மாநிலங்களவை தேர்தல் சொல்லும் செய்தி

Tuesday, August 6th, 2013 @ 11:33AM

parliamentகடந்த ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவினைச் சேர்ந்த கே.ஆர். அர்ஜுனன், வா.மைத்ரேயன், டி.ரத்தினவேல், ஆர். லட்சுமணன் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து டி. ராஜா அவர்களும், திமுக-வைச் சேர்ந்த கனிமொழி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேமுதிக-வைச் சேர்ந்த ஏ.ஆர். இளங்கோவின் 22 வாக்குகள் மட்டும் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒரு செல்லாத வாக்கும் பதிவானது.

இந்த தேர்தலின் முடிவிற்குப் பின்னால் இருக்கும் இரகசிய பேரங்கள் பற்றியும், “துரோகங்கள்” பற்றியும் அலசி ஆராயும் ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல இது. ஒரு சாதாரண குடிமகனாய் இந்த தேர்தல் சொல்லும் செய்தியை உற்று நோக்கும் ஒரு உண்மையான முயற்சியே.

முதலில் மாநிலங்களவைக்கு நடத்தப்படும் தேர்தல் நடைமுறையைப் பார்க்கலாம். இது பொதுத் தேர்தலில் பின்பற்றப்படும் `ஒரு ஓட்டு அதிகம் பெற்றிருந்தாலேவெற்றி’ (First Past The Post) என்ற முறையிலேயே நடத்தப்படுவதல்ல. இதில் விருப்ப ஓட்டு (Preferential voting) முறை என்ற ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. நமது நாட்டின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலிலும் இந்த முறையே பின்பற்றப்படுகிறது.

அது என்ன விருப்பத் தேர்வு முறை என்கிறீர்களா? போட்டியிடுகின்ற ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்காமல், போட்டியிடுகின்ற அனைவரின் மீதான தேர்வு விருப்பத்தை இதில் பதிவு செய்ய முடியும். உதாரணமாக இந்த தேர்தலையே எடுத்துக் கொள்வோம். போட்டியிடும் 7 வேட்பாளர்களில் 6 பேரை தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்குச் சீட்டில் உள்ள 7 பேரையும் வாக்காளரின் விருப்பத்தின் அடிப்படையில் 1,2,3 என வரிசைப்படுத்தி ஓட்டளிக்கலாம். அடிப்படையில் இது நல்ல ஒரு தேர்வு முறையே. அனைவரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்வு இருக்கும்.

தேர்தலுக்கு முதல் வாரத்தில் அனைத்து கட்சிகளும் தங்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்களிக்கும் முறையில் விளக்க கூட்டங்கள் நடத்தியதை நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் சொல்லித் தரப்பட்டதெல்லாம் எந்தெந்த எம்.எல்.ஏ-க்கள் யாருக்கு “1” என எழுதவேண்டும் என்பதே. அதிலேயே ஒரு செல்லாத ஓட்டு வேறு. இந்த நிலைமையில் எங்கே 1,2,3 என வரிசைப்படுத்துவது.?!

அடுத்ததாக கட்சிகளின் செயல்பாடுகளைப் பார்க்கலாம். ஈழத் தமிழர் பிரச்சனையில் துரோகம் செய்து விட்டதாகச் சொல்லி ஆதரவை வாபஸ் வாங்கிய நிலையில் மறுபடியும் காங்கிரஸிடமே போய் திமுக கெஞ்சும் நிலை ஏற்பட்ட்து.

டெல்லிலேயே 5 வேட்பாளர்களை அறிவித்துவிட்டு திடீரென இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான டி.ராஜா-வை ஆதரிக்க முன்வந்தது அ.தி.மு.க.

தேமுதிக, கடைசி நேரத்தில் தனது வேட்பாளரை நிறுத்தி தேர்தலை உறுதி செய்தது. பா.ம.க கடைசி நேரத்தில் தேர்தலை புறக்கணித்தது.

இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஒன்று தான். கொள்கை, சுயமரியாதை, இன உணர்வு என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைத் தட்டி எழுப்புவதற்கும், மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனைகளில் உங்கள் கவனம் செல்லாமல் தட்டித் தூங்க வைப்பதற்கும் மட்டுமே இந்தக் கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

மக்கள் பிரச்சனைகளை நடைமுறை எதார்த்தத்தோடு அணுகும் அரசியலை நாம் என்று எதிர்நோக்குகிறோமோ அன்றுதான் நல்ல அரசியலுக்கான தேவையும் பிறக்கும்.

நந்தகுமார்

Categories: Article, Elections, July 2013, Whistle
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: