கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது நல வழக்கு – லோக் சத்தா கட்சி தன்னை இணைத்துக் கொள்கிறது

Wednesday, May 29th, 2013 @ 9:35AM

தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட பொது நல வழக்கில் லோக் சத்தா கட்சி தன்னை இணைத்துக் கொள்கிறது. இவ்வழக்கு முன்னேற்ற அரசியலுக்கான ‘பாடம்’ தமிழ் மாத இதழின் ஆசிரியர் திரு. அ.நாராயணன் அவர்களால் தொடரப்பட்டது.

வழக்கின் சாராம்சம்

கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 12ன் படி, நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் தவிர்த்து மற்றவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில், தொடக்க வகுப்பில் (எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு) 25% அளவிற்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். இம்மாணவர்களுக்கான பள்ளிக்கட்டணத்தை அரசே, அந்தந்த தனியார் பள்ளிகளுக்கு செலுத்தி விடும். மேற்கூறிய சட்டத்தை அமல்படுத்தும் வகையில், இச்சட்டத்திற்கான விதிகளை, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை 2011ம் ஆண்டு இயற்றி வெளியிட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி, 60 எண்ணிட்ட அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அந்த அரசாணையின்படி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை மட்டுமே, இந்த 25% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க பெற்றோருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாட்களில், சனி, ஞாயிறு நாட்களைத் தவிர்த்தால், 5 நாட்கள் மட்டுமே, நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக பெற்றோருக்கு அவகாசம் உள்ளது. அதற்குள் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இது, கல்வி உரிமைச் சட்டத்திற்கும், தமிழக அரசு இயற்றிய விதிகளுக்கும் நேர் எதிரானது. ஏனென்றால் கல்வி உரிமைச்சட்டம் மற்றும் விதிகளின் படி, ஓர் கல்வியாண்டில் ஆறு மாதங்கள் வரை தொடக்கவகுப்புகளில் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்களுக்கு பள்ளிகள் இடம் மறுக்கக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. மேலும், பள்ளியிலிருந்து 1 கிமீ தாண்டி குழந்தையின் வசிப்பிடம் உள்ளது என்று காரணம் காட்டி பல தனியார் பள்ளிகள், 25% இடஒதுக்கிட்டின்கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கின்றன.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் தவறான நடவடிக்கையால்,நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கான 25% இட ஒதுக்கீட்டு இடங்களை, கட்டணம் செலுத்தும் பொதுப்பிரிவுக் குழந்தைகளைக் கொண்டு தனியார் பள்ளிகள் நிரப்பிவிடும் உடனடி ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது, கல்வி உரிமைச்சட்டத்தின் குறிக்கோள்களையே நலிவடையச்செய்துவிடுகிறது. நலிந்த, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறித்துவிடுகிறது

எனவே, நீதிமன்றம் பள்ளிக் கல்வித்துறைச் செயலரிடம் இருந்து, 1-4-2013 அன்று வெளியிடப்பட்ட அரசாணை பற்றிய விவரங்களைப் பெறவேண்டும், ஒவ்வொரு கல்வியாண்டும் மே 3 முதல் மே 9 வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று மிகக்குறைந்த அவகாசம் மட்டுமே அளிக்கும் அரசாணையின் விதியைத் தள்ளுபடிசெய்யவேண்டும், கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 15 மற்றும் தமிழக அரசின் கல்வி உரிமைச்சட்ட விதி 11 ஆகியவை வலியுறுத்துவது போன்று, கல்வியாண்டின் ஆறு மாதங்கள் வரை (extended period), 25% இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பங்கள் பெற ஆணையிடவேண்டும், குழந்தைகளின் வசிப்பிடம் தனியார் பள்ளியில் இருந்து 1 கிமீ தாண்டி இருப்பதைக் காரணம் காட்டி, அரசு அதிகாரிகளும் பள்ளி நிர்வாகங்களும், நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளின் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கக்கூடாது என்று ஆணையிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

வழக்கு நிலவரம்

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து, இவ்வாண்டு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்த மாணவர் சேர்க்கை பற்றிய அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு ஆணையிட்டனர். பள்ளிக்கல்வித்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு மே 29ம் தேதி, புதன் கிழமை, மற்றொரு கோடைகால உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கின் எதிரொலியாக இன்று பள்ளிக்கல்வித்துறை கல்வி உரிமைச் சட்டத்தின் விண்ணப்ப காலத்தை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டித்துள்ளது. எனினும் இந்த இரண்டு வார நீட்டிப்பு வெறும் கண்துடைப்பே தவிர, இதனால் பயன் எதுவும் இருக்காது எனவும் லோக் சத்தா கட்சி நம்புகிறது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது விண்ணப்ப காலம் இருந்தால்தான் ஏழை எளிய மக்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும்.

மேலும் கல்வி உரிமைச் சட்டத்தை பற்றிய போதிய விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை. இப்படி ஒரு சட்டம் உள்ளது பற்றியும், அதற்கு ஒரு வார கால அவகாசம் பின்னர் இரண்டு வார நீட்டிக்கப்பட்டது பற்றியும் எவ்வளவு படிப்பறிவில்லாத பாமர பெற்றோர்களுக்கு தெரியும்? யாரும் விளம்பரப்படுதாமல் மக்களாகவே தெரிந்துகொள்ள வேண்டிய அரசின் இரண்டு வருட ‘சாதனைகளை’ பல கோடி செலவு செய்து விளம்பரப்படுத்தும் அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருப்பதை லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது.

லோக் சத்தா கட்சி கடந்த ஒரு வருடமாக கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டி வந்ததையும், தகவல் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி இவ்வழக்குக்கு தேவையான தகவல்களை திரட்ட முற்பட்டதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறது.

Categories: Court Cases, Press Releases
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: