சென்னையின் கடற்கரையை சுத்தம் செய்த 5500 பேரிடம் இருந்து கோரிக்கைகள்

Tuesday, July 30th, 2013 @ 9:51PM

Akkari Beach Cleanupசென்னை ட்ரெக்கிங் கிளப் ஆனது இயற்கையின் மீதும் மலையேறுதல் போன்ற தீரச் செயல்களிலும் மிகுந்த ஈடுபாடு உடைய 19000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு லாப நோக்கம் இல்லாத மன்றம். 2008-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றம் தற்போது தென்னிந்தியாவிலேயே மிக அதிக செயல்படு கொண்டதாக உருவெடுத்துள்ளது. அதோடு இல்லாமல் சமூக ஈடுபாடு கொண்டு சேவை இல்லங்களில் வளரும் குழந்தைகளை எளிதான மலையேருதலுக்கு அழைத்துச் செல்லுதல், கடற்கரை, அருவிகள், குளங்களை சுத்தம் செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. அதன் நீண்ட கால உறுப்பினரான நான், அதனுடைய நான்காவது சென்னை கோஸ்டல் கிளீன்-அப் எனப்படும் கடற்கரை சுத்திகரிப்பில் கலந்து கொண்டு முக்கியமான மெரீனா கடற்கரையில் ஒருங்கிணைக்கும் குழுவிலும், ஊடக ஒருங்கிணைப்பு குழுவிலும் இடம் பெற்றிருந்தேன். நம் கடற்கரையை பாதுகாக்கும் விதமான கீழ்க்கண்ட கோரிக்கைகள் உறுப்பினர்களிடம் பெற்று தொகுக்கப்பட்டு அரசிற்கு அளிக்கப்பட உள்ளது.

கடற்கரையை சுத்தம் செய்த 5500 பேரிடம் இருந்து தமிழக முதல்வர் மற்றும் சென்னை மேயருக்கான சுத்தமான கடற்கரைக்கான கோரிக்கைகள்:

கடந்த ஜூன் 16 -ஆம் தேதியன்று சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் ஒருங்கிணைப்பில் க்ளப் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கார்ப்பரேட் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 5500 பேர் மெரீனா முதல் கோவளம் வரையிலான கடற்கரையை சுத்தம் செய்து, சுமார் 37 டன் கழிவுகளை வெளியே கொண்டு வந்தோம். இது நம் கடற்கரைகள் அபாய கட்டத்தில் இருப்பதைத் தெளிவாக்குகிறது. நாங்கள் இது பற்றி எங்கள் தொண்டர்களிடம் பரவலான கருத்துக்களைச் சேகரித்து அரசிற்கான கீழ்க்கண்ட முக்கியமான கோரிக்கைகளை கண்டறிந்தோம். இவற்றை துரித கதியில் செயல்படுத்தி அழிந்து வரும் நமது கடற்கரை வளத்தை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1) ஒவ்வொரு ஐம்பது மீட்டருக்கும் பிரத்யேக குப்பை தொட்டிகள்

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரும்பினால் ஆன குப்பை தொட்டிகள் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் கடற்கரையில் வைக்கப்பட வேண்டும். இது திருடு போவதைத் தடுக்கவும் அழகூட்டவும் உதவும். இல்லையேல் பெயிண்ட் அடிக்கப்பட்ட சிமெண்ட் தொட்டிகள் வைக்கப்படலாம். அவை நீண்ட நாள் நீடிக்கக் கூடியவை மேலும் திருடு போகாது. அல்லது மறு சுழற்சி முறையின் எடுத்துக்காட்டாக விழங்கும் விதமாக, பெரிய வாகனங்களின் பயன்படுத்தப்பட்ட டயர்கள் அடுக்கப்பட்டு குப்பை தொட்டியாக்கப்படலாம். கடற்கரை மணல் பகுதியில் இருந்து குப்பை அகற்றி சாலைக்குக் கொண்டு வருதலை எளிதாக்குவதற்கு மக்கும் தன்மையை உடைய பெரிய பிளாஸ்டிக் பைகள் தொட்டிக்குள் வைக்கப்பட வேண்டும். மக்கும் மக்காத குப்பைக்குத் தனித்தனியான தொட்டிகள் வேண்டும். இதன் மூலம் குப்பையைப் பிரித்துக் கையாலும் பாடத்தை எண்ணற்றோருக்கு கற்பிக்கும் கரைகளாக நமது கடற்கரைகள் மாறும்.

2) அபராத முறை செயல்படுத்துதல்

கடற்கரையைக் மாசுபடுத்தும் பொது மக்களுக்கும் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் உடனடி அபராத முறை சரியாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் பொருட்டு கண்காணிப்புக் கேமேராக்களையும் பொருத்தலாம்.

  • கண்காணிப்புக்குக் காவலர்கள் வேண்டும். இயற்கை ஆர்வலர்களை இதில் ஈடுபடுத்தலாம்.
  • ஒவ்வொரு பத்து மீட்டர் இடைவெளியில் Rs.500 வரை அபராதம் என்று அறிவிக்கும் பலகைகள் வைக்கப் பட வேண்டும்.
  • அபராதம் அதி தீவிரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • ஆரம்பத்தில் மிகவும் பரவலாக அபராதம் செயல்படுத்தப்பட்டால் மாசுபடுதல் வெகுவாகக் குறையும். பின்னர் கண்காணிப்பு குறைந்த அளவில் தொடர்ந்தால் போதுமானதாக இருக்கும்.

3) கடற்கரையில் வாழும் ஏழைகளுக்கு சுத்தமான இலவச கழிப்பிடம்

போர்க்கால அடிப்படையில் போதுமான எண்ணிக்கையிலான சுத்தமான இலவச பொதுக் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப் பட வேண்டும். நம் கடற்கரைகளில் இன்றும் திறந்திவெளி கழிப்பறைகளாக இன்றும் இருக்கும் நிலைமை மாற இது முக்கிய தேவையாகும். இன்று இலவச கழிப்பறையை நடத்தும் ஒப்பந்ததாரர்கள் சட்டத்திற்குப் புறம்பாக கட்டணம் வசூலிப்பது நாம் ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. மேலும் பராமரிப்பு முறையாக இல்லாமல் கதவுகள் இல்லாமலே பல கழிவறைகள் இயங்கி வருகின்றன. இதனாலேயே கடற்கரையில் காலைக் கடன்களைக் கழிக்கும் வழக்கம் தொடர்ந்து நடந்து அம்மக்களுக்கும் சுகாதார சீர்கேடு விளைவிக்கப்படுகிறது. கழிப்பறை பராமரிப்புக்கு வழங்கப்படும் பணம் தங்களுக்கு கிடைப்பதேயில்லை என்பது ஒப்பந்ததாரர்கள் கூறும் குறை.

4) கடற்கரையில் கடைகளை அனுமதிப்பதற்கான கொள்கை முடிவை மாற்ற வேண்டும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் வழக்கிற்கு அளித்த பதிலில் சென்னை மாநகராட்சி கடற்கரை கடைகளுக்கு அனுமதி வழங்கும் முடிவை எடுத்து இருந்தது. இந்த முடிவை தயவு கூர்ந்து மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தள்ளுவண்டிகளுக்கு மட்டும் உரிமம் அடிப்படையில் அணுகு சாலையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம். கடைகளே மாசுக்கு முக்கிய காரணிகளாக விளங்குவதால் கடற்கரை சுத்திகரிப்பில் இது ஒரு முக்கியமான படியாகும்.

5) அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுத்தல்

சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் சுமார் 700 இடங்களில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் கலப்பதாக மாநகராட்சி நடத்திய பல வருடங்களுக்கு முந்தைய ஆய்விலேயே தெரிய வந்தது. இந்த மொத்த கழிவும் கடலில் நேரடியாக கலந்து நம் கடற்கரையை மாசுபடுத்துகின்றன. தற்போது இந்த நதிகளை சுத்திகரிக்கும் பொருட்டு ஒரு ஸ்பெயின் நாட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிகிறோம். மேற்சொன்ன பிரச்சனைகள் தீர்க்கப்பட தேவையான அளவு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கழிவு நீர் வாறுகால் இணைப்புகளும் நிறுவப்பட்டு ஒரு முழுமையான தீர்வு ஏற்படுத்தப்பட்டால் தான் இந்த ஆறுகளின் சுத்திகரிப்பு சாத்தியமாகும். எனவே இந்த பிரச்சனைகளை தீர்க்க திட்டம் வகுக்க வேண்டுகிறோம்.

6) விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை மாநகராட்சியால் மேலே கூறிய அபராதத் திட்டம் செயல்படுத்தப் படும் முன் ஒரு முழுமையான விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

7) பிளாஸ்டிக் தடை

கடற்கரைப் பகுதிக்குள் எல்லா விதமான பிளாஸ்டிக் பொருட்களும் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட வேண்டும்.

8) குப்பையை தரம் பிரித்தல்

இன்று மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்படாமல் கொடுங்கையூர், பெருங்குடி போன்ற இடங்களில் கொட்டபடுவதால் அந்த பகுதிகளில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலா போன்ற முக்கிய இயற்கை வளங்கள் சீரழிகின்றன. இதை தடுக்க, சட்டம் குறிப்பிடுவது போல வீட்டிலேயே குப்பையைத் தரம் பிரித்து வாங்க வழி செய்து, பெரும்பாலான மக்கும் குப்பை உரமாக்கபடவும், மற்ற குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படவும் வேண்டும். இதன் மூலம் நச்சுத்தன்மை உடைய கழிவுகளையும் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும்.

9) பழைய மீன் பிடி வலைகளால் பிரச்சனை

எங்களது சுத்தம் செய்யும் முயற்சியின் போது scuba diving குழுவினரும் கலந்து கொண்டு கடலுக்கு அடியில் உள்ள பாதிப்பை அறிந்து வந்தனர். கடலின் தரைமட்டத்தில் நிறைய பிளாஸ்டிக், பழைய மீன்பிடி வலைகள் போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பல அறிய கடல் வாழ் உயிரினங்கள் சிக்கி மரித்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மீன் வலைகள் அனைத்து மீனவ கிராமங்களை ஒட்டிய பகுதிகளிலும் காணப்படுகிறது. அவை மக்குவது இல்லை. பயன்பாடில்லாத பழைய வலைகள் கூட மீனவர்கள் புது வலைகளை பாதுகாப்பது போன்ற விஷயங்களுக்காக கடற்கரையிலே வைப்பதால் அவை பல நேரங்களில் கடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு நம் மீனவர்கள் நவீனப்படுத்தப்படுவதுவே ஆகும். தற்போதைக்கு வலைகளை பத்திரமாகப் பாதுகாக்க மீனவர்களுக்கு வேறு வசதிகள் செய்து தரலாம்.

நன்றி
சென்னை ட்ரெக்கிங் கிளப்,
சென்னை.

அஷோக்

Categories: Article, July 2013, Whistle

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: