மூவர் கூட்டணி

Monday, November 18th, 2013 @ 4:19PM

பொது மக்களின் நன்கொடைகள் வைத்து நடத்தப்படும் அரசியல் கட்சிகள் ஒன்றும் தனியார் நிறுவனங்கள் அல்ல.அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் நன்கொடைகள், தங்கள் கட்சியில் இருக்கும் உட்கட்சி ஜனநாயகம் ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என முடுவு எடுத்தது மத்திய தகவல் ஆணையம்.

குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைய தடை செய்வதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை துவக்கிவைத்தது உச்சநீதிமன்றம். குற்றவாளிகளை காப்பாற்றும் அரசியல் சாசனத்தின் ஒரு பிரிவையே நீக்கியது. தேர்தல் சமயத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து, தேர்தல் இலவசங்கள் சட்டப்படி லஞ்சம் ஆகாது என்றாலும் அவற்றிற்கான அறிவிப்புகள் தடுக்கப்பட வேண்டும், அதற்கான நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும் சொன்னது.

தேர்தலில் எவருக்கும் வாக்களிக்கும் விருப்பம் இல்லை என்பதை ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும்’ கொண்டு வர வேண்டும் என்றும் அடுத்த உத்தரவு போட்டது அதே உச்சநீதிமன்றம்.

தேர்தல் இலவசங்கள் ஆகட்டும், அரசியலில் குற்றவாளிகள் ஆகட்டும், தகவல் பெறும் சட்டத்திற்கு கீழ் அரசியல் கட்சிகளை கொண்டுவருவதாகட்டும் – இவை ஒவ்வொன்றையும் மிகத் தீவிரமாக எதிர்த்து அரசியலை தொடர்ந்து சாக்கடையாகவே வைத்துக்கொள்ள மாநில, மத்திய கட்சிகள் தீவிர முனைப்பு காட்டுகிறது.

மாற்றங்கள் துவங்கின. மாநிலங்களவை உறுப்பினர் மசூத் வெளியேறினார். லாலுவும், மிஷ்ராவும் அவரைத் தொடர்ந்தனர். மத்திய அரசாங்கம் தங்களுடைய குற்றவாளி சகாக்களை காக்க அவசர சட்டம் கொண்டுவந்து, நாடகமாடி தோற்றுப்போனது.

இவை எல்லாவற்றையும் உடனுக்குடன் நடைமுறைபடுத்துவதில் தீர்க்கமாக உள்ளது தேர்தல் ஆணையம். இந்த மூவர் கூட்டணிதான் இன்று ஜனநாயகத்தை காப்பாற்றி வருகிறது.

ஆனால் உண்மையில் இதற்கான அவசியம் இல்லாமல் செய்ய வேண்டியவர்கள் ஜன்நாயகத்தின் பிரதிநிதிகள் இல்லையா? குற்றவாளி என தெரிந்த பின்னும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் இவர்களை அனுப்பியவர்கள் நாம்தானே? நம்முடைய வேலையிலோ இல்லை தொழிலிலோ நாம் நம்பும் ஒருவர் நம்மை ஏமாற்றினால் அதற்கு பின் அவரிடம் நாம் தொடர்புவைத்துகொள்வோமா? ஆனான் நாம் வியர்வை சிந்தி உழைத்து செலுத்தும் நம் வரிப் பணத்தை திருட நாமே எப்படி அவர்களை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறோம்?

இந்த மூவர் கூட்டணி செய்தது ஒரு புரட்கிகரமான தொடக்கம். இதை சரியான திசையில் எடுத்துசெல்வது நம்முடைய ‘விரல்களில்’ மட்டுமே உள்ளது.

Categories: Article, October 2013, Whistle
Tags: , , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: