ஓயாத அலைகள் – கரையிலிருந்து ஒரு கட்டுரை – பாகம் 2

Tuesday, July 2nd, 2013 @ 12:11PM

கச்ச(ட்சி)த் தீவு அரசியல் – 1

திராவிட முன்னேற்றக் கழகம் ஆகட்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகட்டும், இருவரும் மத்திய அரசிற்கு தொடந்தது எழுதும் கடிதங்களில் இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது முக்கிய கடிதமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா – இலங்கை இடையே கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவானது இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற செய்தி நாம் தொடர்ந்து பார்த்து வருவது.

அதிமுக நிலை

2008-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இது குறித்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் என்பதாக கச்சத்தீவு குறித்து அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கும் தமிழக அரசின் வருவாய் துறையும் இந்த வழக்கில் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்க காரணமான ஒப்பந்தங்களை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், 2008ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, சட்டசபைபில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகான “கச்சத்தீவை மீட்பதே ஓரே வழி” என கூறினார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூலம் பெற்ற வெற்றியைப் போல கச்சத்தீவு பிரச்சனையில் வெற்றி பெறுவோம் எனவும் சட்டசபையில் பேசினார்.

மே 2013 எழுதிய கடிதத்தில் கச்சத்தீவை மீட்ட பிறகு சர்வதேச கடலில் எல்லைக்கோடு மீண்டும் வரையறை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

திமுக நிலை

கச்சத்தீவை காவு கொடுத்தவர் என்று தொடர் விமர்சனகள் செய்யப்படும் திமுகவின் தலைவர் கருணாநிதியும் இது குறித்து மத்திய அரசிற்கு பல கடிதங்கள் எழுதியவர். மே10, 2013 அவருடைய சார்பிலும் கச்சத்தீவை மீட்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா தொடர்ந்த வழக்கின் அதே சாராம்சத்தோடு தாக்குதலில் பலியான மற்றும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த்து.

ஒவ்வொரு முறை மீனவர் பிரச்சனை எழும்போது 74 ஒப்பந்த்ததை மேற்கோள் காட்டி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை மற்றும் அங்கு நடக்கும் திருவிழாவில் பங்கெடுக்கும் உரிமை உள்ளது பற்றி கூறி, மத்தியில் இருக்கும் மத்திய அரசையும் மாநிலத்தில் தான் ஆட்சிக் கட்டிலில் இருப்பதை பொருத்தும், இல்லாததை பொருத்தும் வெவ்வேறு மாதிரியான குரல்களை எழுப்பி வருகிறார்.

தேமுதிக நிலை

இதே பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் `மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்திய குடியுரிமையை ஒப்படைத்து விட்டு இலங்கை குடிமகனாகி அங்கு தங்க விரும்புகின்றனர் என்று அதிர்ச்சி தெரிவித்தார்.

1951ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நேபாளம் மறுபரிசீலனை செய்ய விருப்புகிறது. அதே வேளையில் 1987ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மதிக்கப்படவில்லை. சீன பிரதமர் எல்லை பிரச்சனைகளை இருதரப்பினரும் பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்த்துக் கொள்ள சம்மந்தம் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கை கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களை காக்க 1974ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அரசால் போடப்பட்ட கச்சத்திவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மற்றவர்கள் நிலைப்பாடு

இது குறித்து மற்ற தமிழக கட்சிகளின் நிலைப்பாடும், தமிழ் இயக்கங்களின் நிலைப்பாடும் “மீனவர் பிரச்சனைக்கு மிக முக்கியமான ஒரு தீர்வு கச்சத்தீவை மீட்பது” என்பதாகவும், ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்பது மட்டுமே என்பதாகவும் உள்ளது

கச்சத்தீவு பூர்வீகம்

கச்சத்தீவின் பூர்வீகம் குறித்த பல ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது அவை சொல்லும் சில பொது விசயங்கள் மட்டும் இங்கே.

1921 முதல் கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பது கலந்துரையாடல் இருப்பதாகவும் இது குறித்து ஊர்மிளா பத்னிஸ் என்னும் பத்திரிக்கையாளர், கச்சத்தீவை இலங்கை உரிமை கோருவதற்கு 1544 ஆம் ஆண்டு வரலாற்று சான்றுகள் இருப்பதாக இலங்கை நிர்வாகத்துறையை சேர்ந்த திரு.ஆஸ்டின் ஃபெர்னண்டஸ் தெரிவிக்கிறார். இதற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா என தெரியவில்லை.

கி.பி. 1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க பரம்பரையைச்சேர்ந்த சேதுபதி குறுநில மன்னனின் கீழ் இருந்த தீவுக்கூட்டங்களில் கச்சதீவும் ஒன்றாகும். 69 கடற்கரை கிராமங்களும் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத்தீவு, நெடுந்தீவு, பள்ளித்தீவு ஆகிய தீவுகளும், சேதுபதி குறுநில மன்னனின் நிர்வாகத்தில் இருந்ததாக 1622-1635ஆம் ஆண்டுகால செப்பேடு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாக சென்னைப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பதினோழாம் நூற்றாண் டின் இறுதியில் பர்னொஃப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார். இலங்கைத் தீவு முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இதன் கடற்கரை எல்லையை ஆராய்ந்த வண்ணம் அந்த நாட்டைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தார். இலங்கையிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்து ஐரோப்பாவிலிருந்து வருவோருகெல்லாம் அவர்தான் பார்க்க வேண்டிய இடங்களை, அவற்றின் சிறப்பியல்பை எல்லாம் விளக்குவார். பர்னொஃப் இலங்கைக்கெனத் தேசப்படம் வேண்டுமே என்று விரும்பினார். இலங்கைத் தேசப் படம் ஒன்றை உருவாக்குவதில் கடுமையாக ஈடுபட்டார். பல ஆண்டுகள் கழித்து இலங்கைத் தேசப் படத்தை பர்னொஃப் உருவாக்கி முடித்தார். அவருடனிருந்த உதவியாளர் எம். ஜுல்ஸ் மோல் என்பவர் அந்தத் தேசப்படத்தை Recherches sur la Géographie ancienne de Ceylan என்ற இதழில் 1857-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டார். Lanka or Tambraparani according to the Sanscrit Pali and Singhalese Authorities எனும் அந்தத் தேசப்படத்தில் 3.75 சதுர மைல் பரப்பளவுள்ள கச்சத்தீவு குறிக்கப்படவில்லை.

குறிப்பு: கடற்கரையைச் சுற்றிலும் அப்பாலும் உள்ள சின்னஞ்சிறு பாறைகளையும் அவர் தம் தேசப்படத்தில் குறிக்கத் தவறவில்லை. கடலினிடையே ஏறக்குறைய 1/4 சதுர மைல் பரப்பளவுள்ள பாறைகளைக் கூடக் குறிக்காமல் விட்டதில்லை. எடுத்துக்காட்டாக கடம்பு ஆறு கடலில் புகும் துறைக்கு அப்பால் இருக்கும் (முத்துக் குளிப்பதற்கு ஏற்றதான) பாறைத் தொடரினையும் அவர் குறித்துள்ளார்.

கிழக்கு இந்தியக் கம்பெனி 1822இல் Isthimirer Sanad என்ற ஒப்பந்தத்தால் இராமநாதபுரம் இராசாவிடமிருந்து கச்சத் தீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது.

ஜனாப் முகமத் அப்துல் காதர் மரக்காயர் முத்துசாமி பிள்ளை என்பவர்களுக்காகச் கச்சத்தீவு ஐந்தாண்டுகளுக்குக் குத்தகையாக ஒப்பாவணம் செய்து கொள்ளப்பட்டது. நாள்: 23-6-1880, இராமநாதபுரம் துணைப்பதிவாளர் அலுவலகம்; 2-7-1880 ஆம் நாளைய ஆவண எண்: 510/80.

இராமநாதபுரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 4-12-1885ஆம் நாளன்று கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு ஒப்பாவணம் செய்யப்பட்டது; ஆவண எண்: 134/85.

1913ஆம் ஆண்டிலிருந்து 1928 வரைக்குள்ளான 15 ஆண்டுகளுக்குச் சங்கு, சிப்பி, மீன் வளத்துறைக்கான பிரிட்டிஷ் அரசு விட்ட குத்தகை இடங்களில் கச்சத்தீவும் ஒன்று. 1936 இல் குத்தகை விதிகள் புதுப்பிக்கப்பட்டபோதும் கச்சத்தீவு அந்தக் குத்தகை இடங்களில் ஒன்றாக இருந்தது.

19-2-1922-இல் இராமநாதபுரத்தின் திவானாக இருந்த திரு. ஆர்.சுப்பையா நாயுடு என்பவர், ஆர்.இரா ஜேசுவர சேதுபதிக்குத் தம் கடல் எல்லைகளைப் பற்றித் தந்த விளக்கங்களில் கச்சத் தீவைப் பற்றிய விவரம் அடங்கியுள்ளது. ஏற்பிசைவு செய்து கொள்ளப்பட்ட நாள் 27-2-1922.

1921-ல் கொழும்புவில் மீன்பிடி எல்லையை வகுக்க நடந்த மாநாட்டில் இலங்கையின் சார்பாக கலந்துகொண்ட ஹார்ஸ்பர்க், கச்சத்தீவுக்கு அப்பால், 3.45 மைல் மேற்கே உள்ள கடல்பகுதியும் உள்ளடங்கும் வகையில் எல்லை வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்திய அரசுக் குழுவினர், கச்சத் தீவு தங்களுக்கு சொந்தம் என்று இராமநாதபுரம் மன்னர் தந்த வரைபடம் காட்டினர். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு கச்சத்தீவு இந்திய வசமே இருந்தது.

இராமநாதபுரம் இராஜாவின் ஆட்சிச் செயலாளர் 20-4-1950-ல், எஸ்டேட், மேலாளர்க்கு எழுதிய மடலில் (Letter ROC No. 445/A2/50) 1929 – 1945 ஆம் ஆண்டுகளில் மீன்பிடித் துறைகளைப் பற்றிய கோப்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்றும், அந்தக் கோப்புகளில் கச்சத்தீவைப் பற்றியது ஒன்று என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் இருந்த முத்து மீன்வளத்துறையின் உதவி இயக்குநரின் கடிதத்தோடு கூடிய (1943) திரு.ஆர். கணேசன் என்பவர் தயாரித்த நிலப்படத்தில் கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.

1-7-1947 – இலிருந்து 30-6-1949 வரை கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது. குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள்: 26-7-1947. இராமநாதபுரத் துணைப் பதிவாளர் அலுவலக எண்: 278/48.

சுதந்திரத்திற்கு பின்னரும் கச்சத்தீவு இந்தியாவின் வசமே இருந்துவந்தது. பின் எப்படி தாரைவார்க்கப்பட்டது கச்சத்தீவு. கச்சத்தீவை மீட்பது முக்கிய தீர்வாக அமையுமா?

அலைகள் மோதும்…

ஜெகதீஸ்வரன்

Categories: Article, June 2013, Whistle
Tags: , ,

1 Comment to "ஓயாத அலைகள் - கரையிலிருந்து ஒரு கட்டுரை - பாகம் 2" add comment
Ashok Rajendran
July 8, 2013 at 11:20 pm

கச்சத்தீவு தீர்வாக அமையுமா என்ற கேள்விக்கு விடையாக அமையப் போகும் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்….

Leave a Reply

%d bloggers like this: