உழைப்பை போற்றுவோம்! தன்மானம் மீட்போம்!

Wednesday, May 1st, 2013 @ 11:06AM

இன்று தொழிலாளர் தினம் என்ற மிகப் பெரிய வட்டத்தை தாண்டி உழைக்கும் ஒவ்வொருவருக்குமான பதிவு இது.

மே 1 அதிகாலை 0:00 மணிக்கு சென்னை வீதிகளில் நான் கண்ட காட்சிகள் இவை. கிழக்கு கடற்கரை சாலை (ECR), பழைய மகாபலிபுர சாலைகளில் (OMR) உணவு விடுதிகள் பல, தங்களின் கடைசி வாடிக்கையாளரை அனுப்புவதிலும், இடத்தை சுத்தப்படுத்துவதிலும் மும்முரமாக இருந்தது. டைடல் பார்க் வாசல் முழுக்க கணிப்பொறியாளர்களை ஏற்றிச் செல்ல பல வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. கணிப்பொறியாளர்கள் பலர் வெளியே வந்த வண்ணமும், காலம் தாழ்த்தாது வாகன ஓட்டிகள் அவர்களை ஏற்றிச் செல்வதும் தொடர்ந்தது. மத்திய கைலாஷ் திருப்பத்தில் காவல்துறையினர் (உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை) வந்த கார்கள் அனைத்தையும் பரிசோதித்தனர், அண்ணா பல்கலைக்கழகம் எதிர்புறம் ஒரு இளைஞர் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தார், சைதாப்பேட்டை சாலையில் செவ்வனே மெட்ரோ பணி நடந்தது, அந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தி.நகர் சரவணா செல்வரத்தினம் வாசலில் குப்பை குவியலை வெளியே எடுத்துவைத்த வண்ணம் சில இளைஞர்கள் நின்றிருந்தனர். அதை ஒட்டிய சந்தில் தீ அணைப்பு வண்டி தன் பணியை செய்துகொண்டிருந்தது. லயோலா கல்லூரி வாசலில் மீண்டும் ஒரு வாகன பரிசோதனை. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இரண்டு, மூன்று பேர் இரவு பேருந்து/ஆட்டோவிற்கு காத்திருந்தனர். ஆட்டோகார்ர்கள் தொடர்ந்து சவாரி பிடிக்க முயற்சித்தனர். அரும்பாக்கத்தில் ஒருவர் ‘சைக்கிள் டீ’ விற்றுக்கொண்டிருந்தார். அதிகாலை நேரம் 1 மணி நேரத்திற்கும் குறைவாக ஒருவன் பார்த்த காட்சிகள் இவை. எவ்வளவு உழைப்பு இங்கு கொட்டிக்கிடக்கிறது? இன்னும் இங்கு சொல்லப்படாத உழைப்பு எத்தனை எத்தைனயோ. ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணின் உழைப்பு இல்லாமல் குடும்பம் உண்டோ? எவ்வளவு தலை சிறந்தவர்கள் நாம்? சொல்லப்படாத உழைப்பு இன்னும் கோடிக்கணக்கில் இருக்கும். இந்த உன்னதமான உழைப்பு நம்மை பெருமைகொள்ள செய்கிறது. இவை யாவும் போற்றுதலுக்குரியது.

uzhaipalar-silai

உழைப்பை போற்றும் அதே சமயம் இரு விசயங்கள் சில காலமாக நம் உழைப்பை பதம் பார்க்கிறது. ஒன்று தன்மானத்தையும், மற்றொன்று ‘தன் மானத்தையும்’ காவு கேட்கிறது. ஒன்றின் பெயர் இலவசம், மற்றொன்றின் பெயர் குடி. இலவசத்திற்கு நாம் அடையும் பூரிப்பு நம்மை கவலையில் ஆழ்த்துகிறது. குடிக்கு அடிமையாகும் விதம் நம்மை பயம்கொள்ள செய்கிறது. இப்பொழுது நாம் சகஜமாக கேட்கும் வார்த்தை இது – “லேபர் கிடைக்கறது இல்லங்க. கிடைச்சாலும் சரியா வர்றதில்ல. அவனுக்கு என்னங்க இலவச அரிசி, கம்மி விலையில் இட்லி, சாதம்; வீடு, டி.வி, ஃபேன், ஒரு நாள் வேல பார்த்தா அடுத்த நாள் குடி…..” நகரம், கிராமம் என வித்தியாசம் இல்லாமல் எங்கும் இந்த குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. இவை இரண்டுக்கும் முழு காரணம் நம்மை ஆண்ட இரு ஆட்சியாளர்கள்தான் என்றாலும், இதற்கு முடிவு கட்ட நம்மால் மட்டுமே முடியும். தொடரும் உழைப்பை போற்ற வேண்டிய தருணம் இது. தொலைந்த தன்மானத்தையும் மீட்க வேண்டிய தருணம் இது.

Categories: Article
Tags: , ,

1 Comment to "உழைப்பை போற்றுவோம்! தன்மானம் மீட்போம்!" add comment
Krish
May 2, 2013 at 10:54 am

தொலைந்த தன்மானத்தையும் மீட்க வேண்டிய தருணம் இது – சிறப்பு !

Leave a Reply

%d bloggers like this: