அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தளர்த்தும் முடிவை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது

Wednesday, July 17th, 2013 @ 8:53PM

English version: http://news.loksatta.org/2013/07/lok-satta-welcomes-relaxation-in-fdi.html

அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தளர்த்தும் முடிவை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது. இது அவசியமான ஒன்று, எனினும் போதுமானதல்ல.

லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவர் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயண் இன்று பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தும் முடிவை வரவேற்றார். இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்க அவசியமான முடிவு என தெரிவித்தார்.

உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் எங்கிருந்து முதலீடு வருகிறது என்பது முக்கியமல்ல. மாறாக எந்த அளவுக்கு உற்பத்தி திறன் அதிகரிக்கிறது, எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகிறது, ஏற்றுமதி எவ்வளவு அதிகரிக்கிறது என்பதே முக்கியம். இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவிகிதத்தை எட்டியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்திய அரசும், தொழில் முனைவோரும் சுமார் 60,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனை திருப்பி செலுத்தவேண்டிய நிலை உள்ளது. அந்நிய நாணய உள்வரவு இல்லாவிட்டால் இந்தக்கடன் நமக்கு பெரும் சுமையாக அமையும்.

அதிக நடப்பு கணக்கு பற்றாக்குறையால் ரூபாயின் மதிப்பு குறைந்து எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயருகிறது. இதன் விளைவால் அரசின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அந்நிய முதலீட்டை ஈர்ப்பது மிக அவசியமாகிறது.

எனினும் இத்தகைய நடவடிக்கைகள் மட்டுமே போதாது. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு இதுவரை எந்த பலனையும் தரவில்லை. பல இந்திய முதலீட்டாலர்கள் புதிய தொழில்களை தொடங்கவும், இருக்கும் தொழில்களை விரிவுபடுத்தவும் தயக்கம் காட்டுகிறார்கள். புதிய சாலைகள், மின் நிலையங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்ட பெரும் முதலீடுகள் ஆக்கப்பூர்வமாக இன்றி முடங்கிக்கிடக்கின்றன.

முடிவுகளை எடுப்பதில் தாமதம், சமமான வாய்ப்புகள் இல்லாமை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, நியாயமான போட்டி இல்லாமை, ஊழல்மிகுந்த நிர்வாகம் ஆகிய காரணங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்து முதலீட்டை தடுக்கின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அரசின் தேவையற்ற செலவீனங்கள் நமது உற்பத்தி தளத்தை பெரிதும் பாதிக்கிறது.

உற்பத்தித் துறையில் வளர்ச்சி அடைந்து, வெற்றிகரமான ஏற்றுமதி செய்வது மிக முக்கியம். நாம் உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியை அதிகரிப்பதே நம் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும். அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளை கடந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி மேம்பாடு ஆகியவற்றிலேயே நம் எண்ணமும் செயலும் இருக்கவேண்டும். இவ்வாறு டாக்டர் ஜே.பி தெரிவித்தார்.

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: