நீதித்துறை சீர்த்திருத்தங்கள் – 3

Monday, July 29th, 2013 @ 7:37PM

CourtGavelசென்ற வாரம் நீதித்துறையிலுள்ள நெருக்கடிகளையும், காரணங்களையும் பார்த்தோம். இவ்வளவு சிக்கல்களுக்கு பிறகு “நியாயம்” தேடி ஒரு ஏழையோ, படிப்பறிவில்லாதவரோ வருவதே சிரமமான காரியம். அதையும் தாண்டி வரும்பொழுது இது மக்களுக்கான நீதிமன்றமாக அவர்களுக்கு காட்சியளிக்காதது பெருந்துயரம். ஆனால் அந்த பெருந்துயரத்தை துடைக்கும் வழிகள் பல உண்டு. பொருட்செலவு அதிகமில்லாத, நடைமுறைக்கு முழுதும் ஒத்துவரக்கூடிய, மற்ற நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிற பல வழிகள் உண்டு.

அமெரிக்காவின் “மக்கள் நீதிமன்றம்” (People’s court)

நகராட்சி, நகர, மண்டல சட்ட எல்லைகளுக்கு உட்பட்ட, சிறிய தொகைக்கான உரிமையியல் வழக்குகளுக்கும், சிறிய சட்ட மீறல்களுக்கும் அமெரிக்காவில் “மக்கள் நீதிமன்றம்” வெகு சிறப்பாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு சிறிய அளவிலான சாலை போக்குவரத்து விதி மீறல் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சிக்கல்கள் ஏதுமில்லாத மிக எளிமையான நடைமுறைகள். தங்களுடைய வழக்கை தாங்களே நீதிபதியிடமோ, நீதிமன்ற ஆணையிரிடமோ தாக்கல் செய்து வழக்காடும் உரிமை. இந்திய மதிப்பில் 50,000 முதல் 7½ லட்சம் வரையிலான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி வழக்குகள் வரை இந்த நீதிமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன.

இங்கலாந்தின் “ஜஸ்டிசஸ் ஆஃப் பீஸ்” (Justices of the Peace)

90% அதிகமான உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகள் இந்த நீதியரசர்களின் மூலம் தீர்க்கப்படுகிறது. இவர்களுக்கென தனி சம்பளம் என்பது கிடையாது. இந்த நீதியரசர்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை சிறப்பாக நடத்தி முடிக்கிறார்கள். உட்கட்டமைப்பு, பொது போக்குவரத்து ஆகியவை மிகச் சிறப்பாக உள்ள இங்கிலாந்தில், சில உள்ளூர் நீதிமன்றங்கள் மூடப்பட்டபொழுது சாட்சிகள், குடும்பங்கள், காவலர்கள் 10 முதல் 15 மைல் தொலைவு பயணிப்பதற்கே கண்டனக் குரல்கள் எழுந்தன. இங்கலாந்தில் சிறிய தொகைக்கு 1973-ல் வகுக்கப்பட்ட இந்த நடைமுறைகள் மிக எளிமையானவை. சிறிய தொகைக்கான அளவாக இந்திய ரூபாயில் 60,000 என 1990-ல் நிர்ணயிக்கப்பட்ட்து. 1998ஆம் ஆண்டு இந்த தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்ட்து. எளிமையான நடைமுறை, வழக்கின் வேகம், செலவுகள் ஏதுமில்லா சூழல் இந்த நீதிமன்றங்களை அனைவரும் “அணுகும் தூரத்தில்’ வைத்துள்ளது

இந்தியா……..?

இந்தியாவில் எளிமையான, சாதாரணமான சட்ட நடைமுறைகள் கொண்ட அதிகப்படியான கீழமை நீதிமன்றங்களை அமைப்பது முதல் முக்கிய தேவை. ஏன், நம் நாட்டிலும் `இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றங்கள்” மிகச் சிறப்பாக நடந்து வந்தவைதான். அதே போன்றதொரு வேகமான, நியாமான, கடினமில்லாத நடைமுறைகள் கொண்ட, வட்டார மொழியை மட்டும் பயன்படுத்தும், அதிக செலவில்லாத, குற்றம் நடந்த உள்ளூரிலேயே (நகராட்சி, மண்டலம்) விசாரித்து தீர்ப்பளிக்கக்கூடிய அமைப்புகள்தான் நம் முதல் முக்கிய தேவை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு சட்டமன்ற பாராளுமன்றவாதிகளிடம் இருந்தும் (Legislative) , சட்டத்தை நிறைவேற்றுபவர்களிடம் இருந்தும் (Executive) சுதந்திரம் பெற்ற மக்களின் நம்பிக்கைக்குறிய அமைப்பாக செயல்படவேண்டும். ஏற்கனவே இருக்கும் நீதிபரிபாலனத்திற்கு கட்டுப்பட்டவையாகவும் அதன் கட்டமைப்பில் இருக்கும் `அவசியமான’ ஒன்றாகவும் இருக்க வேண்டும். எதிர்ப்புகள் மேல்முறையீட்டிற்கு வாய்ப்பு வழங்குவதாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் (உரிமையியல் – தொகை, குற்றவியல் – அளவு) தொடுக்கப்படும் வழக்குகள் இந்த நீதிமன்றங்களிலேயே விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக வழங்கப்படும் தீர்ப்பு எளிமையாக, சுலபாமாக வேகமாக அமல்படுத்த வேண்டும். சாத்தியமா?

நிச்சயம் சாத்தியம் – “மாதிரி” உள்ளூர் நீதிமன்றம்

 • கிராமங்களில் 25,000 மக்கள் தொகைக்கும், நகரங்களில் 50,000 மக்கள் தொகைக்கும் ஒரு உள்ளூர் நீதிமன்றம்.
 • மாவட்ட அல்லது குற்றவியல் அமர்வு நீதிபதியால் (பணிபுரியும் இன்னும் 2 நீதிபதிகளிடம் கலந்தாலோசித்து) நியமிக்கப்பட்ட சட்டம் படித்தவர் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது அரசு அதிகாரி நீதிபதியாக நியமனம். இவர்களுக்கு மதிப்பூட்டுத் தொகை மற்றும் பயணச்செலவு எல்லாம் சேர்த்து ஒரு மாதத்திற்கு 15,000-க்குள் செலவு.
 • நிரந்தர ஊழியர்கள் இல்லாது ஏற்கனவே இருக்கும் அரசு அலுவலகங்களை நீதிமன்றமாக உபயோகித்தல் .
 • நீதிபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள், தேவைபட்டால் மறுசேர்க்கை.
 • குறைந்தபட்ச வயது – 45
 • குற்றம் நடந்த இடத்திற்கே சென்று விசாரிக்கும் அதிகாரம்.
 • வழக்காட வட்டார மொழி மட்டும்
 • உரிமையியல் வழக்குகள் – 1 லட்சம் மிகாமல், குற்ற வழக்கு – 1 வருட தண்டனை மிகாமல்
 • எந்த ஒரு வழக்கிற்கும் – 90 நாட்களுக்குள் தீர்ப்பு.
 • முதல் மேல்முறையீடு 6 மாதத்திற்குள் முடிவு. இரண்டாம் மேல் முறையீடு அனுமதி மறுப்பு.
 • இளநிலை உரிமையியல் மாவட்ட நீதிபதி கொண்டு தீர்ப்பு அமல்.

மிக குறைந்த காலத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த முடியும். இந்தியா முழுக்க சுமார் 30,000 உள்ளூர் நீதிமன்றங்களை அமைக்க முடியும். 2002-ஆம் ஆண்டு மதிபீட்டின்படி மொத நாட்டிற்கும் சுமார் 600 கோடி ரூபாயிலேயே இந்த நீதிமன்றங்களை அமைக்க முடியும். தற்பொழுது 1400 கோடியில் இவற்றை அமைக்கலாம். இந்திய அரசின் ஒரு நாள் செலவு மட்டும் 5500 கோடி. ஒரு வருடத்திற்கு 90 லட்சம் வழக்குகள் வரை இந்த நீதிமன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும். நீதிமன்றங்களின் மீது ஏற்பட்டுவரும் நம்பிக்கை இழப்பை குறைத்து ஏழை மக்களுக்கும் அணுகும் தூரத்திலான நீதியை நம்மால் வழங்க முடியும்.

நீதிபதிகள் தேர்வு

சென்ற மாத கட்டுரையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் நீதிபதிகளின் நியமனம் குறித்த சில கருத்துகள் பகிர்ந்ததை பார்த்தோம். நீதிபதிகளின் நியமனம் குறித்து லோக் சத்தாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு. வெங்கடாசளையா மற்றும் திரு. ஜே. எஸ். வர்மா பரிந்துரைத்து, திரு வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களால் ஆதரவளிக்கப்பட்டு வந்த பரிந்துரைகள் இவை.

இந்திய நீதிப் பணி (இ.நீ.ப) – Indian Judicial Service(US)

இந்திய ஆட்சிப் பணிக்கும், இந்திய காவல் பணிக்கும் இருப்பது போன்ற தேர்வுகள் நீதித்துறையில் இல்லாததது ஒரு மிகப்பெரிய குறையே. அரசமைப்பு சட்டப்பிரிவு கூறு 312 இந்திய ஆட்சி, காவல் பணிகள் போல் அகில இந்திய நீதியணியும் வேண்டும் என வலியுறுத்துகிறது. அனைதிந்திய நீதித்துறையில் 236 கோட்பாட்டில் விளக்கப்பட்டுள்ளபடி ஒரு மாவட்ட நீதி பதவிக்கு தாழ்ந்த பதவி எதனையும் சேர்க்கக்கூடாது.

உயர்நீதிமன்றங்களுக்கு கீழுள்ள அத்தனை நீதிமன்றங்களும் அகில இந்திய நீதிப் பணி தேர்வுகள் கொண்டு வருவதே சரியானதாக இருக்கும் என்பது நம் நிலைப்பாடு. எப்படி மாவட்ட ஆட்சியர்களும், ஆட்சிப் பணி தேர்வுகள் முடித்தவர்களும் திறம்பட பல்வேறு துறைகளை நிர்வகிக்கிறார்களோ, அதே போன்றதொரு நிலைமை நீதித்துறையிலும் இ.நீ.ப மூலம் சாத்தியம். இது போன்ற ஒரு தேர்வு இல்லாதது திறமையான வக்கீலகள் கூட நீதிபதிகளாக உருவாவதை தொடர்ந்து தடுத்து வருகிறது. அகில இந்திய தேர்வு, உயர்தர பயிற்சி, நாணயம் மற்றும் செயல்திறன், நடுநிலை தவறாத சட்டத்திற்கு முரண்படாத நீதி வழங்க ஏதுவாக அமையும். இவர்கள் உயர்நீதிமன்றங்களுக்கும் செல்லும் வாய்ப்பும் உள்ளதால், அங்கும் தரம் நிச்சயம் உயரும்.

தேசிய நீதி ஆணையம் (National Judicial Commission)

தற்பொழுது இருக்கும் முறை நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளை நீதித்துறையே தேர்வு செய்யும் முறையாக இருந்து வருகிறது. சிறப்பான நீதியரசர்கள் நமக்கு கிடைத்திருந்தாலும், இந்த நியமனம் நோயிற்கான மருந்து நோயைவிட மோசமானதாக இருப்பதுபோல் அமைந்துவிடுகிறது. நம் நாடு ஜனநாயக நாடு என்பதற்கு மாற்றாக இந்த நியமனங்கள் உள்ளன. நீதிபதிகளின் நியமனத்தில் சட்டமியற்றுவோருக்கும் (legislative), நிறைவேற்றுவோருக்கும் (Executive) எந்த பங்கும் இல்லாததது வியப்பாகவும் உள்ளது. இந்த நியமனம் ஆக்கத்தை அழிப்பதாக உள்ளது. இதற்கான மாற்று என்ன?

தேசிய நீதி ஆணையம்

தேசிய நீதி ஆணையத்தில் அங்கம் வகிக்கும் எவரும் மற்றவருக்கு தங்கள் கருத்தை “வீட்டோ (ரத்து) செய்யும் அதிகாரம் இல்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, சட்டமியற்றுவோர், அவர்கள் சார்ந்த அறிவையும், நீதித்துறை தன் ஆறிவையும் இணைத்து ஒரு நடுநிலையான அமைப்பாக உருவாக உறுதி செய்ய வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபர்களை இந்த நியமனத்திற்கு எடுத்துக்கொள்வதை விடுத்து குறைகள் இல்லாத நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் இந்த அமைப்பில் இடம் பெற வேண்டும்.

தேசிய நீதி ஆணையத்தில் இவர்கள் இருக்கலாம்.

உச்சநீதிமன்றத்திற்கு

 • துணை ஜனாதிபதி – தலைமைப் பொறுப்பு
 • பிரதமர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் – உறுப்பினர்
 • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – உறுப்பினர்
 • உச்சநீதிமன்றத்தின் இரு மூத்த நீதியரசர்கள் – உறுப்பினர்

தேசிய நீதி ஆணையத்தை மேலும் விரிவுப்படுத்தும் கருத்துக்கள் தொடர்ந்து வருகின்றன. யார் உறுப்பினர் ஆனாலும் அவரவர் வகிக்கும் பொறுப்பு மூலம் மட்டுமே அவர் உறுப்பினராக ஆகலாமே தவிர, நியமனம் என்பது இதன் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவே அமையும்.

வேறு தகுதியுடைய நபர்களை உறுப்பினர்களாக கொள்ள தேவையான கலந்துரையாடல் மேம்பட்ட மக்களிடையேயும், சட்ட வல்லுநர்களோடும் மேற்கொள்ளலாம். ஆயினும் தேர்ந்தெடுக்கப்படும் நபர் மீது இருக்கும் உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் அவரை தேர்ந்தெடுக்காமல் இருப்பதே நல்லது. மொத்தத்தில் இந்த ஆணையம் பரிசுத்தமான ஆணையமாக இருக்க வேண்டும் என்பதே எண்ணம். மூத்த நீதியரசர்களை தேர்வு செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி 5 மூத்த நீதிபதிகளின் கருத்தையோ, அல்லது அவரோடு முன்னர் உயர்நீதிமன்றங்களில் பணிபுரிந்த நீதிபதிகளின் கருத்தையோ கேட்டு பெற வேண்டும். அனைத்தும் ஆவணம் செய்யப்படவேண்டும். இந்த அமைப்பு அரசியல் சாசனத்திற்கு மட்டும் உட்பட்டதாக அமைய வேண்டும்.

உயர்நீதிமன்றம்

 • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – தலைமைப் பொறுப்பு
 • உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – உறுப்பினர்
 • முதல்வர் – ?

உச்சநீதிமன்றத்திற்கு சொன்ன எல்லா கோட்பாடுகளும் இவற்றிற்கும் பொருந்தும்.
நியமனம் சரி, தவறு செய்யும் நீதிபதிகளை நீக்க முடியுமா?

அடுத்த மாதம் முற்றும் .

ஜெகதீஸ்வரன்

Categories: Article, July 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: