பேரழிவு மேலாண்மை – தமிழகம் தயாரா?

Thursday, July 25th, 2013 @ 10:51PM

uttarakhand_floods_rainsஉத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் இமாலயத்தின் சுனாமி என்று ஆங்கில தொலைக்காட்சிகள் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் ஒரு சுனாமி இப்போது இந்தியாவை தாக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழகமாக தானே இருக்கும். அப்படி ஒரு இயற்கை சீற்றம் தமிழகத்தை தாக்கினால் நம் மாநிலம் அதை எதிர்கொள்ளவோ சமாளிக்கவோ எந்த அளவு தயார்நிலையில் உள்ளது?

இந்திய கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை ஒன்று பேரழிவு காலங்களில் நாம் எந்த அளவு தயார் நிலையில் உள்ளோம் என்பது குறித்து வெளியிட்டுள்ளது. பல மாநிலங்களின் நிலை இதில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மார்ச் 2012 வரை உள்ள நிலவரங்களை ஆராய்ந்து உள்ளது. தமிழகத்தை பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். மாவட்ட அளவு தயார்நிலை ஆய்விற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்கள் உட்படுத்தப்பட்டன.

மாநில மற்றும் மாவட்ட பேரழிவு மேலாண்மை ஆணையங்கள்

நம் மாநிலத்தை பொறுத்த வரையில் புயல், சுனாமி மற்றும் நிலச்சரிவு ஆகிய மூன்றும் முக்கிய பேரழிவுகளாக சொல்லப்பட்டுள்ளன. இது போன்ற பேரழிவுகளை சமாளிக்க, மாநில அளவில் – மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 2008-லும் , மாவட்ட அளவில் மாவட்ட பேரழிவு மேலாண்மை ஆணையங்கள் ஜனவரி 2012-லும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் மற்றும் மாவட்ட பேரழிவு மேலாண்மை ஆணையங்கள் இது வரை ஒரு முறை கூட கூடவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். மாநில பேரழிவு மேலாண்மை ஆணையத்தின் விதிகள் எதுவும் தயார் செய்யப்படவில்லை. அரசும் அதற்காக எந்த முனைப்பும் காட்டவில்லை .

அவசரகால நடவடிக்கை மையங்கள்

பேரழிவு காலங்களில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள , மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை அவசரகால நடவடிக்கை மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும். ஆனால் இந்த மையங்கள் எல்லாம் வேறு ஏதேனும் துறையால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினத்தில் உள்ள மையத்தை மீன்பிடி பல்கலைக்கழகம் உபயோகப்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி மையம் தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சமூகமும், கன்னியாகுமரியில் மையத்தில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

கன்னியாகுமரி மையத்திற்கு உரிய உபகரணங்கள் நில ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள ஒரு பழைய அறையில் போடப்பட்டுள்ளது. அவசரகால நடவடிக்கை மையங்களுக்கென தனியாக மனிதவளம் எதுவும் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை நீளம் சுமார் 163.5 கி.மீ. இந்த கடற்கரை ஓரத்தில் 21 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு ஒரு ரோந்து படகு கூட இல்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள 59 ஆரம்ப எச்சரிக்கை அமைப்பில் 14 உபயோகிக்கும் நிலையில் இல்லை. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 30 எச்சரிக்கை அமைப்பும் பழுதடைந்துள்ளது.

நிதி பயன்படுத்துதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை சீற்ற நிவாரணத்திற்கு ஜூன் 2008 முதல் டிசம்பர் 2011 வரை கொடுக்கப்பட்ட தொகைக்கான வட்டி தொகை 22.85 இலட்சம் அரசு கணக்கில் இன்னும் திரும்ப கட்டப்படவில்லை. 2010-11-ம் ஆண்டு பேரழிவு மேலாண்மை திறன் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 5 கோடி சுத்தமாக பயன்படுத்தப்படவில்லை.

நமது பேரழிவு மேலாண்மை இந்த நிலையில் உள்ளது. உத்தராகண்ட் வெள்ளத்திற்கு பிறகாவது நமது மாநில அரசும் நிர்வாகமும் விழித்து கொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

யுவராஜ்

Categories: Article, July 2013, Whistle
Tags: ,

1 Comment to "பேரழிவு மேலாண்மை - தமிழகம் தயாரா?" add comment
Shanthi Vathani
July 27, 2013 at 3:16 pm

It is really informative. Government allocates funds but no follow up. Suya nalam thalai thoukumpdhu podhu nalam thalai thongi pogirathu oru nilayil kanamalae poividukirathu. Vandha parthukolvom endra alachiya pokkae ithagaya edargalai santhi vaikirathu.
sithikkavum vaikkrathu. God bless you
Nenjai thotta nijangal. Vandha pragu parkkalam endra alatchiya pokkae nam thunbangalukkellam karanam. Makkalukku suyathevai porattathukkae neram sareya ulladhu. Engae arasangathay vizhikka seivathu.

Leave a Reply

%d bloggers like this: