ஆட்டோ கட்டண முறைப்படுத்தல் – தமிழக அரசு அறிவிப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது

Tuesday, August 27th, 2013 @ 11:00AM

auto-fare-regulationஅதிகபட்ச ஆட்டோ கட்டணமாக அறிவிக்கப்பட வேண்டும் – மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

மிகவும் காலம் தாழ்த்தி உச்ச நீதிமன்றத்தின் கெடுபிடிகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டாலும், கடந்த ஆட்சி போல் பெயரளவில் நடைமுறைக்கு ஒவ்வாத கட்டணத்தை நிர்ணயிக்காமல் கிட்டத்தட்ட சரியான கட்டணத்தை நிர்ணயித்ததொடு அல்லாமல், புகார் எண்ணையும் அறிவித்து கடும் நடவடிக்கை எச்சரிக்கையும் விட்டிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஆயினும், தற்போது அறிவிக்கப்பட்ட கட்டணம் சென்னை போன்ற மாநகரத்தில் வாழும் ஆட்டோ தொழிலாளிக்கு வாழ்வாதார ஆகும் செலவு, பெட்ரோல் ஆட்டோக்களுக்கு ஆகும் அதிக எரிபொருள் செலவு ஆகியவற்றை மனதில் கொண்டு சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதை அதிக பட்ச கட்டணமாக அறிவித்து இதை விட குறைந்த கட்டணம் வசூலிக்கவும் வழி செய்யப்பட வேண்டும். காஸ் ஆட்டோ ஓட்டும் நம்ம ஆட்டோ போன்ற நிறுவனங்கள் இன்றே அரசு அறிவித்த கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் இயங்கிக் கொண்டு உள்ளன. அவர்களை அதிகம் வசூலிக்கக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சந்தை முறை செயல்படாமல் தடுத்தல் கூடாது, சந்தையே சரியான விலையை நிர்ணயம் செய்யும்.

மீட்டர் போடுவது பொதுமக்களைக் காட்டிலும் ஆட்டோ தொழிலாளிக்கே நன்மை பயக்கும் என்பது நாம் சென்ற வருடம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிர கையெழுத்து பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள், ஓட்டுனர்கள் மற்றும் யூனியன்களிடம் கருத்து கேட்ட போது தெளிவாகத் தெரிந்தது. காரணம், மீட்டர் போடுவதால் வாக்குவாதம் குறையும் சவாரி அதிகரிக்கும். இன்று நான்கு ஐந்து சவாரிகளே செய்யும் ஆட்டோக்கள் அதிக சவாரிகள் செய்யும். இன்றை விட குறைந்த கட்டணம் வசூலித்தாலும் அவர்களின் ஒரு நாள் வருமானம் அதிகமாக இருக்கும். ஆகவே இது தொழிலுக்கு பெரும் நன்மை பயக்கும் முடிவே. அப்படிப் பார்க்கும் போது கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் அது தீமை பயக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் அதிக கட்டணத்தால் சாதாரண ஆட்டோக்கள், அபே ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாடா மேஜிக் போன்ற வாகனங்களுடன் போட்டி போடா இயலாமல் போகும். எனவே காஸ் ஆட்டோக்கள், சிறு நகர ஆட்டோக்கள் அல்லது தங்கள் சொந்த பகுதிக்கே திரும்பும் ஆட்டோக்கள் (போர்டு வைக்க அனுமதிக்கலாம்) இந்த அதிக பட்ச கட்டணத்திலிருந்து குறைத்து வசூலிக்க வழிமுறை செய்யப்பட வேண்டும். இதனால் காலி சவாரி மூலம் எரிபொருள் வீணாவது தடுக்கப்படும், செயல்பாட்டுத் திறன் ஓங்கும், விலை குறையும்.

இத்துடன் ருபாய் 80 கோடி செலவில் இடத்தை காட்டும் ஜி.பி.எஸ் கருவிகளை (GPS – Global Positioning System) அரசு இலவசமாக பொறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை ரசீது வழங்கவும், அபாய பொத்தானை நிறுவி பயணிகளுக்கு ஆபத்து எனில் சரியான இடத்திற்கு விரைந்து காவல்துறை வருவதற்கும் பயன்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது போன்ற அதிக அளவு முதலீட்டில் நிறுவப்படும் தொழில்நுட்பங்களை திறன்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஆட்டோக்களில் உள்ள ஜி.பி.எஸ் கருவிகளை நவீன தொலைபேசிகளில்(Smart phones) உள்ள Apps-களுடன் இணைக்கலாம். மேலும் இதற்கென கால் சென்டர்கள் (Call centers) அமைத்து, பொது மக்கள் தொலைபேசி மூலம் அழைத்தால் அருகில் உள்ள ஆட்டோக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்ப செய்யுமாறும் வசதிகள் ஏற்படுத்தலாம்.

இன்று ஸ்டாண்ட் ஆட்டோக்கள் பிற ஆட்டோக்களை தங்கள் ஸ்டாண்டில் நிறுத்த அனுமதிப்பதில்லை. இதனால் பயணிகளை வேறு பகுதியில் இறக்கி விட செல்லும் ஆட்டோக்கள் வரும் வழியல் பெருமளவில் காலி சவாரி செய்ய நேரிடுகிறது. இதை மாற்றி எந்த ஆட்டோ எந்த ஸ்டாண்டில் வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்ற நடைமுறை வேண்டும். இதை மறுக்கும் ஆட்டோ ஸ்டாண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு கட்டண முறைப்படுத்தல் செய்ததோடு நிற்காமல் அது எந்த அளவில் செயல்படுத்தப் படுகிறது என கண்காணித்து, அதில் மேற்கூறிய நடவடிக்கைகளையும் எடுத்தால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு இல்லாமல் பொதுமக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பெருமளவில் நன்மை கிட்டும்.

Categories: Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: