நல்லதோர் ஆரம்பம்

Tuesday, July 9th, 2013 @ 11:54AM

csg-51dbabf43a66aடாக்டர் அஷ்வின் மகேஷ் 11951 வாக்கு வாங்கினார். இதுதான் மே 5ம் தேதி வந்த செய்தி.

கொஞ்சம் கர்நாடக அரசியலை பார்ப்போம். எப்போதுமே கர்நாடக அரசியல் சாதிய மற்றும் மதங்களின் பிடியில் சிக்கி தவிக்கும். பிஜேபி கர்நாடகத்தை குறி வைத்து வேலை செய்ததன் விளைவாக 2006-ல் முதன் முறையாக தென் மாநிலங்களில் கால் வைத்தது. ஆனால் எடியுரப்பாவும் அவருக்கு பின்னால் வந்த அடுத்த முதல்வர்களும் ஆட்சி அரசியலில் கவனம் செலுத்தாமல் பெரும் ஊழல் செய்து வந்தனர். சுரங்க ஊழல் பல ஆயிரம் கோடிகளை தாண்டியது. ரெட்டி சகோதகர்கள் மாநிலத்தை குத்தகை எடுத்து சுரண்டினார்கள். லோக் ஆயுக்தா நீதிபதி திரு சந்தோஷ் ஹெக்டேயின் ஆதாரபூர்வமான அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. ஊச்ச நீதி மன்ற தீர்ப்புகள் மதிக்க படவில்லை. எடியுரப்பாவும் அவரது அமைச்சர்களும் மாநில முழுவதும் நிலங்களை அபகரித்தனர். நிர்வாகம் சீர் கெட்டு போனது. எதிர் கட்சியான காங்கிரஸ் உள் கட்சி பூசலில் சிக்கி தவித்தது. துரதிஷ்டவசமாக மூற்போக்கு மற்றும் இடது சாரி சக்திகளுக்கு கர்நாடக அரசியலில் எப்போதுமே இடம் இருந்ததில்லை. நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள். கடந்த 5 ஆண்டுகள் மிகவும் சோதனை காலம்.

இந்த சூழ்நிலையில் 2010 டிசம்பர் மாதம், பல்வேறு சிவில் சமூக குழுக்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பலர் Corruption Saaku என்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை பெங்களூரில் ஆரம்பித்தனர். டாக்டர் அஷ்வின் மகேஷ் மற்றும் டாக்டர் மீனாட்சி பரத் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். டிசம்பர் 8 பேரணியில் ரமோன் மகசேசே விருது வென்ற அர்விந்த் கெஜ்ரிவல் மற்றும் லோக்சத்தா நிறுவனர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பங்கேற்றனர்.

இந்த அமைப்பே பின்னாளில் ஊழலுக்கு எதிரான இந்தியா (IAC) ஆனது. நாளடைவில், டாக்டர் அஷ்வின் மகேஷ் மற்றும் டாக்டர் மீனாட்சி பரத் தங்களை லோக்சத்தா கட்சியில் இணைத்து கொண்டனர். டாக்டர் அஷ்வின் மகேஷ் கர்நாடக மாநில தலைவரானார்.

இதனிடையில், எடியுரப்பா பிஜேபி-யிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். ரெட்டி சகோதர்களும், ஸ்ரீராமுலுவும் கட்சி ஆரம்பித்தனர். கர்நாடகா தேர்தலுக்கு தயாரானது. நடுத்தர வர்க்கம் அரசியலில் சலிப்படைந்தும் தொழிலாள வர்க்கம் சக்தியற்றும் இருந்தது.

தீய அரசியலுக்கு பதில் நல்ல அரசியலே – அரசியல் புறக்கணிப்பல்ல

லோக்சத்தா கட்சி, ஊழல் இல்லாத நிர்வாகம், நேர்மையான அரசியல், பொருளாதார முன்னேற்றம், சமூக முன்னேற்றம், கலாச்சார முன்னேற்றம் முதலியவற்றை முன்னிறுத்தி கர்நாடகம் முழுவதும் 24 வேட்பாளர்கள் களமிறக்கியது. பெங்களுரில் மட்டும் 10 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

பொம்மனஹல்லியில் டாக்டர் அஷ்வின் மகேஷ், மல்லேஸ்வரத்தில் டாக்டர் மீனாட்சி பரத், BTM-ல் ரவி கிருஷ்ணா ரெட்டி, பசவனகுடியில் சாந்தலா தாம்லே மற்றும் ஹெப்பாலில் ஸ்ரீதர் பப்பிஷெட்டி ஆகியோர் தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பே களம் இறங்கினர்.

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முறையாக நிர்வகிக்கப்பட்ட பிரச்சாரம்

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு முழுநேர மேலாளர் பொறுப்பேற்றார். ஒவ்வொரு சனிக்கிழமையும் புதிய தொண்டர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கபட்டு, அவர்களிடம் வார்டு வரை படங்கள், வாக்காளர் பட்டியல் மற்றும் துண்டு பிரசுரங்கள் தரப்பட்டன. ஒரு பக்கம் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. மறுபக்கம் வீதிதோறும் லோக்சத்தா தொண்டர்கள் நீல நிற அங்கி அணிந்து வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் அழைப்புகள் , தொலைபேசி விடுபட்ட அழைப்புகள் மூலம் தன்னார்வ தொண்டர்கள் தங்களை இணைத்து கொண்டார்கள். அவ்வாறு சேர்ந்தவர்களை, அவர்களுடைய கால அவகாசம் மற்றும் வசிக்கும் பகுதிகேற்ப, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள், பிரச்சார அட்டவணை தயாரித்து பயன் படுத்தி கொண்டார்கள். வெள்ளி கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை பகுதி வாரியாக வீடுதோறும் பிரசுரங்கள் விநியோகப்பட்டன. லோக்சத்தா வேட்பாளர்களும் வீதி விதியாக சென்றனர்.

இவ்வாறு சென்ற தொண்டர்கள், வாக்காளர் பட்டியலை சரி பார்த்து, விடுபட்டவர்களை இணைக்கும் முயற்சியில் ஸ்மார்ட் வோட் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து செய்தனர். இதன் மூலம், பெங்களூர் நகரில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக குடியிருப்பு வளாகங்களில் வசிக்கும் வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். இது ஒரு நல்ல பெயரை கட்சிக்கு வாங்கிக்கொடுத்தது.

இதை தவிற, வாரநாட்களில், வேட்பாளர்களும், முழு நேர தொண்டர்களும் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலக வளாக பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் லோக்சத்தா வேட்பாளர்களை நேர்காணல் செய்து விவாதித்தன. இதன் மூலம் நல்ல விளம்பரம் கிடைத்தது.

லோக்சத்தா நிறுவனர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயண் இரண்டு முறை பெங்களூர் வந்து முக்கிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். கடைசி இரண்டு வாரங்களிலும், மே தினத்தன்றும் பெரிய கட்சிக்களுக்கு இணையாக வாகன அணிவகுப்புகள் நடந்தன. திறந்த வாகனத்தில் டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் அந்தந்த தொகுதி வேட்பாளர் தெரு முனை பிரச்சாரம் செய்தார்கள். இவற்றில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

சந்தோஷ் ஹெக்டே முக்கிய லோக்சத்தா வேட்பாளகளை ஆதரித்தார். மோகன்தாஸ் பாய், கிரண் மழும்தர் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘பெங்களூர் அரசியல் நடவடிக்கை குழு’ மூன்று தொகுதிகளில் லோக்சத்தா வேட்பாளகளை ஆதரித்தது (டாக்டர் அஷ்வின் மகேஷ், டாக்டர் மீனாட்சி பரத் மற்றும் சாந்தலா டாம்லே). இடது முன்னணி வேட்பாளர் இல்லாத தொகுதிகளில் லோக்சத்தா வேட்பாளர்களை ஆதரிக்க CPM மற்றும் சர்வோதயா கட்சிகள் முடிவு செய்தன. இது, கர்நாடகத்தில், ஒரு நல்ல முற்போக்கு தேர்தல் கூட்டணியாக பின்னாளில் மாறக்கூடும்

தேர்தல் நாள் பணி

தேர்தலில் இதுதான் மிகப்பெரிய வேலை. முக்கிய அரசியல் கட்சிகள், நிறைய பணத்தையும், பலத்தையும் செலவழிக்கும் நாள். ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் முகவர் தேவைப்படுகிறது. இதை தவிற, வாக்கு சாவடிக்கு வெளியே, வாக்காளர்களை சந்தித்து, பட்டியலில் பெயர் சரி பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றிக்கும் பயிற்சி பெற்ற அமைப்பும், பணமும் தேவை. லோக்சத்தா கட்சிக்கு இவை இரண்டுமே இல்லை. தன்னார்வ தொண்டர்களே இந்த பணியிலும் ஈடுபட்டனர். அநுபவமின்மை பல இடங்களில் வெளிப்பட்டது. இந்த அனுபவங்களைப் பதிவு செய்து, வரும் தேர்தல்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

முடிவுகள்

பொம்மனஹல்லியில் டாக்டர் அஷ்வின் மகேஷ் 11.915 வாக்குகளை பெற்றார். மல்லேஸ்வரத்தில் டாக்டர் மீனாட்சி பரத் 7.610 வாக்குகள் பெற்றார். இவர்கள் இருவரும் மூன்றாவது நிலையை எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், BTMல் ரவி கிருஷ்ணா ரெட்டி 6,596 வாக்குகள், பசவனகுடியில் சாந்தலா டாம்லே 9,071 வாக்குகள் மற்றும் ஹெப்பாலில் ஸ்ரீதர் பாப்பிஷெட்டி 6,271 வாக்குகள் பெற்றனர்.

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள், மக்கள் மாற்றத்தை விரும்புவதை காட்டுகிறது.

இது ஒரு நல்ல ஆரம்பம். ஆனால், போகவேண்டிய தூரம் அதிகம். இந்த தேர்தலில் லோக்சத்தா, வேட்பாளர்களின் தனிப்பட்ட தகுதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் அளித்தது. இது மட்டும் போதாது. மாற்று அரசியலையும், மக்களின் பிரச்சினைகளையும் முன்னெடுத்து தொடர்ந்து பணி புரிய வேண்டும்.

குருமூர்த்தி

Categories: Article, Elections, June 2013, Whistle
Tags:

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: