சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் – நாம் ஒன்று சேர வேண்டிய நேரமிது

Wednesday, August 14th, 2013 @ 10:14PM

காந்தியின் மிகப் பெரிய சாதனை ஆங்கிலேயரை எதிர்க்க சிதறி கிடந்த மக்களை ஒரு தேசமாக கட்டமைத்தது. பல கட்ட போராட்டங்களில் ‘உப்பு சத்தியாகிரகம்‘ என்ற போராட்டம் ஒவ்வொருவரையும் மிகச் சுலபமாக இணைத்தது. பாதிப்புக்குள்ளாகும் தனி மனிதர்களை ஒன்றாய் சேர்த்தது. அவரின் எளிமை அவர்களை வெகுவாய் கவர்ந்தது. இவர் நம்முள் ஒருவர் என நினைக்க செய்தது. “இவர் செய்தால் அது சரியாக இருக்கும்” என நம்பிக்கை விதைத்து அவர் பின் நடக்கச் செய்தது.

சுதந்திரத்தை பற்றி தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியமலோ பல்வேறு நிலைகளில் சாமானிய மக்கள் அதில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். போராடினார்கள். சுதந்திரம் பெற்றோம்.தங்கள் பின்னால் ஒரு பெரிய மக்கள் பலம் இருந்ததால்தான் முன் நின்று நடத்தியவர்களால் முன்னேற முடிந்தது. அப்பொழுதும் மக்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.ஆனால் பிரதான பிரச்சனை விடுதலையின் மீது கட்டப்பட்டிருந்தது. சுதந்திரம் ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்குமான தீர்வு என நம்பப்பட்டது.

சுதந்திரம் அடைந்த மறு கணம் பின் நின்றவர்கள் பின் சென்றார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கு இனி ஒரு தீர்வு வரும், நம்மை ஆள்பவர்கள் இனி நம் தேசத்தவர்கள். நம் பிரச்சனைகள் அறிந்தவர்கள், நமக்கான தீர்வை விரைவில் தருவார்கள் என முழுதாய் நம்பினார்கள். விடுதலையின் திருப்தி கண்டு தங்களுக்கான அரசியலின் முக்கியத்துவத்தை மறந்தார்கள். இது தான் மிகப் பெரிய பிரச்சனையாய் இன்றும் இருக்கிறது.

முன் நின்றவர்களுக்கு திடீர் என தரப்பட்ட ஆளுமையும், அதிகாரமும் போதை தந்தது. நம்மை கேள்வி கேட்க ஆளில்லை என்ற நிலை ஏற்பட்டது.

நாட்டின் நிலை கண்டு புதியவர்கள் வந்தார்கள். உண்மையான நாட்டுப் பற்றுடன், உண்மையான மக்கள் சேவைக்கு வந்தார்கள். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வாய்ப்பு வந்தவர்களுக்கும் கேள்வி கேட்கும் எந்த அமைப்பும் இல்லை. இருக்கும் அமைப்புகள் தவறுக்கு துணைபோவதாகவும், நன்மைக்கு சிம்மசொப்பனமாகவும் அமைந்தது. ‘அரசியல் மோசம்’ என்ற நிலைக்கு அரசியல் ஒரு அவதூறு சொல்லாகிப்போனது.

மீண்டும் புதியவர்கள் வந்தார்கள். சிறிய அளவிலான அரசியல் சேவை செய்தவர்கள் சமூக சேவகர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டார்கள். நிஜ அரசியலை புறக்கணித்தார்கள்.

அரசியல் மோசம் கோசம் இந்த முறை மோசமானவர்களுக்கான இடமான அரசியலை தேர்வு செய்துள்ளது. தீயவர்கள் வசிக்கும் இடம் அரசியல் என்ற அளவில் இன்று அரசியல் பார்க்கப்படுகிறது.
இதை மீறி தூயவர்கள் அரசியலுக்கு வர முற்பட்டால் அவர்களை இந்த சமூகம் தீயில் இறங்கி தங்கள் தூய்மையை நிரூபிக்க சொல்கிறது. அதற்கும் துணிந்த அவர்களுக்கும் நாளை வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால் இவர்களும் தவறு செய்தால்?

அவர்களும் தவறு செய்யலாம். அமைப்புகள் மாறாதவரை அவர்களும் தவறு செய்யலாம். ‘நான் தவறு செய்தால் நான் தண்டிக்கப்பட வேண்டும்’. அமைப்புகளை சரியாக கட்டமைக்க தேவை அறிவு! அறிவு! அறிவு! மட்டுமே.

உண்மையான சுதந்திரத்திற்கு தற்பொழுதைய தேவை சரியான சீர்திருத்தங்கள். அதோடு மேலும் மேலும் அதிகமான நல்லவர்கள். சுதந்திரம் பெற்றபொழுது விலகிச் சென்றவர்களின் அடுத்த, அடுத்த தலைமுறைகளுக்கான நேரமிது. நாம் ஒன்று சேர வேண்டிய நேரமிது. அதே சமயம் பொறுமையோடு, அறிவுப்பூர்வமாக பிரச்சனைகளை அணுக வேண்டிய நேரமிது. 67 ஆண்டுகாலங்களாக பல துறைகளில் நடந்த தவறுகளை கலைய பொறுமை மிக அவசியம்.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சொல்லும், கேட்கும், எழுதும், படிக்கும், பார்க்கும் ஒவ்வொருவரும் அரசியல் நோக்கி வரும் தினம் நமக்கான முழுமையான சுதந்திரம் கிடைத்திருக்கும். அதுவரை அடைந்த விடுதலைக்கு மட்டும்…..

Categories: Article
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: