காவல்துறை சீர்திருத்தம் – உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது

Tuesday, November 12th, 2013 @ 10:34PM

குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வது அவசியம் என்றும், எப்.ஐ.ஆர் பதிவிற்கு முன் காவல்துறையினரின் விசாரணை அவசியமற்றது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது.

CourtGavelஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சதாசிவம் தலைமையிலான அமர்வு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. அமர்வின் சார்பாக பேசிய திரு. சதாசிவம், பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய குற்றங்களுக்கு கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என்றார். பிப்ரவரி 2012 உத்திரபிரதேச மாநிலத்தில் நீதிபதி தல்வீர் பந்தாரி தலைமையில் நடந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு தாய் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும், இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்திற்கு வந்த வழக்கு இது.

அதே சமயம் ஒரு வாதி பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய குற்றத்தை மறைக்கும் பட்சத்தில் விசாரணை அதிகாரி அவரை விசாரணைக்கு உட்படுத்தி, அந்த விசாரணையை ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த லோக் சத்தா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. தெ. ஜெகதீஸ்வரன்  கூறுகையில்  “லோக் சத்தா கட்சி வெகு நாட்களாக இதுபோன்ற ‘காவல்துறை சீர்த்திருத்தங்களுக்காக’ போராடி வருகிறது. இந்த சீர்திருத்தம் போல் அனைத்து குற்ற விசாரணைகளும் நிச்சயம் ‘காட்சிப் பதிவு’ (வீடியோ) செய்யப்பட வேண்டும், சுதந்திரமான அரசியலமைப்புக்கு கட்டுப்பட்ட, அரசியல் குறுக்கீடற்ற, மற்ற காவல் துறைகளிலிருந்து வேறுபாடு கொண்ட தனிப் பிரிவாக உருவாக்கப்பட்ட சுதந்திரமான குற்ற புலனாய்வு’ (Independent Crime Investigation) வேண்டும் என்றும் போராடி வருகிறது.” என்றார்.

இந்த சீர்திருத்தம் உண்மையிலேயே பயனுள்ளதாக அமைய, ‘கால நிர்ணய சேவையையும், கால தாமதத்திற்கு அபராதத்தையும் விதிக்கும் ‘சேவை பெறும் உரிமை சட்டத்தை’ தமிழகத்திலும் அமுல்படுத்த வேண்டும் என்றும் லோக் சத்தா கட்சி கோரிக்கை வைக்கிறது. சேவை பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யாத அதிகாரிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

சட்டமியற்றுவோர் செயல்படுத்த வேண்டிய சீர்திருத்தங்களை நீதித்துறை செய்வது இந்த அரசாங்கம் இயங்கும் பரிதாப நிலையை காட்டுகிறது. உச்சநீதிமன்றம் பல முறை பல வருடங்களாக வலியுறுத்திய பிறகே தமிழக அரசாங்கம் ‘காவல்துறை சீர்திருத்த மசோதாவை பெயரளவில் நிறைவேற்றியிருப்பது நினைவிருக்கலாம். அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு காவல்துறை சீர்திருத்தம் உள்ளிட்ட நிர்வாக சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என லோக் சத்தா கட்சி கோருகிறது.

Categories: Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: