சாதனைப் பாதையில் திருப்பூர் லோக் சத்தா கட்சி

Tuesday, June 11th, 2013 @ 9:53AM

tirupur-activities

வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செய்யும் பல்வேறு பணிகளில் மக்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்கவும், வாகனங்களுக்கு பதிவுச்சான்று (ஆர்சி ) புத்தகம் வழங்கும் பணியும் செய்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இப்போதெல்லாம் மக்கள் அனைவரும் மேற்கண்ட பணிகளுக்கு முதலில் செல்வது டிரைவிங் ஸ்கூல்தான். காரணம் அவர்கள்தான் இந்த வேலையைச் செய்து தருவார்கள் என்று நம்புவதுதான். நாமே சென்று லைசென்ஸ் வாங்கமுடியும், ஆர்.சி புத்தகம் வாங்கமுடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.  தெரிந்தாலும் அவ்வாறு சென்று அலைந்து திரிந்து வாங்க நேரம் மிக அதிகம் செலவாகும் என்றும், அங்குள்ள நடைமுறைகள் தெரியாமல் எதிலாவது மாட்டிக்கொள்வோமோ என்கிற பயமும் காரணம்.  இதனால் தான் டிரைவிங் ஸ்கூல் என்கிற பெயரில் இம்மாதிரி வேலைகளை முடித்துத்தர புரோக்கர்கள் பலர் ஒவ்வொரு ஆர்டிஓ அலுவலகத்திலும் இருக்கின்றனர். ஏதாவது இலஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்தால் இம்மாதிரி ஒவ்வொரு புரோக்கர்களிடமிருந்தும் 20 அல்லது 30 ஆர்சி புத்தகங்கள் லைசென்ஸ்கள் கைப்பற்றப்படுகின்றன. அவையெல்லாம் ஏதாவது புதுப்பித்தல் பணிக்காக தரப்பட்டதாகும்.

சரி இப்படி இல்லாமல் நேரடியாக நாமே சென்று லைசென்ஸ் எடுக்க முடியுமா என்றால், முடியும்.  லைசென்ஸ் எடுக்க, தகுந்த வயது வந்தவுடன் முறையாக தேவையான ஆவணங்களுடன் சென்று முதலில் எல்.எல்.ஆர் எனப்படும் சான்றிதழ் பெற்று 6 மாத காலத்திற்குள் வண்டி ஓட்டிப் பழகியவுடன் மீண்டும் ஆர்டிஓ அலுவலகம் சென்று அவர்கள் குறிப்பிட்ட நாளில் வண்டி ஓட்டிக் காண்பிக்க வேண்டும். அதற்கும் முன்பாக சாலைவிதிகள் பற்றிய கேள்விபதில் ஆன்லைன் மூலம் பதில் தரவேண்டும். பின்னர் சரியாக ஓட்டிக்காண்பித்து விட்டால் உடனடியாக லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.  இதை நாமாக செய்வதைவிட்டு டிரைவிங் ஸ்கூல் எனப்படும் புரோக்கர் மூலமாக சென்றால் நாம் செலுத்தும் தொகையைவிட மூன்றுமடங்கு அதிகமாக வாங்கிவிடுவார்கள். நமக்கும் அனுபவம் இன்மையால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிடுகிறோம்.  உதாரணமாக நாமே சென்று லைசென்ஸ் எடுத்தால் 150 ரூபாய் கட்டணம் என்றால் புரோக்கர் மூலமாக சென்றால் 500 ரூபாயாகிவிடும்.

இப்படி திருப்பூர் லோக்சத்தாவைச் சேர்ந்த ஒரு நண்பர் எல்.எல்.ஆர் போட்டு 6 மாதம் முடியும் தருவாயில் ஓட்டிக்காண்பிக்க சென்றால் அந்த குறிப்பிட்ட அதிகாரி நாளைவா என்று சொல்லி இரண்டு மூன்று முறை திருப்பி அனுப்பிவிட்டார்.  எனவே, திருப்பூர் லோக்சத்தா அலுவலகத்திற்கு தகவல் சொல்ல திரு. ஈஸ்வரன் தலைமையில் உறுப்பினர்கள் நேரடியாக வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சென்று மேற்படி விசயத்தைச் சொல்லி “முறைப்படி வந்த நபரை இப்படி இழுத்தடிப்பது நல்லது அல்ல,  முறைப்படி செய்யாவிடில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று சொல்லியும் “அவ்வாறு நடவடிக்கை எடுத்து உங்களுக்கு தண்டனை வாங்கித்தருவது எங்கள் நோக்கமல்ல. முறைப்படி வரும் நபர்களுக்கு வேண்டியதை உரிய நேரத்தில் செய்துதரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.  அந்த அதிகாரி பின்னர் உடனடியாக லைசென்ஸ் வழங்கிவிட்டார்.

இம்மாதிரி மக்கள் தங்களுக்கு ஆக வேண்டிய அரசு காரியமாகட்டும் தனியார் காரியங்களாகட்டும் எதையும் முறைப்படி சென்று உரிய வகையில் சாதிக்க வேண்டும். தங்கள் வேலை ஆனால் சரி என குறுக்கு வழியில் செல்வதால் மட்டுமே இன்றைய அரசு அலுவலங்களில் முறையான செயல்பாடுகள் நடப்பதில்லை எனத் தெரிகிறது. மேலும் மக்களில் இம்மாதிரி மனிதர்களால்தான் நேர்மையாக நடக்க வேண்டிய விசயங்களும் முறையற்ற வழியில் நடக்கத் தூண்டப்படுகிறது.  சம்பந்தப்பட்டவர்கள் திருந்தினால் மட்டுமே நல்லதொரு சமுதாயம் அமைய முடியும்.

இம்மாதிரி அனைத்துத் துறைகளிலும் திருப்பூர் மாவட்ட லோக்சத்தா கட்சியின் அனுபவங்களை ஒவ்வொன்றாக இந்தப் பகுதியில் வெளியிட இருக்கிறோம். பிற மாவட்டங்களைச் சார்ந்த நண்பர்களும் இம்மாதிரியான நேர்மையான போராட்டங்களின் வெற்றிச் செயல்களை எழுதி அனுப்பலாம் அல்லது மெயிலிலும் அனுப்பலாம். ( easwaransabari@gmail.com )

மற்ற மாவட்ட நண்பர்களும் இதை தங்களுக்கான களப்பயணங்களில் கருவியாக எடுத்துக் கொள்ளலாம்.  உங்கள் பயணங்களில் உடன் வருவதோடு உங்கள் பயணங்களின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.

ஹானஸ்ட். செ. ஈஸ்வரன் – மாநில அமைப்புச் செயலாளர்

தொகுப்பு : எஸ்ஏ. முத்துபாரதி – ‘விசில்’ ரிப்போர்டர் – திருப்பூர்

Categories: Activities, District News, May 2013, Tirupur News, Whistle

1 Comment to "சாதனைப் பாதையில் திருப்பூர் லோக் சத்தா கட்சி" add comment
Siva Ramaswami
June 25, 2013 at 8:22 pm

மிக்க மகிழ்ச்சி! இது போன்ற வழி காட்டுதல்களைப் பயன் படுத்த அனைத்து மக்களும் முன் வர வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். ஆனால் அது மட்டும் போதாது. ஊழலையும் ஒழிக்க வேண்டும். ஊழல் இரண்டு வகைப் படும் – அதிகாரிகளின் ஊழல், அரசியல் வியாதிகளின் ஊழல். அதிகாரிகளின் ஊழல்கள் மிக அதிகமான அளவில் அரசியல் வியாதிகளின் துணையோடு, தூண்டுதலோடுதான் நடை பெறுகின்றன. மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே அதிகாரிகள் தனித்து ஊழல் புரிகிறார்கள்.
எனவே ஊழலை எப்படிக் கண்டு பிடிப்பது, எப்படி எதிர்ப்பது, லோக் சத்தா எப்படி போராட்டத்தை முன் நின்று நடத்த உதவும் என்பது போன்ற நல்ல காரியங்களையும் மக்களுக்குச் சொல்லிகொடுக்க வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: