வீணாகும் மக்கள் பணம்

Monday, November 11th, 2013 @ 2:39PM

மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு முறையாக உரிய நேரத்தில் கொண்டு செல்வதற்காகவும், மக்களின் உள்ளூர் பிரச்சினைகளை உரிய முறையில் விரைவாக தீர்க்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் உள்ளாட்சி அமைப்புகள். ஆனால் இப்போது பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்கள் நலத்திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் பணத்தை தங்களுக்கு ஒதுக்குவதற்கான வழிகளைக்கண்டு பிடித்து தங்களுக்கான நலத்திட்டங்களாக மாற்றிக் கொள்கின்றனர். நன்றாக இருக்கும் சாக்கடை கால்வாய்களை இடித்துவிட்டு பேருக்காக புதிதாக கட்டுவது போல் கணக்கு காட்டிவிட்டு மோசமான கால்வாய்களைப்போடுவது. சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்து விட்டு புதிதாக சாலை போட்டதாக கணக்கு காட்டுவது.

Bore Pipe

இது போன்ற வரிசையில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள நகராட்சி ஒன்றின் வார்டுகளில் நூதனமான வழியில் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. சென்னை மற்றும் புற நகர் பகுதியில் இன்று மக்களின் முக்கிய பிரச்சினை தண்ணீர். தண்ணீர் பிரச்சினை தீர்ப்பதற்காக போர் போடுவதற்கு டெண்டர் விடப்படுகிறது. சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் 300 அடி போர் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும். ஆனால் இவர்கள் போடும் போர் 150 அடி மட்டுமே. அப்படியானால் தண்ணீர் எப்படிக்கிடைக்கும்? இது குறித்து போர் போடும் தொழிலாளி ஒருவரிடம் விசாரித்த போது, அவர் கூறிய பதில் நம்மை வேதனைக்குள்ளாக்கியது. 150 அடி போர் போடுவோம், தண்ணீர் வராதுன்னு நல்லாவே தெரியும். போர் போடும் போது ஏற்படும் வெப்பத்தால் குழாயினுள் வியர்த்து  சிறிது நீர் தேங்கியிருக்கும். அதிகாரிகள் இன்ஸ்பெக்சன் நாளைக்கு வர்றேன்னு சொல்லிருவாங்க, முதல் நாள் இரவு போர் போட்ட குழாயினுள் லாரித்தண்ணிய ஊத்தி அடி குழாய் போட்டிருவாங்க. மறு நாள் அதிகாரிகள் வந்து சோதனை செய்யும் போது அடி குழாயில் தண்ணீர் வரும். போர் போட்டதற்கான கணக்கு எப்படி எழுதுறாங்கங்கிறது கடவுளுக்குத்தான் தெரியும். இதுல்ல கவுன்சிலர், சேர்மன் அதிகாரிகள் அனைவருக்கும் பங்கு உண்டு” என்றார். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் விளைவு உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. மக்கள் பணத்தை திருடும் இது போன்ற செயல்களுக்கு என்ன விளைவு ஏற்படும், மக்களே சிந்திப்பீர்.

Categories: Article, August 2013, Whistle
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: