சகோதரா!

Saturday, August 24th, 2013 @ 11:13AM

ஓர் ஆளுமையை பற்றி எழுதும் போது, மனது ஒரு சில நினைவுகளை, நம் திறமைகளை, தகுதிகளை எடைபோடும், பின் முடிவெடுக்கும் “இதை செய்யலாமா? வேண்டாமா?” என்று. ஏனெனில் மனிதர்களில் உயர்ந்தவர்களைப் பற்றி எழுதும் போது ஏற்படும் ஒருவித தகுதியின்மையின் தடுமாற்றம். நான் இன்று உனக்கு எழுத முடிவு செய்தவரை நினைத்தவுடன் எனக்குள் எழுந்த கேள்வி இதுதான், “இவரை பற்றி சொல்ல நான் யார்?” என்று. ஏனெனில் இவரைப் பற்றி ஈ.வெ.ரா இராமநாதபுரம் மாவட்ட கூட்டத்தில் இப்படி பதிவு செய்கிறார்.

“இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன் னும் ஒரு பத்து ஆண்டிற்காவது இவரை ஆள விடுங்கள், இவரை நாம் பயன்படுத்த தவறிவிட்டால் நமக்கு வாழ்வளிக்க வேறு யாரும் கிடையாது”

இப்படி யாரை இவர் கூறினார்?

“இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த உலகில் வாழ்ந்தார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்பவே மறுப்பர்” இப்படி காந்தியடிகளைப் பற்றி ஜன்ஸ்டீன் கூறினார். இதுவும் நான் இன்று எழுத போகும் ஒரு மாமனிதனுக்கு பொருந்தும்.

சரி சகோதரா இன்னும் உனக்கு விளங்க வில்லையா? சரி அந்த ஆண்டவன் (நம்மை ஆட்சி செய்தவர்) நமக்கு ஏற்படுத்தி தந்த ஒரு சில நலங்களை பட்டியல் இருக்கிறேன் பார்.

1. நெய்வேலி பழுப்பு நிலக்கரி திட்டம்

2. பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை

3. திருச்சி – பாய்லர்

4. ஆவடி கன ரக வாகன தொழிற்சாலை

5. ஊட்டி பிக்ஷிதி

6. கல்பாக்கம் அனுமின் நிலையம்

7.திருச்சி- துப்பாக்கி தொழிற்சாலை

8. சேலம் உருக்காலை

9. மூன்று சர்க்கரை ஆலைகள் 14 ஆனது

10. கிண்டி டெலிபிரிண்ட் தொழிலகம்

K._Kamarajஅப்பாடி புரிந்ததா? நன்று சகோதரா, ஆம் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் காமராஜர் தான். படிக்காத மேதை, தன்னலம் அற்ற தலைவன், தமிழகம் கண்ட தவப்புதல்வன்.

ஒரே ஒரு தொழிற்சாலை கொண்டு வர முயற்சிக்கும் உதவியவரின் உதவியாளரே இன்று வெளி நாட்டில் வீடு வாங்கி விடுகிறார் என்றால் மேல் பட்டியல் இட்ட அத்தனையும் செய்து முடித்தவர் தனிப்பட்ட முறையில் எத்தனை கோடிகள் சேர்த்து கொண்டிருக்கலாம். ஆனால் மனிதன் சாகும்போது 30 ரூபாய் பணம் தான் இருந்ததாம். நம்பமுடிய வில்லை தானே. ஆனால் அதுதான் உண்மை.

சகோதரா எதைப் பட்டியல் இடுவது… காமராஜர் அவர்களின்

1. எளிமையையா?

2. நிர்வாக திறமையையா?

3. கனிவான பார்வையையா?

4. தொலைநோக்கு திட்டங்களையா?

5. நேசத்தையா

6. இராஜதந்திரங்களையா

7. அரசியலுக்கு வகுத்த அறநெறிகளையா?

இந்தப் பட்டியல் மூலம் நான் உனக்கு என்ன சொல்ல பேசுகிறேன் என்பதை விட இவற்றில் சிலவற்றை நீ படிப்பதன் மூலம் நீ இனி என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு வழி கிடைக்கும்.

தனது 16 வயதில் காங்கிரஸ் பேரியக்கத்தில் சேந்து திரு.சத்தியமூர்த்தி அவர்களின் செயல் பாடுகளால் கவரப்பட்டு அவரின் சீடனாகவே மாறிப் போனார். அரசியலில் குரு-சீடர் உறவு நிலைப்ப தில்லை. கீழே இருப்பவர் மேலே வந்து விட்டால் பின் தனது குருவிற்கே குழிதோண்டி புதைத்து விடும் கதைகள்தான் இப்போது அதிகம். ஆனால் காமராஜர் தனது சிஷ்ய நிலையை மறந்ததே இல்லை.

உதாரணம். திரு.சத்தியமூர்த்தி அவர்களின் குடும்பத்தாருடன் தான் முதல்வராய் இருக்கும் போது காரில் திருப்பதி கோவில் சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வரும் வழியில் காரில் பழுது ஏதோ ஏற்படுகிறது. முதல்வர் என்று பார்க்காமல் கீழே இறங்கி காரை தள்ளி விட்டாராம். இதை நீ “கப்ஸா” என்று நினைக்க ஆயிரம் காரணம் இருக்க லாம் சகோதரா, ஆனால் உண்மை என்று வரலாறு பதிவு செய்து வைத்து உள்ளது.

சரி குருவிற்கு மரியாதை செய்வது கடமை தானே என்று நீ வாதாடினால் இன்னொரு நிகழ்வு சொல்கிறேன். தமிழகத்தில் ஏற்பட்ட பெருமழை பெருவெள்ளம், சேதம் பார்வையிட வந்த முதல் வரை அதிகாரிகள் வெள்ளத்தின் சீற்றத்தை காட்டி, பயமுறுத்தி அவர் பார்வையிட வந்த இடத்திற்கு அருகில் சென்று காரை நிறுத்தி, தூரமே இருந்து பார்க்க சொன்னார்கள் காமராஜர் சொன்னாராம், நான் என்ன கோட்டையில் இருந்து உத்தரவு மட்டும் போடும் மனிதனா? மக்களின் சிரமம் என்ன என்று அறியாதவனா? என்று வினவி வேஷ்டியை மடித்து கட்டி, கயிற்றின் உதவியுடன் மார்பளவு தண்ணீரில் நடந்து மக்களுக்கு ஆறுதல் சொன்னாராம், வேறு வழி இல்லாமல் அவரோடு அதிகாரிகளும் நடக்க வேண்டியது ஆயிற்று. என்ன முன்பு சொன்னதை விட இது மிகப்பெரிய “உட்டாலக்கடி” என்று நினைக்கிறயா? இல்லவே இல்லை. சகோதரா உண்மை. 100% அக்மார்க் உண்மை இது.

தான் இணைந்து உள்ள இயக்கத்தில் தனது செயல்பாடுகள் மூலம் ஒரு அழுத்தமான பார் வையை எல்லோர் மனதிலும் பதித்தவர். நினைத்து இருந்தால் கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் தான் ஊழியன் மட்டுமே என்று உறுதியாக நம்பி தேச நலனிற்கு பங்களிக்க கட்சியில் இருந்தார்.

காங்கிரஸ் பேரியக்கம் திரு.நேரு காலத்தில் ஒரு சில தொய்வுகளை சந்திக்க நேர்ந்தது. அந்த இயக் கத்தை வழி நடத்த வட நாட்டில் எத்தனையோ தலைவர்களும் இருந்தார்கள். ஆனால் ஒரு “இக்கட்டான” நிலை என்று வந்தால் அவர்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டி என்று நம்பி இருந்தது திரு.கு.காமராஜர் அவர்களை மட்டுமே. சகோதரா இன்று யாராவது ஒரு வட்ட, “வார்டு மெம்பர்” பதவியை விட்டு தருவார்களா? ஆனால் இரு முறை இந்த பரந்து, விரிந்த பாரத நாட்டை ஆளும் பிரதமர் களை முடிவு செய்தார் ஆம் 1964 ம் ஆண்டு திரு. லால்பகதூர்சாஸ்திரி அவர்களையும் 1966 ஆண்டு திருமதி. இந்திராவையும் ஆட்சிக்கு கொணர்ந்தார். அதனால்தான் அவரை அரசியல் “கிங் மேக்கர்” என்று குறித்து கொண்டது.

சகோதரா 1945 முதல் 1963 வரை 9 ஆண்டு கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். இன்றும் நாம் கட்சி வேறுபாடு இன்றி எல்லோரும் மீண்டும் காமராஜர் ஆட்சி வேண்டும் என்கிறோம்.

தமிழக வரலாற்றில் ஒருவர் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் இருந்தது அவர்தான். நினைத்து இருந் தால் இப்போது எல்லாரும் சொல்கிறார்களே நிரந்தர முதல்வர் என்று அதை அனுபவித்து இருந்து இருக்கலாம். ஆனால் நேரு அவர்களிடம் ஒரு திட்டத்தை முன் வைக்கிறார். என்ன தெரியுமா? “கட்சியில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு வழி விட்டு ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி கட்சி பணி ஆற்ற வேண்டும். என்று இதற்கு கே – பிளான் என்று பெயர். நீ நினைக்கலாம் கிறுக்கு பிளான் என்று. இல்லை காமராஜர் பிளான் அது.

இதில் மிக பெரிய அதிசயம் என்னவென்றால் இந்த திட்டம் வந்த இரண்டு மாத காலத்தில் ஆறு முதன் மந்திரிகளும், 6 மத்தியமந்திரிகளும் பதவி விலகினர் என்பது.

கல்விக்காகவும், ஏழைகள் கல்வி பெறவும், கல்வி கூடங்கள் எழுப்பவும் காமராஜர் போன்று இந்த இந்திய துணைக்கண்டத்தில் யாரும் இல்லை என்பது “உள்ளங்கை நெல்லிக்கனி” அவரதுமகத்தான யோசனைதான் “மதிய உணவு திட்டம்” இன்று நான் இதை எழுதும் நிலைக்கு உயர அவர் கொடுத்த உணவுதான் காரணம்.

நீலகிரி மலையில் உள்ள குந்தா நீர்மின்திட்டம் செயல்படவில்லை. சி.சுப்பிரமணியம் நிதி அமைச் சர் திரு.தேஷ்முக் அவர்களை சந்தித்து நிதி வேண்டி வாதாடினார் திரு.நேரு அவர்களிடமும் எடுத்து உரைத்தார். பின் கனடா நாட்டின் உதவி யுடன் அதை முடித்து தர திரு.தேஷ்முக் காம ராஜருக்காக அதை செய்தார். பின் அந்த திட்டம் செய்து முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு காமராஜ ரின் நாளை எதிர்பார்த்து இருந்தபோது, செய்நன்றி மறவாத காமராஜர் திரு.தேஷ்முக் அவர்களை கொண்டு விழாவை நடத்தி முடிக்க முனைந்தார்.

வேறுசில அரசியல் நிகழ்வுகளால் தேஷ்முக் ஒதுங்கி இருந்த நேரம். தனது நோக்கத்தை தெளிவுபடுத்தி, அவரை வரவழைத்து விழாவை சிறப்பாக நடத்தி முடித்தார். திட்டமும் வெற்றி, திட்டத்தை நடத்தி கொடுத்தவருக்கும் வெற்றி, இதுதானே திட்டமிட்டவற்கு வெற்றி. அந்த வெற்றி யாளன் காமராஜர்.

சகோதரா,

தனது அன்னையார் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி நலிவுற்றிருந்த நேரம். தென்மாவட்டங் களில் சுற்று பயணம் மேற்கொண்டு இருந்த காம ராஜருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டிற்கு வரு கிறார். அன்னையின் அருகில் இருந்து நலம் விசா ரித்து, விடைபெற முயல்கிறார்.

அன்னைக்கு, காமராஜர் என்றும் பிள்ளை தானே, சாப்பிட்டு செல்லும்படி பணிக்கிறார். உணவும் அருந்துகிறார். பின் விடைபெற்று வெளியே வரும் போது சொல்கிறார். எவ்வளவு நாள் ஆயிற்று வீட்டில் சாப்பிட்டு என்று உடனிருந்தவர் கேட்டார்களாம் எவ்வளவு நாள் ஆயிற்று என்று. கர்ம வீரர் சொன்னாராம் ஒரு 20 ஆண்டுகள் என்று. சகோதரா, இன்று காணும் எல்லா கல்வி கூடங்களிலும் நான் அவரை காண்கிறேன்.

உணவில் சிறு, குறு தொழிற் சாலைகளில் 60 சிறு அணைகளில், நீர்மின் திட்டங்களில் எல்லா வற்றிலும் அவரை காண்கிறேன்.

அவர் ஆட்சியை வரவைப்போமா? வா, இனி ஒரு விதி செய்வோம்.

– நெமோ

Categories: Article, July 2013, Whistle, கடிதம்

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: