நேர்மைக்கு பரிசு

Wednesday, September 11th, 2013 @ 4:18PM

durga
உத்திரப் பிரதேசத்தில், மணல் மாபியாக்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், மத்திய அரசு தலையிடும் அளவிற்கு சென்றுவிட்டது.

உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுதம புத்தா நகர் பகுதியில், துர்கா சக்தி நக்பால், 28, என்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 10 மாதங்களுக்கு முன், உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, கவுதம புத்தா நகர் பகுதியில், நீண்ட காலமாக அராஜகத்தில் ஈடுபடும், மணல் மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைது செய்து, உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்தினம், உ.பி., மாநில அரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் துர்கா மீது உ.பி. அரசு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. மேலும் துர்கா மீது வழிபாட்டு தலத்தின் சுவரை, எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலும், முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும், இடிக்க உத்தரவிட்டதாக வழக்கு தொடரப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், இது குறித்து அவர் 10 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. உ.பி., மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜ., – காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா விவகாரம் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வரை சென்றுவிட்டது. இது குறித்து உரிய அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான நடவடிக்கை குறி்த்து, உபி. அரசின் விவகாரங்களில் தலையிட முடியாது. எனினும் தவறு நடந்திருந்தால், அம்மாநில அரசுடன் பேச்சு வார்‌த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சிவபால் யாதவ் கூறுகையில், , துர்கா நிர்வாகத்திற்குட்பட்ட கவுதமபுத்தா நகரில் மணல்கொள்ளை அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குவாரிகளில் நடக்கவே இல்லை, அவரது அறிக்கை தவறானது என்றார். இந்நிலையில் உத்திர பிரதேச பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி, வழிபாட்டு தல சுவரை இடிக்க உத்தரவிட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்ததாக உ.பி., அரசு கூறி வரும் குற்றச்சாட்டு பொய்யானவை என இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய வழிபாட்டு தலத்தை இடிக்க துர்கா உத்தரவிட்டதாக உ.பி., அரசு கூறியதை அடுத்து அம்மாநில வக்ப் வாரிய அமைப்பினர் கதல்பூர் கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக கிராம மக்களிடமும், கிராம தலைவர்களுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் தெரிவித்த அவர்கள் கூறியதாவது : அதிகாரி துர்கா, வழிபாட்டு தல சுவரை இடிக்க எந்த உத்தரவையும் போடவில்லை; மாறாக அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுரை மட்டுமே கூறி உள்ளார்; சில மணல் கொள்ளை மாபியாக்களின் சூழ்ச்சியால் தான் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; எங்களின் ஆய்வு தொடர்பான அறிக்கை உ.பி., அரசிடம் அளிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.மேலும் அவர் வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளதால் உ.பி.,அரசின் பொய் குற்றச்சாட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது.

மக்கள் ஆதரவு

ஆய்வைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்களும், பொது மக்களும் துர்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், துர்காவால் இப்பகுதியில் எந்த மத ரீதியான பதற்றமும் ஏற்படவில்லை; சில அரசியல் கட்சிகள் தான் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காக இவ்வாறு மத பிரச்னைகளை கிளப்பி வருகின்றனர்; சில மணல் மற்றும் நில மாபியாக்களால் தான் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; மாபியாக்கள் மற்றும் சில உள்ளூர் தலைவர்களின் நெருக்கடிய காரணமாகவே சமாஜ்வாதி இந்த முடிவை எடுத்துள்ளது; இதற்கு எதிராக எஸ்.எம்.எஸ்., பிரச்சாரம் ஒன்றையும் நடத்த உள்ளோம்; துர்கா அவரின் மூத்த அதிகாரிகளின் உத்தரவுபடியே நடந்துள்ளார்; அவர் மிகவும் தைரியமான பெண்; ஆண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கிய மாபியாக்கள் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்த அதிகாரி; மாபியாக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பல கோடி மதிப்பிலான வகுப்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் துர்காவின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது; பல கிராம நிலங்களும் மீட்கப்பட்டுள்ளது; நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதமே போலீஸ், முதல்வர் அகிலேஷ், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் முறையிட்டோம்; ஆனால் எந்த பலனும் இல்லை; ஆனால் துர்கா வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது; எவ்வித பாதுகாப்பும் இன்றி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கையும், மக்களிடம் விசாரணையும் நடத்தும் புத்திசாலியான தைரியமான அதிகாரி துர்கா; துர்கா பொறுப்பேற்ற பின் இப்பகுதி கிராமங்களில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து, விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டதால், உ.பி., மாநில ஆளும் கட்சியான சமாஜ்வாதி, எரிச்சலடைந்துள்ளது.”உ.பி.,யில் உள்ள, அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும், மத்திய அரசு வாபஸ் பெறலாம். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை, எங்களுக்கு தேவையில்லை. நாங்களாகவே, தனியாக அதிகாரிகளை நியமித்துக் கொள்வோம்’. மேலும் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் சமாஜ்வாதி கட்சி, மிரட்டல் விடுத்துள்ளது

உமா சங்கர் ஐ.ஏ.எஸ் முதல் துர்கா சக்தி நக்பால் வரை நேர்மையாக செயல் படும் அதிகாரிகளுக்கு பணிமாற்றங்களுல்ம், தற்கால பணி நீக்கங்களும், வழங்குகின்ற அரசுகள் இருக்கும் வரை நம் நாடு நல்லரசாகவோ, வல்லரசாகவோ ஆக முடியாது. மக்கள் விழிப்பு நிலை அடைந்தால்தான் இது போன்ற அரசியலை, அரசியல்வாதிகளை மாற்ற முடியும்.

Categories: Article, August 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: