தனிமனித எழுச்சியும் தன்னிகரில்லாத தியாகமும்

Monday, May 13th, 2013 @ 10:10PM

லோக் சத்தா கட்சியின் கொள்கை ‘தீவிர மதுக்கட்டுப்பாடு’ என்றாலும், மது எதிர்ப்பு என்ற புள்ளியில் அய்யா சசிபெருமாள் அவர்களின் இந்த போராட்டத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

உண்மையும், உறுதியும் இருந்து உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தால் தனியொரு மனிதனாலும் மகத்தான சமூக மாற்றங்களை மலரச் செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் அறவழி உண்ணாவிரதப் போராட்டம்.

Sasiperumal-protestதமிழகத்தில் இலட்சக்கணக்கான குடும்பங்களின் கண்ணீருக்கும், வறுமைக்கும் காரணமாய் இருக்கும் மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தக் கோரி ஜனவரி 30, 2013 அன்று தொடங்கியது இவரின் தனிமனித சத்தியாகிரகம். அலைகள் ஆர்ப்பரிக்கும் சென்னை மெரினா கடற்கரையில், அறவழிப்போராட்டத்திற்கு உலகிற்கே ஒளிகாட்டியாக வாழ்ந்த மஹாத்மா காந்தியடிகளின் சிலையருகே தொடங்கிய இப்போராட்டம் 34 நாட்கள் கடந்து தொடங்கிய இடத்திலேயே மார்ச் 4 அன்று மாபெரும் எழுச்சியோடு தன் முதற்கட்டத்தை முடித்தது.

யார் இந்த சசிபெருமாள்? எதற்கிந்த சத்தியாகிரகப் போராட்டம்? எத்தனையோ எழுச்சிகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில் இதன் முக்கியத்துவம் என்ன? தனித்துவம் என்ன ?
இளம்பிள்ளை கிராமம் – சேலம் மாவட்டம், கஞ்சமலையருகே உள்ளே ஒரு அழகிய ஊரைச் சேர்ந்தவர் சசிபெருமாள். அது 1972. 41 ஆண்டுகளுக்கு முன்பு.. தமிழகத்தில் நீண்ட காலம் அமலில் இருந்த மதுவிலக்கு தளர்த்தப்பட்டு கள்ளுக்கடைகள் தொடங்கப்பட்ட காலகட்டம். கர்மவீரர் காமராஜர் தலைமையில் மதுவிலக்கு கோரி தமிழகமெங்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டம். 49 ஆயிரம் பேர் கைது. 5 வார தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால், 5 நாட்களிலேயே விடுதலை செய்யப்படுகிறார்கள். சேலத்தில் இருந்து மறியலில் பங்கேற்று சிறைசென்றவர்களுக்கு “அறப்போர் தொண்டர்” என்ற பட்டத்தை சேலம் நேரு கலையரங்கில் காமராஜர் அவர்கள் வழங்கினார். அப்போது கர்மவீரரின் கரங்களால் பட்டம் பெற்றவர்களில் ஒருவர் 16 வயது இளைஞன் சசிபெருமாள்!!

மதுவிலக்கு தளர்த்தப்பட்ட 1971க்கு அடுத்த ஆண்டு தொடங்கிய சசிபெருமாளின் போராட்டம் இன்று 57வயது காந்தியவாதி சசிபெருமாளின் போராட்டமாக மட்டுமல்லாமல் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

1983ல் மதுவிலக்கு மாநாடு. மதுக்கடைகளை மூடக்கோரி தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். சேலம்-சென்னை நடைபயணம். 2009ல் சென்னை, சேப்பாக்கத்தில் 9 நாள் உண்ணாவிரதம் என்று ஒவ்வொரு கட்டமாக சசிபெருமாள் ஐயா அவர்கள் நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தின் உச்சகட்டம்தான் ஜனவரி 30, 2013 அன்று சென்னையில் காந்தி சிலையருகே தொடங்கியது.

அக்டோபர் மாதமே இப்போராட்டம் குறித்து அறிவித்துவிட்டதால், காவல்துறை சுறுசுறுப்பாக களமிறங்கியது. சசிபெருமாள் ஐயா அவர்களை சென்னைக்குச் செல்லவிடாமலேயே தடுத்துவிட வேண்டும் என்று பலவழிகளில் முயற்சி எடுக்கப்பட்டது. பல சோதனைகள் கடந்து ஜனவரி 30 அன்று அதிகாலை சென்னை வந்து சேர்கிறார். மதுவிலக்கு கோரி காந்தி சிலை முன்பு சாகும் வரை சத்தியாகிரகம் தொடங்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையின் உந்துதலில் மொட்டையடித்து, சந்தனம் பூசி, சட்டை இல்லாமல் சென்னை சுற்றிப் பார்க்கவந்த யாத்ரிகர் போல் ஜனவரி 30, காலை 10 மணிக்கு காந்தி சிலையருகே சென்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இலட்சியப் பயணத்தின் தொடக்கம் நிறைவேறிவிட்ட நிம்மதியில்..”மஹாத்மா காந்திக்கு ஜே… பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள்” என்ற உச்ச குரலில் உரக்கக் கோஷமிட்டனர் சசிபெருமாள் ஐயா அவர்களும், உடனிருந்த பழனிச்சாமியும். சிறிது நேரத்திலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்புபுழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புழல் சிறையிலும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. சிறையில் அன்பாகவும், அழுத்தமாகவும், வலுக்கட்டாயமாகவும் பலமுயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இருந்தபோதும் உறுதியாக உண்ணாவிரதத்தை வேள்வியாக தொடர்ந்து நடத்தினார் சிறைக்கூடத்தின் உள்ளேயும். சிறைக்கைதிகள் சிலர், அவர் அருகே வரக்கூடத் தயங்கி “…இது, உயர்ந்த இலட்சியத்திற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருக்குமிடம். பாவம் செய்த நாங்கள் உங்கள் பக்கம் வருவதே சரியல்ல” என்பது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்களும் புழல் சிறையில் நடந்தது. உண்ணாவிரதத்தோடு, மெளன விரதத்தையும் தொடங்கினார் சசிபெருமாள் ஐயா.

சாராயம் குடித்து வயிறு வெந்து வாழ்வு தொலைத்தவர்களுக்கு தன் வயிற்றில் பசித் தீ ஏந்தி நடத்திய அறப்போராட்டம் 20 நாட்களைக் கடந்தது. மருத்துவ சோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனை அழைத்து வரப்பட்டு, பிப்ரவரி 23 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அத்தோடு போராட்டத்தை முடித்துக்கொள்வார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் நேரே காந்தி சிலைக்கு சென்று அதன் முன் அமர்ந்து, கடும் வெயிலிலும் தன் சத்தியாகிரகத்தைத் தொடர்ந்தார். திரும்பவும் கைது, காவல் நிலையம், மருத்துவமனை.
இப்படித் தொடர்ந்த போராட்டம், புதுவடிவம் பெறத் தொடங்கியது. உன்னதமான இலட்சியத்திற்கு உலகமே பின்னின்று உதவும் என்பது நிரூபணமானது. மதுவிலக்கு கோரும் போரட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் ஐயா அவர்களின் உண்ணாவிரதத்தை தனியார் இடம் ஒன்றில் நடத்துவதற்கு முயற்சிக்கலாமே என்று களத்தில் இறங்கினர். தியாகி நெல்லை ஜெபமணி அவர்களின் மகன் திரு.மோகன்ராஜ், பெருந்தன்மையோடு இடமளித்தார். பிப்ரவரி 25 முதல் மைலாப்பூரில் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் தந்த பேராதரவால் சத்தியாகிரகத்தின் செய்தி தமிழகமெங்கும் பரவியது. சமூக ஆர்வலரும், நடிகருமான சிவக்குமார் முதலாவதாக நேரில்வந்து ஆதரவளித்தார். தொடர்ந்து, பெரும்பாலான தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், காந்திய இயக்கங்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து போராட்டத்திற்கு உளப்பூர்வமான ஆதரவளித்தனர்.

உண்ணாவிரதம் 30 நாட்களைத் தொட்டது. ஐயாவின் மன உறுதி குறையவில்லை. உடல் நலம் குன்றத் தொடங்கியது. பலமுறை வாந்தி. அவ்வப்போது இரத்தம் கலந்த வாந்தி. அருகிருந்த உறவினர்களின் அழுகுரல், உண்ணாவிரதத்தை நிறுத்தக்கோரி ஏராளமான பார்வையாளர்கள், தலைவர்களின் வேண்டுகோள், தொலைக்காட்சி ஊடகங்களின் நேரலைச் செய்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. உடனிருந்த, உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் எங்களைப் போன்றோருக்கு, உண்ணாவிரதத்தை முடித்து, உயிரைக் காப்பதா ..? கொள்கையைக் காப்பாற்ற உயிரை இழப்பதா என்ற உணர்ச்சிப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. ஆனால், ஆழமான மெளனத்தோடும், திடமான மனதோடும் “சாகும் வரை உண்ணாவிரதம்” என்றால் அதற்கு அர்த்தம் “…சாகும்வரைதான்” என்ற உறுதியோடு சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

33ம் நாள். சத்தியாகிரகத்தின் உச்சகட்டம் அன்று அரங்கேறியது. ஐயாவின் உயிரைக் காக்கக் கோரியும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தக் கோரியும் மெரினா கடற்கரையில் மார்ச் 3 அன்று மாலை மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெற்றது. ”குடும்பங்களின் அழிவில்தான் அரசு கோலோச்ச வேண்டுமா..?” “குடி அழிய கோன் உயருமா?” போன்ற பதாகைகள் தாங்கிய ஆயிரத்திற்கு மேற்பட்ட கைகள் அங்கு இணைந்து நின்று ஐயாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டி உருகியது. தமிழகம் காணாத புதியதோர் தன்னெழுச்சியை இந்தத் தனிமனிதர் நிகழ்த்திக் காட்டினார்.

மனிதச் சங்கிலியின் வலிமை கண்ட அரசின் கண்கள் அடுத்தகட்ட செயல்பாட்டில் அதிரடியாய் இறங்கியது. ஐயாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அது பேரெழுச்சியை தூண்டிவிடும் என்று கருதிய காவல்துறையினர் அன்றிரவே வலுக்கட்டாயமாக ஐயாவை உண்ணாவிரத இடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது உருவான பரபரப்பான சூழலில் தன்னார்வலர்கள் எழுப்பிய “வந்தே மாதரம்” எனும் வீரக்குரல்கள் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.
காந்தியப் போராட்டங்களின் முதற்கட்டம் பெருவாரியான மக்களிடம் பிரச்னை குறித்த விவாதத்தை, பொதுக்கருத்தை உருவாக்குவது. அந்த முதற்கட்டம் முற்றுப்பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியதின் அவசியம் கருதி உண்ணாவிரதத்தை அடுத்த நாள், மார்ச் 4, 2013 அன்று தொடங்கிய இடத்திலேயே, காந்தி சிலை பின்புறம் முடித்தார். மெளன விரதத்தையும் முடித்து, அடுத்த ஆண்டு(2014) ஜனவரி 30 அன்று ஏராளமான சத்தியாகிரகிகளைத் திரட்டி இதே காந்தி சிலை அருகே மாபெரும் சத்தியாகிரகம் தொடங்கும் என்ற திட்டத்தையும் அறிவித்தார். அதுவரை என் பணி தமிழகமெங்கும் பயணித்து சத்தியாகிரகிகளைத் திரட்டுவதே என்று அவர் உணர்ச்சியோடு கூறியபொது, 34 நாள் உண்ணாவிரதம் இருந்தவரின் உடலிலிருந்து எப்படி, இப்படியொரு புத்தெழுச்சி புறப்படுகிறது என்று வியந்தோம் நாங்கள். இதுதான் சத்தியத்தின் வலிமையா..? உண்மையின் வீரியமா..? தூய்மையான பொதுநலத்தின் தன்மையா..?
உண்ணாவிரதம் முடிந்தது. போராட்டம் தொடர்கிறது.

Categories: April 2013, Article, Whistle
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: