தமிழக அரசு கேபிள் டிவியில் நடந்து வரும் அமைதி புரட்சி…!!

Friday, October 4th, 2013 @ 12:04AM

இந்த தலைப்பில் உள்ள செய்தியை பற்றி கேள்விபட்டவுடன்… அது என்ன அமைதி புரட்சி… அதுவும் ஒரு கட்சியின் பிரநிதி மக்களுக்கு செய்துள்ள சாதனை என்றெல்லாம் எண்ணத்தோன்றியது. இது குறித்த மேலும் பல விவரமான தகவல்களுக்கு நாம் சந்தித்த நபர் இந்த சாதனையின் நாயகன் திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாடு லோக் சத்தா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்….

இவர் செய்த சாதனை என்ன அதுவும் ஒரு கட்சி பொறுப்பாளர் அரசு கேபிள் டிவியில் என்ன செய்து விடப்போகிறார் அது அரசு கேபிள் டிவி தலைவர் திரு. இராதகிருஷ்ணன் அவர்களின் மாவட்டத்தில் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி நம்மை திருப்பூருக்கு திருப்பியது

இது குறித்து அவரிடமே பேசினோம்… இனி அவர்…

நீங்கள் அரசு கேபிள் இணைப்பை பெற்றுள்ளீர்களா என முதல் கேள்வி கேட்டார்…

அதற்கு நான் ஆம் என்றேன்… மாத சந்தாவாக எவ்வளவு கொடுக்கிறீர்கள் எனக்  கேட்டார்… நான் கொடுக்கும் சந்தா தொகையை கூறினேன்….   நான் மட்டும் இல்லை தமிழகத்தின் உள்ள அனைவரும் இதே தொகையைதான் கொடுக்கின்றனர் என்றேன்…

அதற்கு அவர்… எங்கள் பகுதியில் அப்படி இல்லை… அது தான் எங்கள் பகுதி மக்களுக்கு நாங்கள் செய்த பணி… அரசின் பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளோம் அவ்வளவு தான்… என அது குறித்து பேச துவங்கினார்,,,

அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சந்தா தொகையாக ரூ. 70/- என நிர்ணயித்தது…  திருப்பூர் மாவட்டத்தில்… சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று ரூ. 70/- ஐ மட்டுமே சந்தாவாக செலுத்தி வருகின்றனர்… என்றால் அதற்கு எங்களது லோக் சத்தா கட்சியின் பல முனை போராட்டங்கள் தான் காரணம்…என்று கூறிய அவர்…

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அதாவது அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கப்பட்ட உடன்….அதன் விளம்பரம் தினசரி செய்திதாளில் வந்திருந்தது.. அது ஒரு ஞாயிற்று கிழமை என்று நினைக்கின்றேன்… எங்களது பகுதி கேபிள் டிவி ஆப்ரேட்டரின் மகன் அவர் மாத சந்தா தொகையை வசூல் செய்ய வந்தார்…

அதற்கு முன்னர் தான் இந்த அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் விளம்பரம் வெளிவந்திருந்தது… நான் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு அவர் ரூ. 100/- என்றார்… என்னப்பா அரசு ரூ. 70/- என அறிவித்துள்ளதே நீ ரூ. 100/- கேட்கிறாயே அரசு விளம்பரத்தை பார்க்கவில்லையா என்றேன்…

அதற்கு அவர்… அது பற்றி கவலை இல்லை என்று கூறினார்… உடனே நான், அப்படியெனில்…அரசு அறிவித்தபடி ரூ. 70/- தான் கொடுப்பேன் என அவரிடம் தெரிவித்தேன்… பதில் ஏதும் பேசாமல் தொகையும் வாங்காமல் சென்றுவிட்டார்.. நான் அந்த பகுதியில் குடி இருப்பவர்களை ஒருங்கிணைத்து ஒரு நல சங்கத்தை நடத்தி வருகிறேன்…. அதற்கு செயலாளராகவும் உள்ளேன்…. அந்த பகுதி ஆப்ரேட்டரும் அதில் உறுப்பினராக இருப்பவர்தான்…

அடுத்தவாரம் வந்து கேட்டார் நான் இதே பதிலைத்தான் கூறினேன்…  இரண்டு நாள் கழித்து, எந்த தகவலும் சொல்லாமல் எனது இணைப்பை துண்டித்து விட்டனர்…

உடனே நான் கேபிள் தாசில்தார் அவர்களுக்கு தொடர்பு கொண்டு, எனக்கு அரசு கேபிள் இணைப்பு வேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும் என தெரிவித்தேன்…. முதலில் இணைப்பு    இருந்ததா அல்லது புது இணைப்பா எனக் கேட்டார் நான் நடந்த அனைத்தையும் அவரிடம் தெரிவித்தேன்… மாத சந்தாவாக அரசு அறிவித்த ரூ. 70/-ஐ தான் கொடுப்பேன் என்று கூறினேன் அதற்கு அவர் எனது இணைப்பை துண்டித்து விட்டார்… எனவும் கூறினேன்….

அதற்கு தாசில்தார்… நீங்கள் உடனடியாக இது சம்மந்தமாக ஒரு புகார் மனு ஒன்றை கொடுங்கள் எனவும் கூறினார் நான் அவரின் யோசனை படி புகார் மனு கொடுத்தேன்… புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்தில் எனது வீட்டிற்கு ஆள் வந்துவிட்டார் எனது கேபிள் இணைப்பையும் பொருத்தி விட்டார்…

அதற்கு ஒரு மணி நேரத்தில் கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்க மாநில துணை தலைவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு… நீங்கள் ரூ. 70/-க்கு போராடுவது என்பதை கைவிட வேண்டும் எனவும் இது எங்களுக்கு கட்டுபடியாகாது எனவும் கூறினார்.

அதற்கு நான் 30 ரூபாய் என்பது அடித்தது மக்களுக்கு ஒரு மருத்துவ செலவுக்கு ஆகும் அல்லது சாப்பாடு செலவிற்கு ஆகுமே என்று பதில் கூறினேன் ஆனால் கடைசி வரை அவர் எதற்கும் பிடி கொடுக்கவில்லை என்றார்..

அடுத்த நாள் அந்த பகுதி ஆப்ரேட்டரே வந்து என்னன்னே இப்படி பண்ணிட்டீங்க… நாம எப்படி பழகி இருக்கிறோம் என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கலாமே என்று கூறியவர்… சரி சார் அந்த லெட்டரை வாபஸ் வாங்குங்கள் என்று கோரிக்கைவைத்தார்… நான் முடியாது அது கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது என கூறினேன்… இல்லை அதை வாங்கிவிடுங்கள் எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது எனவும் கூறினார்… நான் வாபஸ் வாங்குவதில்லை என்ற முடிவில் கடைசி வரை இருந்துவிட்டேன்…

இந்த சம்பவம் நடத்து நான்கு நாட்களுக்கு பின்னர் எனது வீட்டில் டிவி தெளிவாக தெரியவில்லை…சரி அனைவருக்கும் இப்படி தான் உள்ளது என்று தெரிந்தது… பின்னர்  அனைவருக்கும் தெளிவான பின்பும் எனது வீட்டில் மட்டும் தெளிவாக படம் தெரியவில்லை…

சரி எது வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என கூறிய எங்கள் பகுதி கேபிள் ஆப்ரேட்டரிடம் படம் சரியாக தெரியவில்லை என்று கூறினேன்…

பார்த்தீர்களா நான் அப்பவே சொன்னேன் புகாரை வாபஸ் வாங்குங்கள் என்று… இப்போது என்ன செய்வீர்கள் என கேட்டார்…

நீங்கள் சொன்னீர்கள் என்றுதான் உங்களிடம் தெரிவிக்கின்றேன்… உங்களால் சரி செய்ய முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் விடுங்கள் என்று கூறி போனை வைத்துவிட்டேன்… சுமார் ஒரு மணி நேரத்தில் படத்தை சரி செய்து கொடுத்தனர்….

இதை அக்கம்பக்கத்தில் பார்த்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் இப்போது ரூ. 70/-க்கு மாறிவிட்டனர்…

இந்த செய்தி மற்ற பகுதியிலும் பரவி பல போராட்டங்களை நடத்தி இந்த நடைமுறையை பழக்கபடுத்தி வந்தோம்… இது இப்படியே அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்

திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவருக்கும், முதல்வரின் தனிப் பிரிவிற்கும் மனு எழுதி அனுப்பினோம்… அதில் மின் கட்டணம் போன்று கேபிள் கட்டணத்தையும் ஆன் லைன் முறையில் அனைவரும் ரூ, 70/- என சந்தா கட்டணத்தை கட்ட வழிசெய்ய வேண்டும் எனவும் இதனால் அரசுக்கு என்ன லாபம் கிடைக்கும் எனவும் மனு செய்தோம்…

நாங்கள் மனுவை அனுப்பிய ஒரு வாரத்தில் ரேஷன் கடைகளில் ஆப்ரேட்டர்களின் இணைப்புகளின் எண்ணிக்கையை சரிபார்க்க விண்ணப்பம் கொடுத்தனர்…

இப்போது ஆன் லைன் முறையையும் அமுல் படுத்தியுள்ளனர்… எனவும் தெரிவித்தார்

இப்போது உள்ள கேபிள் டிவி தொழில் நுட்ப முறையில் (அனலாக்) ஆன் லைன் திட்டம் சாத்தியமா… அது வெற்றியடைந்துள்ளதா என கேட்டதற்கு…

ஆன் லைன் திட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு….!! அதை தீவிரமாக அமல்படுத்தியிருந்தால் அரசுக்கு முறையான வருவாய் கிடைக்கும்… இந்த வருவாயை அதிகப்படுத்துவதை கொண்டு… மது கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை படிப்படியாக குறைக்கலாம் எனவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்….

மேலும் ஆன் லைன் முறை எளிதாக இல்லை… ஒவ்வொரு முறையும் சந்தாதாரர்கள் தங்களை பதிவு செய்ய வேண்டி நிலை உள்ளது… ஆன் முறை எளிதாக்கபடவேண்டும் கிராமப்புற மக்களும் அதை உபயோகிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்…  மேலும் ஆன் லைன் வசூலை எளிமைபடுத்த முவவர்களை நியமிக்கலாம்… எனவும் கூறிய அவர்

இந்த ரூ.70/- புரட்சியை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தவர்…

கடைசியாக அரசிடம் எங்களை ஒரு முகவராக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளோம் எனவும்கூறி முடித்தார்.

அரசின் திட்டங்கள் அனைவருக்கும் உரிய வகையில் கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்

லஞ்சம் தவிர்…. நெஞ்சம் நிமிர் என்ற தாரக மந்திரமே எங்கள் லோக் சத்தா கட்சியின் கொள்கை முழக்கம் என கூறி இந்த பேட்டியை முடித்தார்.

Categories: Uncategorized

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: