் வாகனங்களில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணம் செய்தவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தார்கள். கலவரத்தில் ஈடுபட்ட பாமகவினர் கையில் கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டுகள், இன்ன பிற ஆயுதங்கள். பாமகவைச் சேர்ந்த இருவர் உயிரழப்பு. 1 கொலை வழக்கு பதிவு.”

இது தவிர்த்து மாமல்லபுரம் கோவிலுக்குள் புகுந்த ஒரு கூட்டம் அங்கிருக்கும் பொது மக்களை அடித்து விரட்டி, போற்றிப் பாதுகாக்க வேண்டிய சிற்பங்களை நாசம் செய்து, அதன் மீது ஏறி, பாமக கொடிகளை நட்டது. காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது.

மரக்காணம் நிகழ்விற்கு முன்னர் பெருவாரியானவர்களுக்கு தெரிந்த தருமபுரி கலவரம் நடந்தது. இன்று வரை பொருளாதார முன்னேற்றம் அடைய முடியாமல் மக்கள் அங்கு தவிக்கிறார்கள். ஊடக வெளிச்சத்திற்கு அதிகம் வராத இது போன்ற தலித்துகளுக்கு எதிரான கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இவை யாவும் தமிழக அரசிற்கும், தமிழக காவல்துறைக்கும் முழுக்க தெரிந்தவை.

இது தவிர்த்து கடந்த ஆண்டு பாமக சித்திரை பெருவிழாவில் செய்த அட்டூழியங்கள், காடுவெட்டி குருவின் வன்முறை தூண்டும் தொடர் பேச்சு, பாமகவின் சாதி துவேசம் ஆகிய அனைத்தும் தமிழக அரசு அறிந்ததே.

சில மாதங்கள் முன் விஸ்வரூபம் திரைப்படம் குறித்த முதல்வரின் அறிக்கை இது.

“படத்தை திரையிடும் முன் தடை செய்திருக்கக் கூடாது என சிலர் கூறி வருகிறார்கள். பாதுகாப்புடன் திரையரங்குகளில் திரையிட அனுமதித்திருக்க வேண்டும் என்றும் கருத்து வெளியானது. மாநிலத்தில் சில இடங்களில் வன்முறை நிகழலாம் என உளவுத்துறை கூறியது. அரசு என்ன செய்ய முடியும்? போலீஸ் என்ன செய்ய முடியும்? தமிழக அரசிடம் குறைந்த அளவே போலீஸ் பலம் உள்ளது. எனவே விஸ்வரூபம் படத்தை தடை செய்ய நேரிட்டது. முதலமைச்சர் என்ற வகையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதே எனது பணி.”

மரக்காணம் பகுதியில் ஏற்கனவே நடந்த சில சம்பவங்கள் அரசிற்கு தெரியாதா? ஒரு வண்டி முழுக்க ஆயுதங்கள் ஏற்றிச் செல்வதும், வண்டிக்கு மேலே குண்டர்கள் குடித்துக்கொண்டு செல்வதும் வேடிக்கை பார்க்கும் காவல்துறை மூலம் தெரியாதா? அரசு நினைத்திருந்தால் இந்த கலவரத்தை தடுத்திருக்க முடியாதா?

தர்மபுரி கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் தலித்துகள் பாதுகாப்பிற்கு அரசு செய்தது என்ன?

இறுதியாக, சென்ற வருடம் செய்த குற்றத்திற்கு இப்பொழுதும் காலம் தாழ்ந்து எடுக்கும் நடவடிக்கை ஏன்?

மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் காரணம் – தீய அரசியல், ஓட்டுவங்கி, சாதி வங்கி அரசியல்.

இஸ்லாமியர்களின் வாழ்வை விட அவர்களின் ஓட்டு எப்படியாவது வேண்டும். எண்ணிக்கையில் குறைந்த தலித்துகளை விட எண்ணிக்கையில் அதிகமான வன்னியர்களின் ஓட்டு எப்படியாவது வேண்டும். தேர்தல் அரசியலுக்கு பாமகவின் ஆதரவும் பின்னர் தேவைபடலாம்.

சித்திரை பெருவிழாவிற்கு வழங்கும் அனுமதி ஜனநாயகத்தை கட்டிக் காக்க எடுக்கப்பட்ட முடிவா? தமிழக அரசு பாமகவினரை காலம் தாழ்த்தி கைது செய்தது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவா அல்லது தன்னை குறித்தும் அவதூறாக பேசியதற்கா?

பொதுமக்களுக்கான துருப்புச் சீட்டு இரண்டு உண்டு. ஒன்று – தேர்தல். இரண்டு – நல்லவர்கள் தங்களின் மௌனம் களைத்தல்.

கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற பீமா ராவ் தலித்துகளுக்காக போராடிய ஜாதி இந்துவான தன் பள்ளி ஆசிரியர் ‘அம்பேத்கர்’ பெயரை தனதாக்கிக்கொண்டார். தீண்டாமை கொடுமையாக இருந்த காலத்தில் ‘எல்லோரும் ஓர் குலம்’ என மாணவ அம்பேத்கருக்கு கற்பித்தவர் ஆசிரிய அம்பேத்கர். தலித்துகளின் தற்பொழுதைய தேவை மௌனம் களைத்த, எல்லோரும் ஓர் குலம் என வாழும் ஆயிரம் ஆசிரிய அம்பேத்கர்கள்.

Categories: Article, May 2013, Whistle, தலையங்கம்
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: