சீனா ஊடுருவல் – இந்தியா மீது ஆதிக்கம் செலுத்தவா

Wednesday, July 10th, 2013 @ 10:48AM

india-chinaஇந்திய சீன உறவு

புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவில் பரவிய முதலாம் நூற்றாண்டு காலகட்டங்களில் இருந்து இந்திய சீனா உறவு 1950 வரை சுமூகமாகவே இருந்துள்ளது. அதன் பின்னர்தான் திபெத் மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக முதன் முதலில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட ஆரம்பித்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திபெத் மீது இந்தியாவிற்கு அதிக உரிமை இருந்தது. இது சீனாவிற்கு பிடிக்கவில்லை . திபெத்தை இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டதாக குற்றம் சாட்டியது. சுதந்திரப் போராட்டம் முடிவிற்கு வந்தபின் 1950-ல் திபெத் மீது ஆதிக்கம் செலுத்தவும், தலாய் லாமா-விடம் இருந்து திபெத்தியர்களை விடுவிக்கவும் திபெத் மீது சீனா படை எடுத்தது. 1951-ல் இந்தியா உதவியுடன் சீனாவின் ஆதிக்கத்திற்கு ஒப்புக்கொண்டு அதே நேரத்தில் திபெத்தில் தலாய் லாமா ஆட்சி முறையே பின்பற்றப்படும் என்ற நிபந்தனையுடன் ஓர் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இந்தியா மீது முதல் போர்

இந்நிலையில், 1959-ல் திபெத் எல்லைக்குள் இந்தியா ஊடுருவி விட்டதாக குற்றம் சாட்டி, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 1,04,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமத்துக்கொண்டது சீனா. அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா மீது 1962-ல் முதல் தாக்குதலை தொடுத்தது. பின்னர் அதுவாகவே தாக்குதலை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து இந்தியா-சீனா உறவு மேலும் மோசமடைய ஆரம்பித்தது. மேலும் சீனா போஹ்ரைன் ஏவுகனை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் எதிரியாகவே சீனா கருதப்பட்டது.

இந்தியா மீது இரண்டாவது போர்

1965-ல் இருந்து சீனா பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டு 1971-ல் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் தொடுத்தது. ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததால் சீனாவால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து இந்தியாவுடன் உரசிக்கொண்டே இருந்து வருகிறது. 1988-ல் இருந்து 1993 வரை ஆறு கட்டமாக பேச்சு வார்த்தைகள் நடத்தியதில், 1993-ல் சீனத் தலைநகரம் பெய்ஜிங் சென்று இரு நாடுகளும் எல்லைக்கோடு பகுதிகளில் நிலவும் பதட்டத்தை குறைக்கும் விதமாக ராணுவ குறைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பதட்டம் குறைந்து வந்தது. அதே சமயம் சீனா பாகிஸ்தானுடன் கொண்டுள்ள பரஸ்பர அணு ஆயுதங்கள் பரிமாற்றம் மற்றும் தயாரிப்பு முறைகள் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை இந்தியா விரும்பவில்லை. அதேபோல் இந்தியா 1998-ல் நடத்திய அணு சோதனை சீனாவை மிரட்டுவதற்கான நடவடிக்கை என சீனா நம்புகிறது.

மீண்டும் சீனா ஊடுருவல்

இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியப் பகுதியை சேர்ந்த லடாக் பகுதியில் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு சீன ராணுவம் ஊடுருவி முகாம் அமைத்துள்ளது. சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தார் ரோடு போட்டுள்ளனர். இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் நமது உளவுத்துறைக்கு தெரிய வருகிறது. சுதாகரித்துக்கொண்ட மத்திய அரசு சீனாவை “அய்யா இது எங்கள் இடம். தயவு செய்து காலி பண்ணிக்கொடுக்கிரீர்களா?” என்று கெஞ்சி கேட்கிறது. ராணுவமும் நான்குமுறை பேச்சு வார்த்தை நடத்தியது. இறுதியில் நாங்கள் திரும்பி போக வேண்டுமென்றால் உங்கள் ராணுவம் முதலில் எங்கள் அருகில் இருந்து வெகு தூரம் பின்வாங்க வேண்டும் என கண்டிசன் போட இந்தியாவும் ஒப்புக்கொள்ள ஒருவழியாக சீனா அவர்களின் முந்தைய முகாமிற்கு திரும்பியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நல்லுறவு தொடருமா அல்லது ஆதிக்க வெறி மேலோங்குமா

இரு நாடுகளிடையே நல்லுறவு மேம்பட நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மே மாதம் 9-ம் தேதி சீனத் தலைநகரம் பெய்ஜிங் சென்றார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் திட்டமிட்டப்படி அவர் சீனா சென்று வந்தார். அதேபோல் சீனப் பிரதமர் லீ கெகியாங் மே மாதம் 20-ம் தேதி இந்தியா வந்தார். இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தச் செயலும் சீனா மேற்கொள்ளாது என்று உறுதியளித்துச் சென்றுள்ளார். இந்திய எல்லைப் பிரச்சனை, நதி நீர்ப் பிரச்சனை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் கூறிச்சென்றுள்ளார். திடீரென இந்த மனமாற்றத்திற்குச் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலே காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். உலக அளவில் இந்தியாவும் சீனாவும் தான் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புள்ள நாடுகளாகும். சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை சீர் செய்ய இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கிகொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காகவே இந்தியா வந்து இந்தியத் தொழில் அதிபர்கள் மத்தியில் பேசி நட்பு பாராட்டிச் சென்றுள்ளார்.

இது தொடருமா அல்லது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தினகரன் போஸ்

Categories: Article, June 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: