வைகுந்தா ! கனிம வளம் கோவிந்தா !!

Monday, November 18th, 2013 @ 10:12PM

இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகியும்  இன்னமும் வளரும் நாடாகவே இருப்பதற்கு கனிம வளக் கொள்ளைகளும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

காரணங்களில் மிக முக்கியமானது இந்திய கனிம வள கொள்ளைகள் தான் .கிட்டத்தட்ட 69 வகை கனிமங்கள் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பரவலாக பெரும் அளவில் காணப்படுகிறது. இந்திய அரசு கனிம வளங்களை கையாள்வதில் போதிய கவனம் செலுத்தாததுவும் , கனிம வளங்களை கையாள தனியாரை நம்பியதுவும் இந்தியப் பொருளாதாரச் சரிவுக்கும் கணிமவளக் கொள்ளைகளுக்கும், காரணமாக அமைந்துவிட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கனிமக் கொள்ளைகள் நடந்துள்ளன. மதுரை வட்டாரத்தில் பி ஆர் பி நிறுவனம் அடித்த கிரனைட் கொள்ளை மற்றும் வி வி மினரல்ஸ் அடித்த தாது மணல் கொள்ளை ஆகியவை இந்தியாவையே , ஏன் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தன. இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் கனிமவளங்கள் பெரும் அளவில் கொள்ளை போய் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் கண்ணியமும் களவு போய் கொண்டு இருக்கிறது.இதற்கு காரணம் இந்தியாவை ஆட்சி செய்து வரும் அரசியல் கட்சிகளின் சுய நலமே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும். கனிம நிறுவங்களை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்களை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அரசு தவறியதுவும் கனிம வளங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கவேண்டிய மிகப்பெரிய வருமானம் சரிவர கிடைக்காமல் , தனியார்கள் கொள்ளை லாபம் அடைய அரசே காரணமாக அமைந்துவிட்டது.

தமிழகத்தில் தாது மணல்

தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில் கிடைக்கும் மணலில் விலைமதிப்பில்லா தாதுப் பொருட்களான கார்னெட்,இல்மனைட் ,ரூட்டைல் ,சிர்கான் ,மோனோசைட் ஆகியவை பெருமளவில் உள்ளது. பவளப்பாறைகள் இக்கடல்பகுதியில் அதிக அளவில் காணப்படுவதால் இப்பகுதி கடற்கரை மணலில் இத்தகைய தாதுப்பொருட்கள் காணப்படுகிறது.1900 வருடத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதியான கயிற்றில் ஒட்டிக்கொண்டு சென்ற மணலை அதன் பிரகாசிக்கும் தன்மையை பார்த்து ஹெர்ஸ் கோம்பெர்க் என்ற விஞ்ஞானி அந்த மணலில் மோனோசைட் என்ற தாது இருப்பதை கண்டுபிடித்தார். இத்தாது அணுசக்தி தயாரிக்க மூலப்பொருளாக பயன்படத்தக்கது.இல்மனைட் தாது , டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுவது. கார்னெட் , ரூட்டைல் , சிர்கான் ,போன்ற தாதுக்கள் மிகவும் பளபளப்பாகவும் , மிகவும் உறுதியான தன்மை உடையதுமாகும். எனவே இவை யாவும் மிகவும் விலை மதிப்புடையவை.

Mineral Loot

தாது பிரித்தெடுக்கும் தொழில்

இவ்வளவு விலை மதிப்புள்ள தாது பொருட்கள் இருக்கும் மணலை வாங்கி தாதுக்களை பிரித்தெடுக்க முடிவு செய்து ஜெர்மனி நாட்டு அறிஞர் ஹேர்ஸ் கோம்பெர்க் இந்தியா வந்து 1910 இல் கன்னியாகுமரி மாவட்டம் மனவாளன்குரிச்சியில் தாது பிரித்தெடுக்கும் ஆலையை இந்திய அரசு அனுமதியுடன் துவங்கினார். அணுசக்திக்கு பயன்படும் தோரியம் தாதுவும் இம்மணலில் இருப்பதால் அதை பிரித்தெடுக்க இந்திய அணுசக்தித் துறை சார்பில் 1950 இல் கேரளா மாநிலம் அலுவையில் ஒரு ஆலை துவங்கப்பட்டது.அதன் பின்னர் மனவாளன்குரிச்சி ஆலையும் 1963 முதல் இந்திய அணுசக்தி துறைக்கின் கீழ் வந்தது. இவைகளால் அரசுக்கு பெருமளவில் வருமானம் கிடைத்ததுடன் இப்பகுதி மக்களுக்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வசதிகளைத் தந்தது. அதேவேளையில் 1985இல் இருந்தே சில தனியார்கள் திருட்டுத்தனமாக இம்மணலை ஏற்றுமதி செய்து பொருளீட்ட ஆரம்பித்தார்கள்.

1998 இல் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கும்  கொள்கை முடிவை எடுத்தது. அதன் அடிப்படையில் இந்த மணலில் இருந்து தாது பிரித்தெடுக்கும் ஆலை உரிமையை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வைகுண்டராஜன் சட்டப்பூர்வமாக எடுத்து தொழிலை நடத்த ஆரம்பிக்கிறார்.

கொள்ளை நடப்பது எப்படி?

தாது மணல் எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட ஏக்கர் நிலப்பரப்பிற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டியது.ஆனால் அனுமதி பெறாத இடங்களில் எல்லாம் மணலை அள்ள வேண்டியது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவு மணலுக்குப்பதில் அதிக அளவில் மணலை அள்ளிவிட்டு குறைத்து அரசுக்கு கணக்கு காட்டவேண்டியது.தாது மணல் எடுப்பதற்கு பலதரப்பட்ட அரசு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும்.பிரித்தெடுக்கும் தாதுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் கணக்கு காட்ட வேண்டும்.மேலும் அணுசக்தி மூலப்பொருளான மோனோசிட் தாதுப்பொருளை அணுசக்தி துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும் அதை ஏற்றுமதி செய்யும் உரிமை தனியார் யாருக்கும் கிடையாது.இவ்வாறு பலவிதமான கட்டுப்பாடுகளையும் மீறி மணலை அள்ளி ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் ஈட்டி யுள்ளனர்.மேலும் தாதுப்போருளின் விலையை சந்தை விலையை விட மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக கணக்கு காட்டி வர எய்ப்பு செய்துள்ளார்கள்.அதாவது உலகச் சந்தையில் ஒரு டன் இல்மனைட் தாது ரூ.11,800, சிர்க்கான் ரூ.75000, ரூட்டைல் ரூ.80000, கார்னெட் ரூ.5600, மோனோசைட் ரூ.5 லட்சம் என்று விற்பனை செய்துவிட்டு அரசுக்கு ஒரு டன் மணல் ரூ.600 க்கு மட்டும் விற்பனை செய்ததாக கணக்கு காட்டியுள்ளனர்.

வைகுண்டராஜன் சாம்ராஜ்ஜியம்

கன்னியாகுமரி திருநெல்வேலி , தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடலோரப்பகுதியை சேர்ந்த சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் கடற்க்கரை ஓரம் உள்ள நிலப்பரப்பில் உள்ள தாது மணலில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்யும் வி வி மினரல்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன். இந்திய சுரங்கக் கழகம் இப்பகுதியில் கார்னெட் மணலை அள்ளுவதற்கு சுமார் 111 பேருக்கு குவாரி அனுமதி அளித்துள்ளது.இதில் வைகுண்டராஜனுக்கும் அவனது பிணாமிகளுக்கும் மட்டும் 96 குவாரிகள் சொந்தம்.மேலும் இல்மனைட் மணல் அள்ளுவதற்கு 44 பேருக்கு அனுமதி அளித்துள்ளது.இவை அனைத்துமே வைகுண்டராஜனுக்கு சொந்தம்..மத்திய அரசின் சுற்று சூழல் துறையின் விதிகள்,மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டுத் துறையின் விதிகள், கடலோரப்பாதுகாப்பு மற்றும் வனத்துறை ஆகியவற்றின் விதிகள், இவை எதையும் மதிக்காமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் பல லட்சம் டன் மணல் தோண்டி எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்ததில் சுமார் 96 ஆயிரம் கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பு என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.ஆனால் உண்மையில் அவர் அடைந்துள்ள லாபம் பல லட்சம் கொடிகளுக்கும் மேல் என்பதுதான் உண்மை. இவர் 2002 இல் டாடா நிறுவனம் தாது பிரித்தெடுக்கும் ஆலை துவங்குவதற்கு அப்போது இருந்த அ தி மு க அரசிடம் போட்ட ஒப்பந்தம் மற்றும் மீண்டும் 2007 இல் தி மு க அரசிடம் போட்ட ஒப்பந்தம் எதுவும் நிறைவேற்றப்பட விடாமல் டாட்டா நிறுவனத்தையே இப்பகுதிக்கு வர விடாமல் செய்து ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதற்க்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகள் மட்டும் இன்றி அனைத்து அரசியல் கட்சிகளுமே விலை போனது தான் காரணம்.

விதி மீறல்களை வெளிச்சம் காட்டிய ஆட்சியர்

இத்தகைய விதிமீறல்களையும்,வரி எய்ப்புகளையும் , சட்ட விரோத செயல்களையும் கண்டுபிடித்து,அரசுக்கு வெளிச்சம் போட்டு கட்டினார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் . உடனடியாக தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கும் விதமாக சுகன்திப்சிங் பேடி தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அனுப்பி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி பணித்துள்ளது. அதே சமயம் விதிமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நேர்மையான ஆட்சியர் ஆஷிஸ்குமார் உடனடியாக வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டார். சும்மாவா, ஜெயா தொலைகாட்சியின் ஒரு பங்குதாரரான , அம்மாவின் விசுவாசமிக்க எம் எல் ஏக்கள் பலரின் வெற்றிக்கு காரணமானவருமான வைகுண்டராஜன் மீது குற்றம் சுமத்தினால் அம்மா சும்மா இருப்பார்களா. நாடெங்கிலும் நடக்கும் எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஓன்று. இருப்பினும் மக்களுக்கு ஒவ்வெரு கொள்ளைகளும் தெரிய வருவது ஒரு நல்ல திருப்பமே. மக்கள் விழித்தெழுந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் சங்கை ஊதுகிறோம்.

– தினகரன் போஸ்

Categories: Article, October 2013, Whistle
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: